ஒப்பற்ற தமிழறிஞர், உணர்ச்சிப் பாவலர், ஓய்வறியா உழைப்பாளி, போராளி, சமத்துவச் சாரல், தன்னேரில்லா ஆளுமை, தமிழேந்தியை (சோ.சு. யுவராசன்) 5.5.2019-இல் இழந்தோம். அவருக்கும் எனக்குமான நட்பு ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடர்ந்தது. அவரின் அனைத்து ஆளுமைகளுக்கும் அடித்தளமாய் அமைந்த எங்களின் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி வாழ்வு பற்றிய ஒரு சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1967-1969-இல் போளூர் அரசினர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் எங்கள் சந்திப்பு; இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படித்தோம்; பயிற்சி பெற்றோம். அவர் ஓர்  தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் ஆர்வலர். “ஓர் இறைப் பேராற்றல் உண்டு” எனும் நம்பிக்கையாளர்.

நானோ கடவுள் மறுப்பாளன்; பெரியார் பற்றாளன். தமிழைக் “காட்டுமிராண்டி மொழி” எனப் பெரியார் பேசியதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன். ஒருவரை ஒருவர் எதிரிகள் போல ஓராண்டுக் காலம் நினைத்துக் கொண்டிருந் தோம். எண்ணற்ற கலந்துரையாடலுக்குப் பின் இணைந்தோம்.

தமிழ்-தமிழ்நாடு-தமிழர் நலம் பற்றிய அவரின் கருத்துகள், பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சி மிக்க கவிதைகள் பற்றி அவர் வழி அறிந்து மகிழ்ந்தேன். இன்னுயிர் நண்பராய் ஏற்றுக் கொண்டேன். அவரும், நான் வழங்கிய பெரியாரின், பகுத்தறிவாளர்களின் நூல்களைப் படித்து பெரியாரின் ஆளுமையை, தேவையை அறிந்து கொண்டு பெரியாரியலை ஏற்றுக்கொண்டார்.

அவர் எனக்கு பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி), இசையமுது, தமிழியக்கம், இரணியன் அல்லது இணையற்ற வீரன் போன்ற நூல்களை வழங்கினார். நானும் அபாயச் சங்கு, இந்திப் போர் முரசு, பேய் பூதம் பிசாசு, ஏன் நான் கிருத்துவனல்ல? (ர°ஸல்), பெண் ஏன் அடிமையானாள்? சமதர்மம் சமைப்போம் ஆகிய நூல்களை வழங்கினேன். (மேற்கண்ட நூல்கள் செங்கத்தில் நடந்த பெரியார் கூட்டத்தில் என் பள்ளி இறுதி வகுப்பு காலத்தில் (1965) வாங்கப் பெற்றவை).

அவரும் நானும் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆற்றிய செயல்கள் சிலவே. ஆனால் அவர் ஆற்றிய பணிகள் பல. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

1) “அருவி” என்னும் கையேட்டு இதழைத் தொடங்கி திங்கள் தோறும் வெளியிடுவார். ஆசிரிய மாணாக்கரின் படைப்ப hற்றலை வளர்த்தார். சிறந்த ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் (அவரே தலைப்புக் கொடுப்பார்) இலக்கியப் படைப்புகள், சிறுகதைகள், துணுக்குகள், அறிவியல் செய்தி கள் போன்றவை ‘அருவி’யில் மிளிரும். அவரின் ‘நிகழ் வும் நிழலும்’ என்ற தலைப்பில் அழகிய ஓவியத்துடன் வெளியிடப்படும் இலக்கியப் படைப்பை அனைவரும் விரும்பிப் படிப்பர் (சிந்தனையாளன் கடைசிப் பக்கக் கவிதை போல்).

2) விடுதி நிருவாகப் பொறுப்பில் மூன்று மாதங்கள் தணிக் கையாளராகப் பொறுப்பேற்று சுரண்டலற்ற நாணய மான வகையில் பணியாற்றினார். அவர் நிருவாகத்தில் நான் உணவு அமைச்சராக ஒரு மாதம் பணியாற்றி னேன். அந்த ஒரு மாதத்திற்கான சராசரி உணவுக் கட்டணம் ரூ.28 மட்டுமே. இது அந்த ஆசிரியப் பள்ளி வரலாற்றில் மிகக் குறைந்த கட்டணம். தரமான உணவு. அவர் இரவு பகலாக சுற்றித்திரிந்து தரமான உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவார். பொறுப் பாளர்களை இன்முகத்தோடும் தோழமையோடும் நடத்து வார். 400-க்கும் மேற்பட்ட அன்றைய ஆசிரிய மாண வர்கள் அவரின் ஊழலற்ற நிருவாகத் திறமையைப் பாராட்டி னர்; பின்பற்ற முடிவெடுத்தனர்.

3) கலை இலக்கிய மன்றச் செயலாளராக மீண்டும் மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். காரணம் உங்களுக்கும் புரியும். திங்கள் தோறும் இலக்கிய விழாக்கள், பட்டிமன்றம்- கவியரங்கம்-கருத்தரங்கம்-ஒட்டி வெட்டிப் பேசுதல் போன்ற பல தலைப்புகளில் நிகழ்ச்சியை நடத்துவார். அனை வரையும் பங்குகொள்ளச் செய்வார். பல்துறையில் சிறந்த ஆளுமைகளை அழைத்து பங்கேற்கச் செய்வார்.

4) திருவள்ளுவர் விழா-‘பட்டிமன்றம்’ ஏற்பாடு செய்தார்.

தலைப்பு : திருக்குறளுக்குச் சிறப்பு

1. சொல்லும் முறையாலா?

2. கருத்தாலா?

நடுவர் பொறுப்பிற்கு திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் சம்பந்தம் (கி. வீரமணியின் சகலர்) அவர்களை அழைக்கச் சென்றார். நானும் உடன் சென்றேன். தலைப்பைப் படித்த பேராசிரியர், ஆகா! இப்படி ஒரு அருமையான தலைப்பு என் சிந்தனைக்கே எட்டாத தலைப்பு. அவரை ஆரத் தழுவி மனதாரப் பாராட்டி, அவசியம் வருகிறேன் என்றார். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் இரண்டு அணிக்குத் தலைவர் பொறுப்பேற்றோம். என் அணி (கருத்தால்) வெற்றி பெற்றது. ஆனால் நடுவரின் பாராட்டு அவருக்கே குவிந்தது.

5) ‘ஆளுக்கொரு நூலகம்’ எனும் தலைப்பின் செயல் பாடாகப் பல பதிப்பகங்களிலிருந்து பலதுறை நூல்களை வரவழைத்துக் கழிவு விலையில் பலரையும் நூல்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஊட்டினார்.

புத்தகக் கட்டுகளை அன்றைய சட்டமன்ற சபாநாயகர் புலவர் கோவிந்தன் அவர்களை அழைத்து அவர் கையில் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் செய்தார். அதிக நூல்கள் வாங்கியவருக்கான பரிசை எனக்கு கொடுக்கச் செய்தார்.

இலக்கிய மன்றச் செயலாளர் யுவராசனை புலவர் பாராட்டியதை இன்றும் மறக்க முடியவில்லை.

மாவட்டம் தோறும் நூலகம் இருந்ததை, வட்டம்தோறும் இருக்க காமராசர் பாடுபட்டார். அண்ணாவோ வீதிக்கொரு நூலகம், வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என்றார். ஆனால் அதையும் விஞ்சி இலக்கிய மன்றச் செயலாளர் (தமிழேந்தி) “ஆளுக்கொரு நூலகம்” என்பதைச் செயல்படுத்திக் காட்டியுள் ளார். மனதாரப் பாராட்டுகிறேன் எனப் புகழ்ந்தார்.

6) பயிற்சிப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களுக்குச் சிறப்பான முறையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. அவ்வேற்பாடுகளையெல்லாம் தமிழேந்தியே முன்னின்று செய்தார். வரவேற்புக் கவிதை தமிழேந்தியால் எழுதப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப் பட்டது. பள்ளி முதல்வர் திரு. சேதுமாதவன் (பார்ப்பனர்) அமைச்சருக்குப் படித்தளித்தார். அமைச்சர் பள்ளி முதல்வரைப் பாராட்டினார். முதல்வர் தமிழேந்தியைப் பாராட்டினார். அப்படிப்பட்ட முத்தாய்ப்பான கவிதையை அப்போதே எழுதியவர்தான் தமிழேந்தி.

அண்ணா மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் நினைவேந்தல் நிகழ்வு - ஆண்டு விழாவில் அவர் எழுதி அரங்கேற்றிய கவிதை நாடகம் என இப்படிச் சிறப்பு மிக்க செயற்பாட்டாளராய் விளங்கினார். பயிற்சிப் பள்ளி முதல்வரால் நடத்தைச் சான்றிதழில் மிகப் பெரிய பாராட்டு தலைப் பெற்ற ஒரே ஆசிரியர் தமிழேந்தி மட்டுமே.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பித்தவர் தமிழேந்தி. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். தமிழேந்தி புகழொடு தோன்றினார். வானளாவ உயர்ந்தார். புகழ் வாழ்வு வாழ்ந்தார்.

அவரின் கட்டுக்கடங்காக் கவிதையாற்றல், களங்க மில்லா வெடிச்சிரிப்பு, ஈடில்லா உழைப்பு, சமரசமில்லாப் போராட்டம், எளிய, தூய வாழ்வு, அளவில்லா மனிதநேயம். இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தமிழேந்தி நம்மோடு இல்லையென்றாலும், தமிழகம் உள்ள மட்டும் அவர் கோட்பாடுகள் நிலைபெறும். அவர் வழி நடப்போம். அவர் எண்ணங்களைச் செயலாக்குவோம்.

Pin It