நூலுக்குள் நுழையும் முன் நூலின் பொலிவான கட்டட அமைப்பும், நூலின் சிறப்பான எழுத்து வடிவமும் பக்கங்கள் முழுமைக்கும் செறிவாகவும் கருத்தியல் நிறைவாகவும் அமைக்கப்பட்டுள்ள, திருவள்ளுவர் 2050 - ஆண்டுகள், அடைவுகள் நூலினை நுகரத் தூண்டும் வகையில் உள்ளது என்பதை முதலில் பதிவு செய்திட வேண்டும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட இவ்வழகிய நூலை மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு 12.8.2019 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டையொட்டி வெளியிட்ட நூலாசிரியர்களின் சிறப்பான அரும்பெரும் பணிகள் மிகப்பெரும் பாராட்டுக்குரியவை. இன்னும் இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசியல் பொருளியல் இடரான சூழல் நிழவும் இக்காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவம் நூல் இடர் நீக்கும் தீர்வுக்கு; குறிப்பாகத் தமிழகத்தை இட்டுச் செல்வதாக அமைத்துள்ளது எனலாம்.
தேர்ந்த 27 தலைப்புகளை அழகுற நிரல்படுத்தி நூலின் உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றின் கீழ்துறை போன தமிழ் இலக்கியப் பேராளுமைகள், மொழி ஆய்வாளர்கள் வல்லுனர்களின் பொருள் பொதிந்த அரிய கட்டுரைகளை அடுத்தடுத்து இடம்பெறச் செய்துள்ளது ஆர்வத்துடன் தொடர்ந்து படித்திடத் தூண்டுவதாக உள்ளது.
தொல் பொதுமைச் சமூகத்திற்கு அடுத்த காலத்திற்கும், பின்னைய சித்தர் காலம் தொட்டு முகிழ்த்தெழுந்த பொதுவு டைமைக் கருத்தியல் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய தன்னுடைமை, சமூக உடைமை மற்றும் அரசர் உடைமை கொண்டதாக வள்ளுவர் காலச் சமூக நிலை இருந்திருக்கலாம். வள்ளுவம் பெரிதும் தனிமனித ஒழுக்கம், பண்புகள் பேசுவதும் சமூகத்திற்கான சில பொதுப் பண்புகள் குறித்தும் முடிவேந்தர்கள் பண்பு நலன்கள் குறித்தும் விவரித் துள்ளதைக் கட்டுரையாளர்கள் தக்க குறள்களை மேற் கோளிட்டு விரிவாக விளக்கியுள்ளது திருக்குறளின் பன்முகத் தன்மையை முறையாகப் புரிந்துகொள்ள முனைவோருக்கும் நல்ல வழிகாட்டு நூலாக இது உள்ளது.
நூலில் வள்ளுவர் பிறந்த காலம் குறித்தும் வள்ளுவர் படைத்த திருக்குறள் நூலின் பல்வேறு உரைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும் திருக்குறள் உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காலவரிசையில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதிலிருந்தும் திருவள்ளுவர், திருக்குறள் குறித்த தொன்மை வரலாற்றை அறிய முடிகின்றது.
குறிப்பாகப் பெரியார், திருக்குறள் தமிழுக்கும் தமிழனுக் கும் பெருமை சேர்க்கும் நூல் எனத் தெளிவுபடுத்தி நாடெங்கும் திருக்குறள் மாநாடுகள் நடத்தி பரப்புரைகள் மேற்கொண் டுள்ளது குறித்த கட்டுரைகள் விவரிக்கின்றன. மேலும் திருக் குறள் தமிழினத்தின் எக்காலத்துக்குமான வழிகாட்டி நூல் என்ற கருத்தை பெரியார் வலியுறுத்தி வந்துள்ளார் என்பதும் பெரியார் சில இடங்களில் திருவள்ளுவத்துடன் முரண்படும் அவர் கருத்துகளையும் இடம்பெறச் செய்ததும் போற்றுதலுக்குரியது.
மேலும் இறையியல் கோட்பாட்டைத் திருவள்ளுவர் அவர் தம் குறட்பாக்களில் முற்றிலும் புறக்கணிப்பதுடன் மானுட ஆற்றலையும். மேன்மையையும் நிறுவுகிறார் என்பதற்கான பெரியார் தந்துள்ள விளக்கவுரைகளையும் நூலில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது நூலுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதேபோன்று பொதுவுடைமைத்தத்துவங்களை ஒட்டிய தன்மையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மார்க்சியத் திற்கு முன்னோடியாக அது தொடர்பான பல்வேறு கருத்தியல் களைத் தாங்கித் திருக்குறள் திகழ்வதாகக் கட்டுரையாளர்கள் சுட்டுகின்றனர். மேலும் பார்ப்பனிய, சனாதனத்திற்கு நேர் எதிரான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “பகுத் துண்டு பல்லுயிர் ஓம்புதல்” எனச் சொல்லும் பல்வேறு குறட் பாக்களை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளனர்.
மேலும் திருக்குறள் மென்மேலும் பெரும் சிறப்புகள் பெறுவதற்கும் உலகம் முழுமைக்குமான பொது நெறிகளை அளிக்கத்தக்கது என்பதற்கும் இன்னும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதையும் வலியுறுத்திக் கட்டு ரைகள் பேசுகின்றன.
நூலின் உள்ளடக்கம் தமிழ்மொழி இலக்கியம் சார்ந்தோர் பயனுக்குக்கானது என்பது மட்டுமின்றி, பொதுவாகப் பல்துறை சார்ந்த கல்வியாளர்களும், குறிப்பாகச் சமூக அறிவியல், மானுடவியல் துறைக் கல்வியாளர்களும் விரிவாகப் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது. நூலின் பல கட்டுரைகள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளத்தக்க தலைப்புகளைத் தரத்தக்கவையாக உள்ளன.
எனவே அனைத்துத்துறை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து மக்களும் படித்து பயன்பெற வேண்டிய நூலாகும். திருக்குறள் உலக நூலாக அய்க்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்ற அளவுக்கு இந்நூல் வலியுறுத்துவதாக உள்ளது. இந்திய ஒன்றியம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் இதற் கெல்லாம் முன்னோடியாகத் திருக்குறள் தமிழ்த் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசால் அறிவிக்கப்பட வேண்டும், இந்த இலக்கை முதலில் அடைவதற்குத் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் அடைவுகள் நூல் இன்னும் பல பதிப்புகளைக் காணும் அளவுக்குத் தமிழ் மக்கள், தமிழறிந்தோர் அனைவரும் இந்நூலுக்கு வரவேற்பளிப்பர் என்பது உறுதி.
தமிழ் இலக்கியம் குறிப்பாகக் குறள் இலக்கியம் படிப்போ ருக்கு இந்நூல் ஒரு துணை நூலாக அமையத் தக்கது. எனவே எளிதாக நூலை அடிக்கடி கையாண்டு படிக்கத்தக்க வகையில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரே தொகுப்பு நூலாக இருப்பதைக் காட்டிலும் இரு தொகுப்புகளாக அமைத்திடலாம். மேலும் இவ்வளவு சிறப்புக்களைக் கொண்ட இந்நூல் 1330 குறட்பாக்களையும் அதற்கான தேர்ந்த குறு உரையையும் கொண்டிருக்கலாம். முன்பே குறிப்பிட்டதுபோல் இந்நூலை மிகவும் குறுகிய கால இடைவெளியில் வெளியிட நேர்ந்து விட்டதால் ஆங்காங்கே அச்சுப்பிழைகள், சில ஒற்றுப் பிழைகள் காணப்படுகிறது. எனவே அடுத்த பதிப்புகள் வெளிவருவதற்கு முன் முழுமையாகவும் பொறுமையாகவும் மெய்ப்புப் பார்த்து முற்றிலும் பிழையே இல்லாத வகையில் வெளியிட ஆவன செய்து நூலுக்குச் சிறப்புச் சேர்க்கலாம்.