அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அவற்றின் பயன்பாடும் உலகைப் புதிய நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி யிருப்பது இன்று வெளிப்படையாகி வருகிறது. உலகமய மாதல் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையும், நடை முறையும், இயற்கையையும், அதைச் சார்ந்து வாழும் சமுதாயங்களும் புதுவகையான சோதனைகளுக்கு உள்ளாகி வருகின்றன. இயற்கையை மாசுபடுத்தும் புதிய அறிவியல் தொழில்நுட்பம் பூவுலகில் அனைத்து உயிர் களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இயற்கை வளங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் புதிய பொருளாதாரக் கொள்கை மனிதன் உள்ளடங்கிய உயிரினங்களில் வாழ்க்கையை முழுமையாகப் பாழ்படுத்தி விடுமோ என்கின்ற அச்சத்தை உருவாக்கி வருகிறது. நிலம், நீர், காற்று, விண்வெளி போன்ற இயற்கைச் சக்திகளைச் சீர்குலைக்கும் இன்றைய உலகமயமாதல் பொருளாதார உற்பத்தி முறையும், பங்கீடும் உயிரினங்களை அழிவுக்குக் கொண்டு சென்றுவிடும் என்ற அச்சத்தைப் பரவலாக்கி வருகின்றன. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதுமாகப் பரவலாகி வருகிறது.

வரலாற்று ரீதியான மனித சமுதாயத்தின் வளர்ச்சியை மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனாலும், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் வாயிலாகப் பூவுலகில் உயிரினங்களைக் காப்பாற்ற முடியும் என்ற அறிவியல் கண்ணோட்டமும், ஆய்வுகளும் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. இயற்கை வளங்களை எப்படிப் பாதுகாத்துப் புதிய அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்ற ஆய்வுகளை சோவியத் யூனியன் அறிவியலாளர்கள் சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் ஆழமாக ஆய்வுகளை நிகழ்த்திப் புதிய வழிமுறைகளையும், நடைமுறைகளையும் மனித சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

அதைப் புலப்படுத்தும் அருமையான நூல்தான் இலியா நோவிக்கின் ‘சமுதாயமும் இயற்கையும்’, சமூகவியல் குறித்தும், சுற்றுப்புறச் சூழல்கள் குறித்தும் அறிவியல் ரீதியான பார்வையை இது வழங்குகிறது. சமூக அறிவியலையும், இயற்கையின் தன்மைகளையும் உணர்ந்து தகுந்த ஆக்க ரீதியான கண்ணோட்டத்துடன் இலியா நோவிக் விளக்கிக் காட்டுவது இதனுடைய தனிச்சிறப்பு.

தனிமனிதனுக்கும் அவன் சார்ந்த புறநிலைகளுக்கும் இடையில் உள்ள உறவை முதன்மைப்படுத்தியே அவர் தன்னுடைய ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களைக் கூறி விளக்குகிறார். மார்க்ஸின் சமூக அறிவியல் கண் ணோட்டத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் இன்றைய நவீன உலகை ஆய்வு செய்கிறார். “ஒரு பொருளோடு என்னை மனித ரீதியில் இணைத்துக் கொள்வது, அந்தப் பொருள் மனிதனோடு மனித ரீதியில் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே நடைமுறையில் முடியும்” என்ற மார்க்ஸின் கருத்தை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

இலியா நோவிக் தன்னுடைய பார்வையைத் தெளிவாக இப்படி முன்வைக்கிறார்: “சமூகம் - இயற்கை” என்னும் உறவு, தத்துவ ஞானத்தின் அடிப்படையான பிரச்சினை யோடு, அதாவது அறிகின்ற, செயல்படுகின்ற அகப் பொருளுக்கும் அவனுடைய உணர்வுக்கு வெளியே இருந்து வருகின்ற புறப் பொருளோடுள்ள உறவு பற்றிய பிரச் சினையோடு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு எதிரானதாகவும், வேறுபட்ட சக்தியாகவும் இயக்க மறுப்பியல் வகையில் எதிர்நிலைப்படுத்தப்படுகின்ற இயற்கைப் புறப்பொருள், பொருள்முதல்வாத மனிதாபி மான உலகப் பார்வையில், மனித வாழ்நிலை அமைப்பில் - அதன் வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் - பிரிக்க முடியாத உறுப்பாகத் திகழ்கிறது. மகத்தான ஆற்றலைக் கொண்டிருக்கும் நவீன கால மனிதன், இயற்கையைச் சார்ந்திருந்த, அதற்குக் கீழ்ப்பட்டிருந்த பூர்வீக மனிதனைப் போலவே தனக்குத் தேவையான இயற்கையான நிலை மைகள் இல்லாமல் வாழ முடியாது.

மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ள இடைச் சார்பின் தன்மை குணரீதியாக மாறியிருக்கிறது என்பது உண்மையே. வரலாற்றின் ஆரம்பகாலக் கட்டங்களில் சக்தி வாய்ந்த இயற்கைக்கு முன்பு சார்பு நிலையில் மனிதன் பலவீனமானவனாக இருந்தான். ஆனால், இப்பொழுது, விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில் விளைவுகளோடு ஒருங்கிணைக்கப் படாத அவனுடைய தொழில்நுட்ப ஆற்றலானது இயற்கை நிகழ்வுப் போக்குகளுக்குரிய பலவீனமான இயந்திரத்தில் பழுதுபார்க்கப்பட முடியாத கோளாறுகளைச் செய்ய முடியும். மனிதனுக்கும், இயற்கைக்கும் பரஸ்பரம் ஒருங்கிணைந்த உறவு நவீன காலத்தில் காற்றைப் போலவே இன்றியமையாததாக இருக்கிறது. மனிதாபிமானக் கோட்பாடுகளின் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான நிபந்தனையாகும்.” இதுதான், ‘சமுதாயமும் இயற்கையும்’ என்ற புத்தகத்தின் சாராம்சமான பார்வையாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னிலிருந்தே அவன் சார்ந்துள்ள புறச் சூழ்நிலைமைகளைப் பார்க்கிறான். அறியாமையிலிருந்து அறிதல் நிலைக்கு வரும் வரை அவன் இந்த வகையான பார்வையையே முதன்மைப்படுத்தி வளர்கிறான். வாழ்கிறான். கல்வி நிலையங்கள் அவனை இந்த வகையான பார்வையின் அடிப்படையிலேயே வளர்க்கிறது, இது, மனிதனை அவனுடைய புறச் சூழ்நிலைமைகளோடு தொடர்புகொண்டு அவற்றின் மீது ஆளுமை செலுத்தக்கூடிய மனப்போக்கையே வளர்க்கிறது. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் உள்ள எல்லாவிதத் தொடர்பு சாதனங்களும் இந்த வகையான கண்ணோட்டத் தையே அவனுக்குக் கொடுக்கின்றன. அவனைத் தன்னிலை முதன்மை அடிப்படையிலேயே தன்னுடைய சமூக உறவுகளோடு அவனை இயங்கச் செய்கிறது. அவன் புறச் சூழ்மைகளைத் தகர்த்துத் தன்னை முதன்மைப்படுத்தும் தனிமனித ஆளுமையை வளர்த்துக்கொண்டு வளரவே அவனுக்கு வாய்ப்புக்களை நிறுவுகிறது. அதன் அடிப்படையிலேயே அவனுடைய சமுதாய, அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாடுகள் நிறுவப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதனால், அவன் தன்னுடைய புறச்சூழல்களை விரிவாகவும், ஆழமாகவும், தெளிவாகவும் பார்த்து மதிப்பீடு செய்து அதற்குத் தகுந்தபடி வாழ முடிவதில்லை. அவனுக்கும், புறச்சூழ்நிலைமைகளுக்கும் இடையில் உள்ள உறவின் இயங்கியல் நிலைமைகளைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறான். தனக்கும், தான் சார்ந்துள்ள சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவுகளை அவன் அறிவியல் ரீதியாக அணுகாமல் தன் உணர்வு நிலையிலிருந்தே அணுகும் வழக்கத்திற்கு அவன் உள்ளாகிவிடுகிறான். அவனால், சமுதாய, இயற்கை உறவுகள் சார்ந்த நிலையில் தன் இருத்தலைப் புரிந்துகொள்ள முடியாமல் அவன் தன்னைத்தானே அந்நியப்படுத்திக் கொள்கிறான். இது, முதலாளித்துவ சமுதாயத்தின் பொதுக் குணமாகத் தன்னியல்பிலேயே இருந்து வளர்ந்து வருகிறது. இந்த வகையான புரிதல் இந்தப் புத்தகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்.

இயற்கை நிலைமைகளை இன்றைய அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களால் வியக்கத் தகுந்த முறையில் மாற்றுவதற்கான திட்டங்களை இலியா நோவிக் முன் வைத்துத் தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாகவும், அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறார். மாகடல்களின் நீரோட்டங்களை மாற்றக்கூடிய, பருவநிலைகளை மாற்றக்கூடிய, பாலைவனங்களைப் பயன்படுத்தக் கூடிய அறிவியல் ரீதியான சாத்தியங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை இவர் அடையாளம் காட்டுகிறார். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி பூவுலகின் உயிர் மண்டலத்தைச் சீர்குலைத்து அழித்துவிடும் என்ற அச்சம் நிறைந்த கருத்தை இவர் வழி முறைப்படுத்தி நம்பிக்கையோடு அடையாளப்படுத்து கிறார்.

“மேற்கத்திய தொழில்நுட்பத்தை” நிராகரித்துவிட்டு “இயற்கைக்கு அடிபணியும் கீழைநாட்டு முறையை ஏற்றுக்கொள்வதில் எதிர்காலத்தைக் காண்பது மனித குலத்தில் நிலவுகின்ற பிளவை முழுமுதலாக ஆக்குவதாகும். பின்தங்கிய நிலைமையை நிரந்தரமாக்குவதாகும்” என்கிறார் இலியா நோவிக்.

கீழைநாடுகளில் ஒன்றான இந்தியா இயற்கை வளமும் மனிதவளமும் நிறைந்த நாடு. மக்கள் தன்னிறைவுடன் வாழ்வது இங்கு சாத்தியம். இயற்கையைப் பாதுகாத்து அதனோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வது வரலாற்று வளர்ச்சியை மறுக்கும் பிற்போக்கான கருத்து என்கிறார் இவர். புறச்சூழல் குறித்த அவநம்பிக்கையும், எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பிலிருந்தே உருவாவது என்று இவர் அடையாளப்படுத்துகிறார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நவீன முதலாளித்துவ நாகரிகத்தின் நெருக்கடி களின், துன்பங்களின் வெளிப்பாடு என்று குறிப்பிடுகிறார் இவர்.

முன்நாளில் வாழ்ந்த ரெனேடுபோஸ் இயற்கைபற்றிச் சொன்ன கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை இவர் நம்பிக்கையோடு இனம் காண்கிறார். ‘திருப்பு முனையில் மனிதகுலம்’ என்ற முதலாளித்துவ தத்துவவாதிகளான மெஸரோவிச் மற்றும் பெஸ்டல் இணைந்து எழுதிய புத்தகத்தின் கருத்துக்களை இவர் ஆக்க ரீதியாக விமர்சிக்கிறார்.

‘சோசலிசத்தின் கீழ், தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவான சமூக அளவில் திட்டமிட்டு ஒழுங்குபடுத்து வதும் புறச் சூழ்நிலைமையின் பண்புத் தன்மையை அபி விருத்தி செய்வதும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து இணக்க மாக, உசிதமான அளவுக்குக் கொண்டு வர முடியும். அதாவது கொடுக்கப்பட்ட ஸ்தூலமான நிலைமைகளில் மிகச் சிறப்பான உறவுக்குள் கொண்டுவரப்பட முடியும்’ என்பதை இலியா நோவிக் உறுதிப்படுத்துகிறார்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சில வகையான பொருட்களை நுகர்வதன் வாயிலாகப் புது விதமான நோய்கள் தோன்றி வருவதை இவர் குறிப்பிடு கிறார். தொடக்ககால மனிதனின் எலும்புக் கூட்டில் இரண்டு மில்லி கிராம் ஈயம் இருந்ததையும், நவீன மனிதனின் உடலில் அதைப் போல் 50 அல்லது 100 மடங்கு ஈயம் இருப்பதையும் இவர் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம் கார் வண்டிகளிலிருந்து வெளிவரும் புகையே என்பதையும் இவர் அடையாளம் காட்டுகிறார். தொழிற் சாலைக் கழிவுகள் பூவுலகை நச்சுத் தன்மை உடையதாக மாற்றி வரும் போக்கையும் தகுந்த ஆதாரங்களோடு இவர் நிறுவுகிறார்.

‘திட்டமிட்ட பொருளாதார அமைப்பையும், உற்பத்திக் கருவிகள், சாதனங்களின் பொதுவுடை மையையும், அடிப்படையாகக் கொண்ட சோசலிசம், சோவியத் மக்களின் இன்றைய தலைமுறை எதிர்காலத் தலைமுறையினருடைய உடல்நலத்துக்குக் குணப்படுத்த முடியாத தீங்கை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவிர்த்துவிடக் கூடியதே’ என்ற சோசலிச சமுதாய வாழ்க்கை முறையை வரையறை செய்கிறார் இவர். முதலாளித்துவ சமுதாய உற்பத்தி முறையின் விளைவு களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இயற்கையையும், சமூகத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை நிறுவுகிறார்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக உயிர் மண்டலம் எந்தெந்த விதங்களில் மாசுபடுத்தப் பட்டிருக்கிறது என்பதை இவர் அடையாளம் காட்டு கிறார். இயற்கையை அகில உலக அளவில் சுரண்டி அழிக்கும் நாடாகிய அமெரிக்கா உலகின் மாசுபாட்டுக்கு 40 சதம் காரணமாகிறது என்ற பிலிப் பார்ட்டின் கருத்தையும் இவர் விளக்குகிறார்.

மனிதன் - இயற்கை உறவைப் புரிந்துகொள்வதில் இருமைவாத நிலைமைகளைத் தகுந்த அடிப்படை ஆதாரங்களுடன் இவர் விளக்குகிறார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் இயற்கைபற்றித் தெரிவித்த கருத்துக் களை நினைவுகூர்ந்து நவீன மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கை விமர்சிக்கிறார் இவர். ஹெகல் போன்றவர்களின் கருத்துக்களைத் தகுந்த விளக்கங்களோடு இவர் மறுக்கிறார்.

நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உயிர் மண்டலத்தைப் பாதிக்கும் விளைவுகளை இனம் காட்டு கிறார். அதே சமயத்தில் பூவுலகின் உயிர் மண்டலத்தைச் சீரமைத்தும் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்ணோட்டத்திலிருந்தே இவர் விளக்குகிறார். இதுதான், இந்தப் புத்தகத்தில் முழுமையான அளவில் விவாதிக்கப்படுகிறது. இயற்கையை அழிவுக்குக் கொண்டுசென்று உயிர் மண்டலத்தை நெருக்கடிகளுக்கும், துன்பதுயரங்களுக்கும் உள்ளாக்கும் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தியை மாற்றிச் சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறைக்குச் செல்வதே உலகில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்குரிய முறையான வழி என்பதைத் தகுந்த அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்குவதையே இலியா நோவிக் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.

உலகமயமாதல், தாராளமயம் போன்ற உலக உறவுமுறைகளும், நடைமுறைகளும் இன்று பரவலாக அறியப்பட்டு வருகிறது. உலகெங்கும் அமைதி குலைந்து வருவதையும் காண முடிகிறது. வளரும் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டு மூலதன அமைப்புக்களின் கட்டுப்பாடில்லாத போக்குகள் மனித சமுதாயத்தையும், இயற்கையையும் அழிவுக்கு உள்ளாக்கும் என்ற அச்சத்தை வளர்த்துக்கொண்டு வருகிறது. இது, குறித்த அச்சம் சமுதாய, அரசியல், பொருளாதார, கலாசார நிலைமைகளில் தீவிரமாக வளர்ந்து வருகிறது.

சுற்றப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் இயற்கை ஆர்வலர்களின் இயக்கங்கள் உலகம் முழுவதுமாகத் தோன்றி அறிவியல், தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் நிகழும் இந்த எதிர்நிலைப் போக்கு நவீன உற்பத்திமுறையையும், அதற்குக் காரணமான உலகமயமாதல், தாராளமயப் போக்குப் பொருளாதார முறையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அனுமதிக்கும் நோக்கத்திலேயே இலியா நோவிக் இந்தப் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். சமூகம் - இயற்கை தொடர்பான புதிய சிக்கல்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு மனித வரலாற்றை முன்னெடுத்துச் செல்லுவதற்கான வழிமுறைகளை இவர் அடையாளம் காட்டுகிறார். உலகம் முழுவதுமாக வாழ்ந்துவரும் மனிதர்களின் சுற்றுப்புறச் சூழல் குறித்த அச்சத்தைப் போக்கக்கூடிய ஒரு வழிகாட்டியாக இந்தப் புத்தகம் வடிவம் பெற்றிருக்கிறது. ஆழமான, நிதானமான, கூர்மையான வாசிப்பின் வாயிலாக இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு புதிய உலகின் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் புதிய வழிமுறைகளை அடையாளம் காணலாம்.

சமூகமும் - இயற்கையும்

சமூகவியல் - புறச்சூழல் பிரச்சினைகள்

ஆசிரியர் : இலியாநோவிக்

தமிழில் : நா.தர்மராஜன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ. 135.00

Pin It