தமிழில் தீவிர வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா. இலங்கைத் தமிழரான இவர் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றியவர். உயர் கல்விப்புலம் சார்ந்த இவர் பின்காலனியத்துவத்தில் புலமை மிக்கவர்.இவரது நூல்கள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக் கழகங்களின் வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம் மொழிகளில் மட்டுமின்றி ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், கொரியன், மலேயன், சீன மொழிகளிலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் (1) ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடைமைவாதிகள் (2) யூதர்கள், சைவர்களான கதை (3) நான் தடுப்பூசி குத்தப்போனேன் ஆகிய இவரது மூன்று நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக வெளிவந்துள்ளன. இவை குறித்த அறிமுகமே இக்கட்டுரைத் தொடர்.

முதல் நூல்:

asiavai asaththa muyantra podhuvudamaivaathigal2021-2023 ஆம் ஆண்டுகளில் காலச்சுவடு இதழில் வெளிவந்த இவரது எட்டு கட்டுரைகளின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடைமைவாதிகள்’ என்ற தலைப்பிலான கட்டுரையே இந் நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசியாவில் செயல்பட்ட மூன்று உலகப் புகழ்பெற்ற பொதுவுடைமைவாதிகளை (நூலாசிரியர் மொழியில்: திருமூர்த்திகள்) அறிமுகம் செய்கிறது. இம்மூவருள் முதலாமவர் இந்தோனேசியாவின் டேன்மலாக்கா, இரண்டாமவர், வியட்நாமின் கொச் சீ மின் (ஹோசிமின்) மூன்றாமவர் இந்தியாவின் எம்.என்.ராய். இவர்கள் மூவரும் பல்வேறு பெயர்களில் பல ஜரோப்பிய, தென் அமெரிக்க, ஆசிய ஊர்களில் நடமாடினார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு இம்மூவர் குறித்தும் பின்வரும் மதிப்பீட்டை நூலின் முன்னுரையில் நம்முன் வைத்துள்ளார்:

“இவர்களுடைய முக்கியப் பணி அன்றைய ஆண்டகை நாடுகளான ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஒல்லாந்து, அமெரிக்கர்களிடமிருந்து, தங்கள் நாடுகளை விடுதலை செய்து சோசலிச ஆட்சியை நிறுவுவதே. ஒரு தேசத்திற்காக அல்லது ஓர் இனத்திற்காக இவர்கள் போராடவில்லை. இவர்களின் போராட்டம் பரந்த பார்வை கொண்டது, உலகளாவியது. அது மட்டுமல்ல கம்யூனிச சிந்தனைக்கு அவர்கள் ஆசியக் கண்ணோட்டத்தை அளிக்க முயன்றனர். அக்காலத்தின் மாஸ்கோ தலைப்பீட (தலைமைப்பீடத்தின்) தேவையில்லாத தலையீடுகள், புவி சார் அரசியலின் காரணமாக அவர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.இவர்கள் மறுதலிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு நடந்ததைப் பார்க்கும் போது, ஒரு இந்தோனிசியா நாவலில் வரும் ஒருவரி நினைவுக்கு வருகிறது.இது புரட்சியாளர்களுக்கு சோர்வைத் தரும். ஆனாலும் தருகிறேன்: அனைத்துப் புரட்சியாளர்களும் இறுதியில் துப்பாக்கிச் சூடு படையின் முன் நிறுத்திவைக்கப்படுவார்கள்.”

இப் பொதுவான மதிப்பீட்டுடன் கூடிய அறிமுகக் கட்டுரையை அடுத்து ஏனைய கட்டுரைகளின் உள்ளடக்கம் இடம்பெற்றுள்ளது. (நூலாசிரியரின் ‘உங்களுடன் ஒரு வார்த்தை’ என்ற தலைப்பிலான முன்னுரையில் ஐந்தாவது கட்டுரைத் தலைப்பு இடம் பெற தவறி விட்டது.)

நூலின் தலைப்பைத் தாங்கிய முதல் கட்டுரை ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான பொதுவுடைமைப் புரட்சி குறித்து 2021 இல் வெளியான 864 பக்கங்கள் கொண்ட நூலை (Underground Asia: Global Revolutionaries and the Assault On the Empire) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. காவல்துறையின் குறிப்புகளில் இருந்து இந்நூலுக்கான செய்திகளை நூலாசிரியரான டிம் ஹார்பர் (Tim Harper) திரட்டி உள்ளார். முதலில் குறிப்பிட்ட மூவருடன் ஒரு கட்டம் வரை அரவிந்தரும் இணைந்திருந்ததாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்டிருந்த பணி குறித்து:

*“இவர்களுடைய வேலை அன்றைய ஏகாதிபத்தியங்களான ஆங்கில, பிரான்ஸ், ஒல்லாந்து, (டச் நாடு) அமெரிக்கர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுதலை செய்து பொதுவுடைமை ஆட்சியை அமைப்பது.ஓர் இனத்திற்காக ஒரு நாட்டிற்காக இவர்கள் போராடவில்லை. இவர்களின் போராட்டம் சர்வதேசத் தன்மை வாய்ந்தது. இவர்கள் இந்தியர் அல்லாத இந்தியர்கள். சீனரல்லாத சீனர்கள்.வியட்நாமியர் அல்லாத வியட்நாமியர். இவர்கள் தங்களை உலகப் பிரஜைகளாகப் பார்த்தார்கள்.உலகம்தான் இவர்களது அரசியல் அரங்கு.”

* “இன்றைய பின்காலனியச் சொல்லாடலில் முணுமுணுக்கப்படும் மேற்கை மாகாணத் தன்மை ஆக்குவது, ஐரோப்பிய எண்ணங்களிலிருந்து மூளையை விடுதலைப் பெறச்செய்வது பற்றி இவர்கள் அப்பவே எழுதியிருந்தார்கள். ஐரோப்பாதான் உலகம் என்பது அல்ல என்று அப்போதே சொன்னவர் ராய். கீழைத் தேசியவாதிகள் ஏங்கியது போல் காலனியத்திற்கு முற்பட்ட பொற்காலத்துக்கு இவர்கள் ஏங்கவில்லை.”

*             “இவர்கள் தங்களைத் தேசியவாதம், மதம் முதலியவற்றிலிருந்து முற்றுமாக வெட்டிக்கொள்ள விரும்பவில்லை.”

என்று இவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை செய்துள்ளது.

இரண்டாவது கட்டுரையான “அதிகாரத்திற்கு உண்மை சொல்லல்; அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்” எட்வர்ட் ஸெயித் குறித்த காய்தல் உவத்தல் இல்லாத சுருக்கமான அறிமுகக்கட்டுரை. சுருக்கமான கட்டுரை என்றாலும் நறுக்கென்று அவரது எழுத்துக்கள் குறித்த மதிப்பீட்டை வாசகன் முன் வைக்கிறார் கிழக்குலகம் அங்கு வாழும் மக்கள், கலாசாரம் பற்றிய பொய் புனைவுகளை எவ்வாறு ஐரோப்பா உருவாக்கியது, எப்படி அரசியல், பொருளாதார கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தியது, பணிபுரிய வைத்தது என்பது ஸெயித்தின் சாதனை” என்பதும் “கிழக்கின் வாழ்நிலையையும் அதன் மதங்கள் புனிதப் புத்தகங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றையும் சந்தேகத்திற்குரியவை, போலியானவை என்று மேற்கத்தியர் தமது கண்காணிப்பிற்கும் பிரதிபடுத்தலுக்கும் கொண்டுவர முயலும் போதெல்லாம் எட்வர்ட் ஸெயித் எழுதிய கிழக்கு மேற்கு கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதும் ” அவரது முடிவாக உள்ளது.

மூன்றாவது கட்டுரையான "சாத்தானின் வேலை இன்னும் ஓயவில்லை” சல்மான் ருஷ்டியைக் குறித்த அறிமுகமும் திறனாய்வும் இணைந்த கட்டுரை. “ஒரு படைப்பாளியின் வேலை பெயரற்றதைப் பெயர்ப்படுத்துவது, பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவது, பலவீனர் பக்கம் சாய்வது, விவாதங்களை ஆரம்பிப்பது, அகிலத்தை அசத்துவது உலகம் உறங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது” என்ற சாலமன் ருஷ்டியின் கவிதை வரியுடன் இக் கட்டுரை முடிவுடைகிறது. உண்மையான படைப்பாளியின் உள்ளத்தை ஊடுறுவி நிற்கும் கூர்மையான சொற்கள் இவை.

நான்காவது கட்டுரை வெர்ஜினியா வூல்ஃப் (Virginia Wolf) என்ற ஆங்கில எழுத்தாளரின் கணவரான லேனார்ட் வூல்ஃப் என்பவரைக் குறித்தது. ஆங்கில அரசின் குடிமை(சிவில்) உயர் அதிகாரியாக ஆறு ஆண்டுகள் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் பணியாற்றிய இவரின் செயல்பாடுகள், அவதானிப்புகள், படைப்புகள் குறித்த எள்ளல் தன்மையுடன் கூடிய இக்கட்டுரை சில வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி உள்ளது. சிறுபான்மையினரான தமிழர்களுக்கான கூட்டாட்சி முறையை முன் மொழிந்த ஓர் ஆங்கிலேயர் என்ற உண்மையை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது,

ஐந்தாவது கட்டுரை “எலிசபெத்துக்கு ஏங்குங்கள் எகாதிபத்திய எச்சங்களை எடைபோடுங்கள்”. 2022இல் நிகழ்ந்த இங்கிலாந்தின் எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்தை மையமாகக் கொண்டு வரலாறும் எள்ளலும் இழையோட எழுதப்பட்ட கட்டுரை இது. இராணியாரின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் கண்டு உள்ளம் உருகி நின்றோரை சற்றே சிந்திக்க வைக்கும் கட்டுரை இது.

ஆறாவது கட்டுரையான “கண்டிராசன் கதை” இலங்கையின கண்டி நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு தமிழ் நாட்டின் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டதைக் கூறுகிறது. ஆங்கில ஆவணங்களின் துணையுடன் எழுதப்பட்ட இக் கட்டுரையில் நாடு கடத்தல் என்பது ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளில் ஒன்றாக விளங்கியதையும் எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார். கண்டி மன்னன் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டது குறித்து,

“இதே சிறைச்சாலையில்தான் சிப்பாய்கள் ஆங்கிலக் கம்பனியருக்கு எதிராக 1803 இல் கொதித்து எழுந்தார்கள். சாவர்க்கர் தன்னுடைய புத்தகத்தில் 1857தான் முதல் இந்திய விடுதலைப்போர் என்று உணர்வுப் பெருக்கோடும் சரித்திர நினைவு இழப்போடும் வாதாடுகிறார். இவரின் நூலில் வேலூர் என்ற சொல்லே இல்லை” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

ஏழாவது கட்டுரை இரண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா குறித்தது. எட்டாவது கட்டுரை நான்கு தலைமுறை ஈழத்தமிழர்கள் குறித்த நாடகம் குறித்தது. மூன்றரை மணிநேரம் நிகழும் நாடகத்தின் விமர்சனமாக மட்டுமின்றி ஈழத் தமிழர்களின் துயர வரலாற்றையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. “இந்த நாடகம் தமிழர்களையும் சிங்களவர்களையும் துவித எதிர் நிலைகளாகப் பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட அடிமட்டச் சிங்களவர்களின் குரலும் கேட்கிறது” என்று அவதானித்துள்ளார் சுகிர்தராஜா.

நூலாசிரியரின் ஆழமான வாசிப்பின் வெளிப்பாடாக, சமூகப் பார்வையுடனும் பகடித் தன்மையுடனும் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய இச் சிறு நூலை (86 பக்கங்கள்) ஒரு குறுகிய தூரப் பயணத்தில் படித்து முடித்து விடலாம்தான். ஆனால் இதன் தாக்கம்? ஆன்மீகவாதிகளின் மொழியில் கூறினால் "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.”

(அடுத்த இதழில் "யூதர்கள் சைவர்களான கதை" என்ற நூலைப் பற்றி...)

ஆ.சிவசுப்பிரமணியன்