கறுப்பர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், பொது வுடைமை சோசலிச இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் போன்றே, இயக்க மரபின் வெளிப்பாடு களால் உருவானதே தலித் இலக்கியம். மக்கள் இலக் கியம் எனவும், விடுதலை இலக்கியம் எனவும், கலக இலக்கியம் எனவும் சிந்தனையாளர்கள் இவற்றை புரிதலுக்குட்படுத்துகிறார்கள். தலித் இலக்கியங்கள் அறிவாளி இலக்கியங்களாக அறியப்படாதவை. இவற்றுள் புனிதத்தை, நவரச அனுபவத்தை, தவம் போன்ற எழுத்தனுபவத்தைப் பார்க்க முடியாது. மேதைமையை வெளிப்படுத்தும் ஆளுமையை இவை உருவாக்கத் துடிப்பதில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் எதிரான செயல்பாடுடையவை. தலித் இலக்கியங்கள், ‘‘வரை யறுத்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கலகம் செய்கின்றன.

மேலாதிக்க இலக்கியச் சொல்லாடலை மறுக்கின்றன. தங்களுக்கேயான சொந்த ஆய்வுக் கருவிகளை வளர்க்கின்றன. இவை ஒருபுறம் ஒடுக்குபவரைக் காட்ட மாகக் கண்டிப்பதோடு மறுபுறம் தங்களுக்குள்ளே ஒடுக்கப்பட்ட தங்கள் நிலைமைகளைக் கூச்சமோ, அவமானமோ படாமல் பகிர்ந்து கொள்கின்றன. எதிர்த்தல், கலகம் செய்தல் என்ற தலைகீழாகப் புரட்டிப்போடும் போராட்ட வடிவங்களின் வழியாக ஒரு மாற்றுப் பண்பாட்டை எழுப்ப முயலுகின்றன. ஒடுக்குகின்ற பண்பாட்டைத் தைரியமாகக் கேலிக் குள்ளாக்குகின்றன. பெண், உழைப்பவன், பறையன், கறுப்பன் என்பதில் பெருமை கொள்கின்றன.’’1

தீண்டப்படாதோரின் விடுதலையோடு நெருங்கிய தொடர்புடைய இத்தகைய இலக்கியங்களையே ஒடுக்கப் பட்டோர் இலக்கியம் என்கிறோம். ‘‘ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் இந்தச் சமூக அமைப்பிற்கு எதிரான, கிளர்ச்சி கரமான, எதிர்மறுப்பு வாதமான, அறிவியல் அணுகு முறை சார்ந்த உணர்வால் குணாம்சப்படுத்தப் பட்டுள்ளது.’’2 சமூக ஆய்வியல் கட்டுக்கோப்புக் குள்ளிருந்து மதிப்பிடப்பட வேண்டிய இத்தகைய இலக்கிய மரபின் தோற்றுவாய் புத்தரின் காலத்திலேயே தோன்றியதாக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

சிலர், ஞானியும் கவியுமான சொக்கமேளா (கி.பி.14-ஆம் நூற்றாண்டு) இதைத் தொடங்கி வைத்ததாகத் தெரி விக்கின்றனர். சில ஆய்வாளர்கள் மகாத்மா ஜோதிராவ் ஃபுலே (1828-90) அவர்களைக் குறிப்பிடுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள் பேராசிரியர் எஸ்.எம். மாதே (1886-1957) அவர்களால் தொடங்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ‘‘இந்தக் கால கட்டங்களில் ‘தலித் இலக்கியம்’ என்ற சொல்லாட்சி இருந்ததில்லை என்று சில ஆய்வாளர்கள் கருதினாலும், ஒடுக்கப்பட்டோர் மீதான அக்கறையும் அவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் முதலில் இந்தப் படைப்பாளர்களின் எழுத்துக்களில்தான் எதிரொலித்தன. எனவே ஒடுக்கப் பட்டோர் இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகள் என்று இவர்கள் அனைவருமே அழைக்கப்படலாம்.’’3

தலித் இலக்கியத்தை எதிர்கொள்ளவும் விவாதிக்கவும் வேண்டிய சூழல்கள் ஏற்பட்ட நிலையில், அம்பேத்கர் நூற்றாண்டையட்டியே தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் அறம் போன்ற இத்தகைய கருத்தாக்கங்கள் முனைப்புக்கு வந்தன என்கிற புரிதலை இன்று நாம் எட்டியுள்ளோம். ‘‘அம்பேத்கர் நூற்றாண்டு, அதனையட்டித் தாழ்த்தப் பட்டவர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, இலக்கியத்தின் உன்னதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகள் மற்றும் உலகளாவிய எதிர்ப்பு இலக்கியங்கள் ஆகியவற்றின் அறிமுகம் என இதன் பின்னணியைப் பட்டியலிடலாம். யாரொருவருடைய தனிமுயற்சியாகவு மின்றி இந்தப் பின்னணியின் மொத்த விளைபொருளாய் தலித்தியச் சிந்தனைகள் தமிழ்ச் சூழலின் சகல தளங் களிலும் விரிந்தன.’’4

தனக்கான உறுதியான இருப்பை உருவாக்கிக் கொண்டுள்ள தலித் இலக்கியம், இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிந்து, எல்லா இந்திய மொழி களிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மராத்திய மாநிலத்தைத் தோற்றுவாயாகக் கொண்டு வெளிப்பட்டு, இன்று உலகளாவிய பரவலையும் கவனத்தையும் உண்டாக்கி யிருக்கக் கூடிய தலித் இலக்கியம், எந்தவித எதிர்ப்பு முயற்சிகளையும் உடைத்துவிடக் கூடிய வலுவை அடைந்துள்ளதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களே காரணம் என்கிறார்கள் தலித் இலக்கிய நோக்காளர்கள்.

தலித் இலக்கியத்தைத் தொடர்ந்து நோக்கிய முன்னோடி களில் ஒருவரான அர்ஜூன் டாங்ளே அவர்கள் கூறுவது இக்கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கக் கூடியதாக இருக்கிறது. ‘‘டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின், ஏறக்குறைய ஒரு தலைமுறையினரின் புரட்சிகர சிந்தனை மரபையே மாற்றியமைத்துப் புதிதாக வடிவமைத்தார். இன்று அவர்கள் தலை நிமிர்ந்து அவரை நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள். இந்தச் சமூக விழிப்புணர்வின் இலக்கிய வெளிப்பாடே தலித் இலக்கியமாகும்’’5

இன்றைக்குத் தனக்கான தனித்த அடையாளத் தோடு, தவிர்க்க முடியாத, அல்லது தவிர்க்கக் கூடாத இலக்கிய முயற்சியாக விளங்கிக்கொண்டிருக்கிறது தலித் இலக்கியம். தலித் எழுத்து முயற்சிகள், ஏராளமான தடைகளால் உருவான வரலாற்றினை உடையவை என்பதை ஆய்வாளர்கள் அறிவர். அத்தகைய எழுத்து முயற்சிகளில், தலித்துகள் தொடங்கி நடத்திய பத்திரி கைகள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றன.

‘1869 தொடங்கி 1945 வரை ஏறத்தாழ 14 பத்திரி கைகளைத் தாழ்த்தப்பட்டோர் நடத்தியுள்ளனர். சூர்யோதயம் (1869), பஞ்சமர் (1871), திராவிடப் பாண்டியன் (1885), ஆந்திரோர் மித்ரன் (1886), மகாவிகம் தூதன் (1888), பறையன் (1893), இல்லற ஒழுக்கம்(1898), பூலோக வியாசன் (1900), தமிழன் (1907), திராவிட கோகிலம் (1907), தமிழ்ப்பெண் (1916), ஆதிதிராவிடன் (கொழும்பு - 1914), தீனபந்து (1924), தமிழன் (ஜி.அப்பாதுரை - 1925), ஆதிதிராவிட மித்ரன் (1933), சமத்துவம் (1945) முதலிய பத்திரிகைகளை நடத்தி அன்றைக்குப் புதிதாக வந்த செய்தித்தாள் ஊடகத்திற்குள் உடனே புகுந்து தங்களுக்கான சொல்லாடலைக் கட்ட முயன்றுள்ள முயற்சி அப்படியன்றும் எளிதான காரியம் அல்ல. இந்தப் பத்திரிகைகளில் எழுதிய அயோத்திதாஸ் பண்டிதர்,பெரியசாமிப் புலவர், புலவர் முனிசாமி, ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரெத்தினம், முத்துவீரப்புலவர், திருமதி.கே.சொப்பனேஸ்வரி அம்மாள், ஜே.ஜே.தாஸ், ஆர்.வீரய்யன், பி.எம்.மதுரைப் பிள்ளை, பி.வெங்கடாசலம் சுப்பிரமணியம், எம்.சி. இராஜா, சுவாமி சகஜானந்தா, என்.சிவராஜ், ஜி.அப்பாத் துரையார், ஈ.என்.அய்யாக்கண்ணு புலவர், எம்.மாசிலா மணி, பங்காரு பாவலர் முதலியோர் சாதியத்தையும் பிராமணியத்தையும் மனுதர்மத்தையும், கல்ப சூத்திரத் தையும் மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளனர்’’6

இத்தகைய எழுத்து முயற்சிகளின் விளைவுகள்தான் தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் அரசியல் போன்ற கருத்தாக்கங்கள். இக்கருத்தாக்கங்கள் உள்வாங்கிக் கொண்ட சிந்தனைகளாகச் சிலவற்றை அறிதல் அவசியம். அவை:

புழக்கத்தில் இருந்த பழைய மரபுகளை அனைத்துத் தளங்களிலும் மறுத்தல், மறுதலித்தல், தலை கீழாக்குதல்.

பார்ப்பனியத்தின் அழகியல் கட்டுமானத்தையும் உன்னதத்தையும் மாயைகளையும் உடைத்தல்.

கறை படிந்துள்ள இலக்கிய வரலாற்றையும் பாரம் பரியத்தையும் இனம் கண்டு ஒதுக்கிப் புதிய எதிர் வரலாற்றைக் கட்டமைத்தல்.

குற்ற உணர்ச்சிகளுக்குப் பலியாகிக்கொண்டிருந்த ஆகக்கீழான மனநிலையிலிருந்து தலித்துகளை மீட்டுக் கொண்டு வந்து அத்தகைய நடைமுறை களை உதறித் தள்ளுதல்.

தங்களுக்கான காயங்களை ரத்தக் கவிச்சியோடும் வலியோடும் தங்களாலேயே வெளிப்படுத்த முடியும் என்பதை ஆழ உணர்ந்து வலியுறுத்தல்.

ஒடுக்கப்படுவதற்கான பொது அம்சங்களை தலித்துகளும் பெண்களும் உணர்ந்து கிளர்ந்தெழச் செய்தல்.

புனிதக்கட்டுக்குள் சிக்கிக் கொள்ளாத இலக்கியச் செயற்பாடுகளால் தவிர்க்க இயலாத எதார்த்தத்தை மீறிய புதிய வடிவத்தை உருவாக்குதல்.

பொதுவாக இன்றைய தலித் இலக்கியம் என்பது, ஆதிக்கக் கருத்தாக்கங்கள் உருவாக்கியுள்ள உயர் சமூகக் கட்டுமானங்களைச் சிதைத்து அழிக்கின்ற முயற்சியாக இருக்கிறது. ஆக்கம் என்பது ஏதேனும் ஒன்றின் அழிவின் மேலேயே நிகழும் என்ற உண்மையின் மேல் இயங்குகிறது. புனிதத்தை உடைக்கவும், மாயைகளை அவிழ்த்து அம் மணமாக்கவும், அதிலிருந்து ஓர் அதிர்வை உருவாக்கவும் அது முயலுகிறது. அதிர்வெழும் இலக்கியங்களை வைத்துப் பேசத் துணிகையில் ‘மீறலை’ அடிப்படையாகக் கொண்டு, தலித் இலக்கியம் உருவெடுக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆதிக்கச் சக்திகள் உருவாக்கி வைத்துள்ள கருத்தாக்கங்களை உடைத்து, புதிய சொல்லாடலை இத்தகைய படைப்புகள் முன் வைப்பதை இதன்வழி அறிய முடிகிறது. தன் வாழ்வு பற்றிய அருவருப்புக்கும் அவமானத்துக்கும் வேதனைக்கும் காரணமானவர்கள் மீது மூண்டெழும் கோபத்தீயின் பெருஞ்சுவாலையாக தலித் இலக்கியத்தை இப்போது நம்மால் கவனிக்க முடிகிறது. அழகிய பெரியவனின் இந்தக் கவிதையில் அந்த சுவாலையின் பெரி தெறிக்கிறது.

‘முகத்தால் கழிவதை நிறுத்து

அம்முகத்தை

ஒரு துண்டின்மேல் வைத்து

சிரிப்பை உரித்தெடுத்து விடுவேன்

நான் மாடறுக்கும் குடும்பத்திலிருந்து

வந்தவன் என்பது

உனக்குத் தெரியுமில்லையா?’’7 கேள்வியும் எதிர்ப்பும் இல்லாத வரைக்கும்தான் ஆதிக்கம் முரண்டு பிடிக்கும். கேள்வியும் எதிர்ப்பும் வீசப்படுகிறலாவகத்தில் ஆதிக்கம் கட்டவிழ்த்துக்கொண்டு ஓடும் என்பதை இக்கவிதை புரிய வைக்கிறது. ‘ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி ஆதிக்கத்தின் அடையாளத்தை வீழ்த்தும்’ என்கிற மார்க்சிய சிந்தனை இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. ‘

‘தலித்துகளுக்கு எதிராக நிறுவப்பட்ட எல்லாவற்றுக்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறொரு வழிமுறை இல்லை என்ற விழிப்புணர்வும் தலித்திலக்கியத்தின் தன்மையாக வெளிப்படுகின்றது’8. 

‘நிறுவப்பட்ட எல்லாவற்றுக்கும் எதிராக

எழுகிறது எங்கள் எழுதுகோல்கள்

கடப்பாரைகளாய்

நிகழ்காலம் பதிவுசெய்யும்

நிராகரிக்கப்பட்ட எமது குரல்கள்

இனிமையானதாகவோ இசையாகவோ இருக்க இயலாது

ஏனெனில் அது ஓசை

இடியின் பேரோசை

இடியின் மொழிக்கு இலக்கணமுண்டோ?

தெருக்கூட்டும் பாடல்கள்

துடைப்பங்கள் மலவாளிகளை

பிணமடிக்கும் கழிகளை

ஆயுதமாக ஏந்துகிறோம்

எம்மை நிராகரித்து நிறுவப்பட்ட

எல்லாவற்றுக்கும் எதிராக’’9

உலகமெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட இலக்கியத்தின் பாடும் பொருளும், பாடும் தொனியும் ‘கலகம்’ தான் என்பதை அன்பாதவனின் இக்கவிதை வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது.

‘தலித்இலக்கியத்தின் மற்றொரு கூறு தலித்து மக்களின் வாழ்க்கையை, பழக்கவழக்கங்களை, பண் பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன் மூலம் மனித நாகரிக வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பினை உரக்கக் கூவுதலாகும். இவ்வாறு எடுத்துரைப்பதற்கு நாட்டுப்புற மரபினைப் பின்பற்றுவது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுப்புற மரபுதான் ஆதிக்க மரபிற்கான எதிர் மரபினைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, தலித் இலக்கியம் நாட்டுப்புறக் கதைகளையும் சொலவடைகளையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் தொன்மங்களையும் நையாண்டி முறைகளையும் தனது எடுத்துரைப்பின் தன்மையாகக் கொண்டிருக்கிறது.’’10

தனக்கான மொழியில்தான் தனக்கான அழகியல் வெளிப்படும் என்பதை உணர்ந்து, உயிரோட்டம் மிகுந்த பேச்சு மொழியில் ‘தலித்திலக்கியம்’ பிரவகிக்கிறது. பேச்சு மொழியின் எல்லாவிதமான கூறுகளையும் உயிர்ப்புடன் பயன்படுத்த எத்தனிக்கும் தலித்திலக்கியம் அதிகாரத்துக்கு எதிரான வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறது. எழுத்து மொழியில் இருக்கக்கூடிய செயற்கைத் தனத்தையும், அதிகாரத் தொனியையும் புறந்தள்ளி விட்டுப் பேச்சு மொழியைக் கையாளும் தலித் இலக்கியம் தடுக்கப்பட்ட சொல்லாடல்களை, உச்சரிக்கக் கூசுகின்ற உயிர் வார்த்தைகளை எல்லாம் கவனத்திற்குக் கொண்டு வருகிறது. ‘கருக்கு’ நாவலில் ‘பாமா’ அவர்கள் பயன் படுத்தியிருக்கும் பேச்சு மொழியின் வலிமையையும் லாவகத்தையும் உயிர்ப்பையும் எதிர்ப்பையும் இவ் விடத்தில் சுட்டிக்காட்டுவது முக்கியமாகப்படுகிறது. சாதிக்கும் ஆதிக்கத்துக்கும் கொடுக்கக்கூடிய சவுக்கடியைப் போன்ற வார்த்தைகள், பேச்சு வழக்குகள்.

‘‘ஊர்தேசம் போம்போது வண்டிகள்ள சேந்துகூட ஒக்கார அருவருப்பு படற அளவுக்கு என்னத்துல நாங்க அசிங்கமா போனோம்? என்னமோ பெருவியாதிக்காரன பாக்குற மரில்ல நம்மள பாக்குறாக. எங்குட்டுப் போனாலும் இடிதான் வலிதான். இதுக்கு ஒரு விடிவுகாலமே வராதா? படிச்சவ படிக்காதவன்னு வித்தியாசமே இல்ல. எல்லா பெய மக்களும் சாதிவெறி புடுச்சித்தான் அலையுதுக. எது என்ன, கடவுளுக்காக சேவ செய்யப் போறோம்னு சொல்லிக்கிட்டு போற கன்னியாஸ்திரிமாரு, சாமியாருக கூட சாதி வித்தியாசம் பாக்கத்தாஞ் செய்றாக. ஏந்தா இந்த சாதில பெறந்தோம்னு கூட நெனச்சு கஸ்டப்பட்டுருக்கேன். தலித்துகன்னா மனுசப் பெறவிக இல்லையா? இவுகளுக்கு புத்தி இல்லையா? மான மரியாத ஒன்னும் இல்லியா? அவுகளுக்குன்னு அறிவு, அழகு, அந்தஸ்துன்னு எதுவுமே இல்லியா? எதுல கொறஞ்சி போனாக?’’11

என்ற ஆதிக்கத்துக்கு எதிரான கேள்வியிலும் சரி, அடுத்து வரும் தலித்துகளுக்குச் சொல்லக்கூடிய அறிவுறுத்தலிலும் சரி, தலித் மொழியின் உக்கிரமும், கலகப் பண்பும் பேச்சு மொழியின் அதாவது தலித் மொழியின் வீச்சையும் காட்டத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.

‘ஒறங்கிட்டுக் கெடக்குற நாம ஒவ்வொருத்தரும் கண்ண முழுச்சுப் பாக்கணும், இதுதான் நம்ம விதின்னு சொல்லிக்கிட்டு அடிமைத்தனத்த, அநியாயத்த உணர்வு கெட்ட ஜென்மங்களா அப்படியே ஏத்துக்காம, இந்த நெலய மாத்த துணிஞ்சு நிக்கணும். சாதிய வச்சி சல்லித்தனஞ் செய்யுற எல்லாத்தையும் நொறுக்கிப்போட்டு, மனுசனுக்கு மனுசன் என்ன ஒசந்தவன் தாழ்ந்தவன்னு செஞ்சு காட்டணும். நம்மள அமுக்கி சொகங்கண்டவன் சாமானியத்தில நம்பள உடமாட்டான். நாமதான் அவனுகள வைக்க வேண்டிய எடத்துல வச்சு எல்லாஞ் சமந்தான்னு சமுதாயத்த மாத்திக் காட்டணும்’’12

ஆதிக்கச் சக்திகளின் மனிதாபிமானமற்ற முகத்தை தோலுரித்துக் காட்டக்கூடிய எழுத்தாக தலித் எழுத்து இன்று விளங்குகிறது. தலித் இலக்கியமே இன்றைய இலக்கியம் என்கிற அளவுக்கு அதன் ஆக்கம் பிரக்ஞை பூர்வமாக திகழ்கின்றது.

தலித் இலக்கியத்தின் இத்தகைய புரிதலோடு இன்றைக்குக் கவிதையில் சுப்பையா, தலையாரி, யாழன் ஆதி, உஞ்சை ராசன், ராஜ முருகுபாண்டியன், பிரதீபா ஜெயச்சந்திரன், பாரதிவசந்தன், தலித்தமிழ்மணி, இளந் துறவி, தய்.கந்தசாமி, ம.மதிவண்ணன், என்.டி.ராஜ் குமார், தணிகைச் செல்வன், பாப்லோ அறிவுக்குயில், அன்பாதவன், ஆதவன்தீட்சண்யா, பொதியவெற்பன் எனப் பலபேர் எழுதி வருகின்றனர். கவிதையைப் போன்றே புனைகதை வெளியிலும் தலித்திலக்கியம் தன் முத்திரையை ஆழமாகப் பதித்து வருகின்றது.

கே.டானியல் - (பஞ்சமர், கானல், அடிமைகள், கோவிந்தன், தண்ணீர், போராளிகள் காத்திருக்கின்றனர் (நாவல்கள்), உலகங்கள் வெல்லப்படுகின்றன, மையக்குறி, இருளின் கதிர்கள், முருங்கையிலைக் கஞ்சி (சிறுகதைகள்); இமையம் - (கோவேறு கழுதைகள், செடல், ஆறுமுகம்); சோ.தர்மன் - (கூகை); பாமா - (கருக்கு, சங்கதி, சிசும்புக்காரன், வன்மம்); சிவகாமி - (பழையன கழிதலும், ஆனந்தாயி); அபிமானி - (நோக்காடு, பனை முனி); விழி.பா. இதயவேந்தன் - (வதைபடும் வாழ்வு, தாய்மண், நந்தனார் தெரு, சிநேகிதன்); பூமணி - (வெக்கை, பிறகு, ரீதி); க.பா.அருகன் - (சாதி பாத்தியம்); கரன்கார்க்கி - (கறுப்பு விதைகள், கறுப்பர் நகரம், அறுபடும் விலங்கு); அழகிய பெரியவன் - (தீட்டு, தகப்பன் கொடி, குறி, குறடு, திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம், சிவபாலணின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்); டி.செல்வராஜ் - (மலரும் சருகும், தோல்); முதலிய பலபேர் தலித்துகளின் வாழ்க் கையை உரைநடை இலக்கியமாகப் படைத்துள்ளனர்.

‘தலித் அரங்கியல்’ என்று எழுதிச் செயல்படும் கே.ஏ.குணசேகரன் (பலி ஆடுகள்); ரவிக்குமார்(வார்த்தை மிருகம்); ஜீவா(தீ); முகில்ராமையா (குடிசை); போன் றோரின் நாடக முயற்சிகளும்; க.பஞ்சாங்கம், ராஜ் கௌதமன், அழகரசன், அரங்க மல்லிகா போன்றோர் எழுதும் தலித்துகளின் வாழ்வியல், இலக்கியங்கள் பற்றிய கவனிப்புகள் மிகுந்த எழுத்துகளும் தலித்திலக்கியத்தின் ஆழத்தையும் வேகத்தையும் அறிய மேலும் மேலும் துரிதப் படுத்திக் கொண்டிருக்கின்றன. தலித் அல்லாதவர்களும் தலித்துகளின் வாழ்வை-உணர்வை ஆர்வத்துடன் இலக்கியமாக்கும் போக்கும் ஒருபுறம் பெருகிக் கொண் டிருப்பது தலித்திலக்கியத்தின் இருப்பையும் வளர்ச்சி யையும் உறுதிசெய்கின்றன. இன்குலாப், பழமலய், பா.செயப்பிரகாசம், மாற்கு, பாவண்ணன், தேவிபாரதி, ரமேஷ்-பிரேம், இராசேந்திரசோழன், பெருமாள்முருகன், ச.ராசநாயகம் முதலியோர் உள்ளார்ந்த ஆர்வத்துடன் தலித்திலக்கியம் எழுதி வருகின்றனர்.

இலக்கியப் படைப்பைப் போலவே நிலைநிறுத்தப் பட்டுள்ள தொன்மையான இலக்கியங்களை தலித்திய நோக்கில் விமர்சிக்க வேண்டிய தேவையும் இருப்பதால், அத்தகைய பணியைச் செய்வதும் இலக்கியப் பங்களிப்பாகக் கொள்ளத்தகும். இத்தகைய பணியில் தலித்து விமர்சகர் களாக ராஜ்கௌதமன், ரவிக்குமார், க.பஞ்சாங்கம் போன்றோரும்; தலித் அல்லாதவர்களாக அ.மார்க்ஸ், கோ.கேசவன், பொ.வேல்சாமி போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தகைய சொல்லாடல்களைப் பெருக்குவதில் பத்திரிகைகளுக்கு நிறையவே பங்குண்டு. அந்த வகையில் நிறப்பிரிகை , தலித், புதிய கோடங்கி, தலித் முரசு, பரிணாமம், தாய்மண் என்ற பத்திரிகை களும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியிடும் உயிர்நிழல், அம்மா, எக்ஸில் போன்றவைகளும் முக்கியமானவை.

முடிவுரை:

வரலாற்றுத் தளத்திற்குள் நுழைந்துகொண்டிருக்கும் தலித்திலக்கியம் பற்றி அர்ஜூன் டாங்களே கூறியதைக் கூறினால் தலித்திலக்கியம் பற்றிய ஒரு புரிதலைப் பெறமுடியும்.

‘ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்பது வெறும் இலக்கியமல்ல. ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான இயக்கத்தோடு அது தொடர்பு கொண்டுள்ளது. ஒரு புதிய சமூகத்தின், புதிய மக்களின் நம்பிக்கைகளையும் நாட்டங்களையும் அது பகராண்மைப்படுத்துகிறது. எனவே, அது ஒரு இயக்கமாகும்’

சான்றெண் விளக்கம்:

1.    தலித் பண்பாடு - ராஜ்கௌதமன் - ப-19

2.    தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் - அர்ஜூன் டாங்ளே - ப-11

3.    மேலது - பக்-11,12

4.    உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங் களும் - அ.மார்க்ஸ் - ப-424

5.    தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் - அர்ஜூன் டாங்ளே - ப-13

6.    தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் - க.பஞ்சாங்கம் - ப-21

7.    உனக்கும் எனக்குமான சொல் - அழகிய பெரியவன் - ப-147

8.    தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் - க.பஞ்சாங்கம் - ப-26

9.    தற்காலக் கவிதைகள் - அன்பாதவன் - ப-15

10.   தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் - க.பஞ்சாங்கம் - ப-26

11.   கருக்கு - பாமா - பக்-22, 23

12.   மேலது - ப-23

13.   தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் - அர்ஜூன் டாங்ளே - ப-70

Pin It