கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 366 கொலைகள் நடந்துள்ளன ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில். அந்தக் கொலைகளில் தொடர்புடைய அல்லது தொடர்புபடுத்தப்பட்ட நபர்கள் 998 பேர் சிறையில் இருக்கின்றனர். ஒரு மாணவரை, மற்ற மாணவர் ஒருவர் அமைப்பு ஒன்றில் உறுப்பினராகச் சேர அழைக்கின்றார். என்னால் முடியாது என்கிறார் அழைக்கப்பட்ட மாணவர். உடனே அந்த மாணவரை கொலை செய்கின்றனர். அந்த மாவட்டத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான அரசியல் கொலைகள் நடந்தன. இவையெல்லாம் ரகசிய புள்ளி விபரங்கள் அல்ல. அனைத்தும் செய்தித் தாள்களில் வந்தவைகள்தான். அந்த மாவட்டம் அரசியல் விழிப்புப் பெற்ற மாவட்டம் என்று போற்றப்பட்டதும் உண்டு. அதற்கும் காரணம் ஒன்று உண்டு. அங்குதான் எந்த அரசியல் நிகழ்வுக்கும் அதிக எண்ணிக்கையில் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் பங்கெடுப்பார்கள் என்ற காரணத்தால். தமிழகத்திலும் அப்படி ஒரு மாவட்டத்தில் 264 கொலைகள் நடந்துள்ளதாகவும் அந்தக் கொலைகள் அரசியல் கொலைகள் அல்ல, சாதிய வன்மத்தால் நடந்துள்ளது என ஒரு அரசியல் கட்சி தெரிவிக்கின்றது. அதையும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் இந்தச் சம்பவங்களை எப்படி விளக்குவது, எப்படிப் பார்ப்பது என்பதுதான் முக்கியமான கேள்வி.manippur violence 305மக்களாட்சியின் மூலக்கூறுகள் பல. அவற்றின் அடிப்படைகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான். அடிப்படையில் மக்களாட்சி வன்முறையைத் தூண்டும் ஒரு கருவி அல்ல. மாறாக அது சமூகத்தில் அமைதியை பக்குவத்தைக் கொண்டுவரும் கருவி. அப்படி என்றால் நாம் 75 ஆண்டுகளை மக்களாட்சியில் கழித்திருக்கின்றோம். நாம் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். மேம்பட்டு இருக்க வேண்டும் மனித உறவுகளைப் பேணுவதில். 75 ஆண்டுகால மக்களாட்சியில் மக்கள் பக்குவம் பெற்றார்களா அல்லது பக்குவத்தை இழந்தார்களா என்ற கேள்விக்கு நாம் இன்று பதில் தேட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பொதுவாக மக்களாட்சி மானுடத்தின் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வுகாணும் ஆற்றல் பெற்றது. மக்களாட்சியில் ஆளுகைக்கும் நிர்வாகத்திற்கும் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புக்கள் விவாதத்திற்கான விரிவான இடத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அறிவார்ந்த விவாதத்தை நடத்த நம் சமூகம் தயாராக இருக்கும்போது அங்கு வன்முறைக்கு வாய்ப்பேது. மக்களாட்சியில் நியாயம், நேர்மை, உண்மை என்பதெல்லாம் அடிப்படையாக இருக்கும்போது அங்கு வன்முறைக்கு இடமேது.

இன்று இருக்கும் மக்களாட்சி எண்ணிக்கை அடிப்படையில் அதிகாரத்தைப் பிடிப்பது, அதை தக்க வைக்க அந்த அதிகாரத்தையே பயன்படுத்துவது என்ற நிலையில், நம் மக்களாட்சி தேர்தலை விட்டு சிறிதும் நகரவில்லை. தேர்தலை மையப்படுத்தியதாகவே இந்த மக்களாட்சியை கட்டமைத்து விட்டனர்.

தற்போதைய தேர்தலில் அதிக கலவரங்களைச் சந்தித்த அல்லது கடுமையான அரசியல் வன்முறைகள் நடந்த மாநிலம் ஒன்றில் அதிக சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. அதிக மக்கள் தேர்தலில் வாக்குச் செலுத்தியுள்ளனர். அது ஒரு உயர்ந்த செயல்தான். அங்கு எப்படி வன்முறை நிகழ முடியும். இந்த அதிகாரம் மையப்படுத்தப்பட்டதால் தான், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தேர்தலைக் கடந்த சமூக ஜனநாயகத்தில் அதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் சமூகம் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. இதை அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும். செய்யவில்லை என்பது கசப்பான உண்மை. மேற்கூறியவைகளிலிருந்து இரண்டுவிதமான வன்முறைகளை நாம் பார்த்துள்ளோம். ஒன்று சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறை. இரண்டு அரசியல் கட்சிகள் நடத்தும் அரசியல் வன்முறை. சமூகத்திலும், அரசியலிலும் வன்முறை என்பது ஒரு கலாச்சாரமாக மாறி­விட்டது. அடுத்து ஒரு வன்முறை நடைபெறுகிறது அதை தற்போது பார்ப்போம்.

கடந்த 30 ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 30,000 போராட்டங்களை குடிமைச் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் தொடர்பில்லாமல் இந்தியாவில் நடத்தியுள்ளன. தினசரிப் பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தொகுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம். ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் வன்முறை நடைபெற்றால் அதற்கு ஒரு அரசியல் காரணம் அல்லது பின்புலம் இருக்கும். ஆனால் சாதாரண மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குப் போராடும்போது அங்கு வன்முறை நிகழ்வதில்லை. அரசியல் கட்சிகள் போராட்டங்களை கைவிட்ட காரணத்தால் மக்களே போராட வந்துவிட்டனர். மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குப் போராடும்போது அவர்கள் அமைதி வழியில்தான் போராடுகின்றனர். அந்தப் போராட்டங்களெல்லாம் அரசியல் கட்சிகள் வழிநடத்திய போராட்டங்கள் அல்ல. எனவே மக்கள் போராடும்போது அவர்களுக்குத் தெரியும் அரசாங்கத்தின் அசுர சக்தியை. ஆகையால் அவர்கள் அரசாங்கத்திடம் தங்களின் நியாயத்தை உணர்த்திடத்தான் போராடுகின்றனரே தவிர அரசாங்கத்தை எதிர்க்கவோ பலவீனப்படுத்தவோ அல்ல. ஆனால் அரசாங்க அமைப்புக்கள் அனைத்தும் மக்களின் குறைகளைக் களைவதைவிட மக்களை அடக்குவதுதான் தங்கள் வேலையாகக் கருதி செயல்படுகின்றன.

பொதுமக்களை அரசாங்கத்தை எதிர்க்கும் எதிர்சக்திகளாகவே பார்த்து, பழகிவிட்ட அரசு அதிகாரிகளுக்கு அரசாங்கத்தை வன்முறையில் ஈடுபட வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றனர் நம் அரசாங்க அதிகாரிகளும், காவல்துறையும். சமூகத்தின் நண்பனாக அரசு அதிகாரிகளும் காவல்துறையும் செயல்படும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தால் இவர்களால் போராடும் மக்களிடம் ஒரு விவாதத்தை முன்னெடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அது மட்டுமல்ல அரசாங்கம் குடிமைச் சமூக அமைப்புக்களை மக்களுடன் கலந்துரையாட பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக குடிமைச் சமூக அமைப்புக்களையே அரசாங்கத்தின் எதிரிகளாக பாவிக்கும் நிலையில் ஓர் உளவியல் கட்டமைக்கப்பட்டு விட்டது. ஒரு சுதந்திரமான மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பொதுமக்கள் தங்கள் அரசாங்க அமைப்புக்கள் மேல் நம்பிக்கை இழந்தவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். அரசும் சமூகமும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவதும், நம்பிக்கையற்றுச் செயல்படுவதும் நாட்டில் அரசாங்கத்தையும் சமூகத்தையும் சுரண்டி வாழும் ஒரு கூட்டத்திற்கு மிகவும் ஆதரவுச் சூழலை உருவாக்கியுள்ளது.

சுதந்திரம் அடைந்த நாடு எல்லோருக்குமானது. சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்று திரண்டனர். அனைத்துத் தரப்பும் போராடின. ஒன்று திரண்டு போராடி வாங்கிய சுதந்திர நாட்டில் மக்களை அரசியலுக்காக அந்த நாட்டின் மதிப்புமிக்க குடிமகன் என்ற அடையாளத்திலிருந்து சிறிய அடையாளங்களுக்குள் புகுத்தி ஒருவரையொருவர் மோதிக்கொள்ள தயார் செய்து விட்டோம். இதைச் செய்தது நம் அரசியல் கட்சிகள். மக்களின் அறியாமைதான் இந்த அரசியலுக்கு பெரும் மூலதனம். இன்று அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் பலம் பெற்றதாக மக்களுக்கு காட்டப்படுகின்றன. உண்மையில் மக்கள்தான் மக்களாட்சியில் பலம் பெற்றவர்கள், அதிகாரம் பெற்றவர்கள், இறையாண்மை பெற்றவர்கள். அதிகாரத்தில் யார் அமர்ந்திருந்தாலும் அவர்கள் பெற்ற அதிகாரம் மக்களிடமிருந்து வந்தது. அது மக்களுக்கானது. அந்த அதிகாரம் மக்களுக்காகச் செயல்படாமல் ஒரு சில குறிப்பிட்ட சமூகத்திற்காகவும், கட்சிக்காரர்களுக்காகவும், சந்தைக்காகவும் செயல்பட்டால், அது ஒரு சுரண்டல்தான், அந்த மக்களாட்சி ஒரு சுரண்டலுக்கான மக்களாட்சி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மணிப்பூரில் கலவரம், இரண்டு சமூகங்கள் போரிடுகின்றன. இரண்டு சமூகங்களுக்கும் அரசின் மேல் நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் மேலும் நம்பிக்கை இல்லை. காரணம் இருவரும் போரிடுவதற்குக் காரணமே நம் அரசியல்தானே. இங்கு ஒரு கேள்வி, இந்த இரு சமூகங்களிடமும் அமைதியை ஏற்படுத்த அரசாங்கத்தைத் தவிர வேறு அமைப்புகளே கிடையாதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்யக்கூட குடிமைச் சமூக அமைப்புக்களுக்கு தடை போடுகின்றன அரசாங்கம். சமீபத்தில் நடந்த கலவரங்களிலேயே அதிக அளவில் மக்களை புலம் பெயர வைத்த கலவரம் மணிப்பூர் கலவரம் என்பதை பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றுவரை அந்த இரண்டு சமூகத்தையும் உரையாட வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆழமான நச்சுச் சிந்தனையை வளர்த்து வைத்துவிட்டனர் அந்த இரண்டு சமூகங்களுக்கிடையில். இந்த நிகழ்வு மக்களாட்சிக்கு ஒரு அவமானம்.

இந்த நாட்டில் மக்கள் சக்தியை, அகிம்சை வழியில் திரட்டி போராடி சுதந்திரத்தைப் பெற்றனர் நம் தலைவர்கள். பதினான்கு ஆண்டுகள் கால்நடையாக இந்தியா முழுவதும் பயணித்து மக்களின் அன்பைப் பெற்று மக்களிடமிருந்து நிலமில்லா ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுக்க நிலத்தைப் பெற்றார் வினோபாபாவே. தன் அறவழிச் செயல்பாட்டின் மூலம் கொள்ளைக்காரர்களை மாற்றி சமூகத்தில் இணைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இந்தப் பணிகளையெல்லாம் மக்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்ற மாமனிதர்களால் இது சாத்தியமானது. அரசைவிட நீ பெரிய ஆளா என்று இவர்களிடம் யாரும் கேட்கவில்லை. இவர்கள் செய்த பணிகளை அரசு ஆமோதித்தது. இன்று அரசு அப்படி யாரையும், எந்த அமைப்பையும் பயன்படுத்த முனையவில்லை. அப்படியே சிலர் முயன்றாலும் அவர்களை அரசுக்கு எதிராக செயல்படுபவராக பார்க்கும் சூழலை உருவாக்கி விட்டனர்.

அது மட்டுமல்ல. வன்முறையைப் பார்த்து வாழ, சகித்துக்கொள்ள மக்களைப் பழக்கப்படுத்தி விட்டனர். இதைப்பற்றி விவாதிக்க ஊடகங்கள் தயாரில்லை. இவைபற்றி ஒரு விவாதத்தை முன்னெடுக்க பொதுக் கருத்தாளர்கள் தயாரில்லை என்பதுதான் நாம் பார்க்கும் ஒரு சோகம். அரசியல் கட்சிகளோ மக்களுக்காகப் போராடுவதை நிறுத்தி முப்பது ஆண்டுகளாக ஆகிவிட்டன. இலங்கையில் நடந்த படுகொலை தமிழர்களின் காதுகளுக்கே எட்டவில்லை. இன்றும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் காசாவில் நடக்கும் உயிரிழப்பைப் பற்றி உலகம் கவலைப்படவில்லை. காரணம் இவைகளைப் பற்றி கவலையற்று இருக்க மக்களைத் தயார் செய்து விட்டனர் நம் ஊடகங்களின் மூலம். இன்று மக்களுக்கு சந்தை மயக்க மருந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. கல்வியில் சமூகம் சார்ந்து சிந்திப்பதை முற்றிலும் அகற்றிவிட்டு பொருள் ஈட்டத் தேவையான அறிவையும் ஆற்றலையும் வளர்த்து சுக வாழ்வுக்கு வழிவகை செய்துள்ளது.

இன்று விவாதிக்கப்படுவது இந்தியா மிகப்பெரிய பொருளாதார வல்லமை பெற்ற நாடு. ஐந்தாவது இடத்திலிருக்கும் பொருளாதாரத்தை மூன்றாவது இடத்திற்குக் கொண்டுவருவது. இந்தியா உலகால் மதிக்கப்படும் நாடு. பணக்காரர்களை எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதுதான் விவாதப் பொருள். இப்படி வேகமாக பொருளாதாரம் வளர சுரண்டப்படுவது நம் இயற்கை வளங்கள். அதைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையுடன் ஓர் போரை சந்தை செய்கிறது. அதற்கு அரசு வழிவகுக்கிறது. அதைத் தட்டிக்கேட்டால் அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், அரசுக்கு எதிரானவர்கள் என்று அரசு சித்தரிக்கிறது.

சென்னையைச் சுற்றி கடந்த 20 ஆண்டுகளில் கொலையுண்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 164 என்று ஒரு புள்ளி விபரத்தை அளித்தது ஒரு நிறுவனம். அதனை ஆய்வு செய்யச் சென்றபோது எந்த இடத்திலும் இதன் பின்னணி என்று விபரம் அறிய முடியவில்லை. இந்தப் புள்ளி விபரங்களை முழுமையாக சேகரிக்க முடியாது. அந்தந்த காவல் நிலையங்களில் அல்லது நீதிமன்றத்தில்தான் இவைகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்க முடியும். இவற்றிற்கான காரணத்தை ஓர் உயர் அதிகாரி கூறும்போது “இதன் பின்னணி மண், தண்ணீர், நிலம், கல் இவைகள்தான் காரணம். இதற்குப்பின் இவைகளின் மாபியாக்கள் இருக்கின்றனர். அதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.” இவை அனைத்தும் சந்தையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையால்தான் இவர்கள் கொலையுண்டனர், அந்தக் குடும்பங்களே அந்த வழக்குகளை முன்னெடுக்கவில்லை. அரசும் அதில் கவனம் செலுத்தா வண்ணம் ஓர் அரசியல் நம் நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.

இன்றைய நிலையில் அரசியலும், அரசாங்கமும் மக்களிடமிருந்து வெகுதூரத்திற்குச் சென்று விட்டன. மக்கள் மேய்க்கப்படுகிறார்கள். அரசாங்கம் மக்களை மிரட்டுகின்றது. அரசாங்கத்திற்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். மக்களை அரசாங்கம் சுதந்திரமாக வாழ இயலாத சூழலுக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு சேவை செய்வதாக மக்கள் நலத் திட்டங்களைத் தருகின்றது அரசாங்கம். காரணம் அவர்கள் வெகுண்டெழாமல் இருப்பதற்காக.

அந்தப் பயன்களையும் தகுதியுள்ளோரால் பெற இயலவில்லை. மாறாக அந்தப் பயன்களை முடிந்தவர்கள் பிடித்துக் கொள்கின்றனர். இன்று பதவிகளும், பயன்களும் ஒரு சில சமூகக் குழுக்களால் பிடித்துக் கொள்ளப்படுகின்றன. இதன் விளைவுதான் அரசின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்ததற்கான காரணம். 75 வருடங்களாக தேர்தல்கள் நடக்கின்றன, ஆளுகை, நிர்வாகம் நடைபெறுகின்றன. திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. நாட்டில் அடிப்படை வசதிகள் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் உலகம் வியக்கும் வண்ணம் வளர்ந்துள்ளன. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மேற்கத்திய நாட்டுடன் போட்டி போடும் அளவுக்கு மேம்பட்டு விட்டன. ஆனால் இந்த அசுர வளர்ச்சி பெரும்பான்மை மக்களை கைதூக்கி விடவில்லை என்று எண்ணும்போது, நமக்கு ஒரு கேள்வி எழுகின்றது.

இந்த வளர்ச்சி யாருக்கானது? இந்த வளர்ச்சி ஏன் அனைவருக்கும் பங்கிடப்படவில்லை? பங்கீட்டு நீதி (Distributive Justice) ஏன் வழங்க முடியவில்லை? வளர்ச்சியின் பெரும் பகுதியை யார் கொண்டு சென்றது? போன்ற கேள்விகளுக்குப் பொறுப்புள்ளவர்கள் பதில் கூற வேண்டும். நாட்டில் உள்ள 142 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப்பாதுகாப்பை அரசாங்கம் தரும் விலை இல்லா உணவு தானியங்களில் வைத்திருக்கும்போது வளர்ச்சியை யாரோ கொண்டு சென்று விட்டார்கள் என்றுதான் நாம் எண்ண வேண்டியுள்ளது. மக்களாட்சியில் சமத்துவம் என்பது அடிப்படைக் கூறு. ஆனால் எல்லை­யில்லா ஏற்றத்தாழ்வு மக்களிடையே வந்துவிட்டது என்பதை அரசே ஏற்றுக்கொள்கிறது. முன்பு சமூக சமத்துவம் இல்லாமல் இருந்தது, தற்போது பொருளாதார சமத்துவமும் எல்லையில்லாத அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த இரண்டும் இல்லாமல் அரசியல் சமத்துவத்தால் எதுவும் நடைபெறப் போவது இல்லை.

அதன் விளைவாகத்தான் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடிப்படைச் செயல்பாடுகளை அரசாங்கம் உரிமைகளாக்கி மக்களுக்குத் தந்து பொதுமக்கள் அந்த உரிமைகள் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி பெற்றுக் கொள்ளலாம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது. எத்தனை ஏழைகள் நீதிமன்றத்தை நாடமுடியும். முடியாது என்பதால்தான் உள்ளாட்சியில் இந்தக் குறைகளைக் களைந்திட ஏழை மக்கள் பங்குபெற புதிய வாய்ப்புகளை கிராமப் பகுதிகளில் கிராமசபை மூலமும் நகர்ப் பகுதிகளில் பகுதி சபை மூலமும் உருவாக்கியுள்ளன நம் மத்திய, மாநில அரசாங்கங்கள். சட்டங்களும், திட்டங்களும் இன்று மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்கள். இந்த வாய்ப்புக்களை புறம் தள்ளப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும், விளிம்புநிலை மக்களும் பயன்படுத்தி தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கத் தயாராக வேண்டும். அதற்கு நம் படித்த நடுத்தர வர்க்கம் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் விளிம்புநிலை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குக் கிடைத்த பெரிய ஆயுதம் உள்ளாட்சி அரசாங்கம். அதன் மூலம் அவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மக்களாட்சி தந்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு அது. எனவே மக்களாட்சி என்ற ஆயுதத்தை உபயோகப்படுத்த சாதாரண மக்களை நாம் தயாராக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)