1.

எல்லாக்கோடுகளும் வளைந்தே செல்லும் ஓவியங்களது

எல்லா பருவங்களையும் ஒன்றாக பாவித்த

அச்செடி

உலகம் அழிவதற்கு முந்தைய யிரவில்

பூத்துக் குலுங்கியது.

எல்லோரும் பார்த்து மகிழ்ந்த அவ்விரவு

உலகம் அழிவதற்கு முந்தைய யிரவைப் போலவேயில்லை

நம்புங்கள்

அந்த உலகம் அழிந்துவிட்டது

அந்த யிரவும்

2.

பல நூற்றாண்டுகளைக் கடந்த அப்பாறையில்

பறவைகள் பறவைகளை பிரசவிக்கின்றன

விலங்குகள் விலங்குகளை பிரசவிக்கின்றன

மனிதர்கள் சில மனிதர்களை பிரசவிக்கின்றனர்

எல்லோரும எல்லாரும் நடந்து சென்ற அப்பாறை

தட்டையான வொரு கோடாகி விட்டிருந்தது

3.

நிராகரிப்புகளை அளந்து கொண்டிருந்தால்

புறக்கணிப்பின் வலிகளை யுருவாக்கியவர்களை

சபித்தே வொரு பருவத்தை முடித்தாள்

தன்னியல்பை சரி செய்த அவள்

யின்னும் சில தினங்களுக்குப் பிறகு வரும்

நிராகரிப்புகளை

தன் விருப்பம் போல் பயன்படுத்தும் யுக்திகளுடன்

எல்லாயிடங்களுக்கும் சென்று திரும்புகிறாள்

4.

எல்லாக் கோடுகளும் வளைந்தே செல்லும் ஓவியங்களது

சரிந்திருந்த அக்கருப்பு நிற மனிதர்களின் சட்டைப்பைகளில்

சிறிது சில்லறைகளும் சில சிகரெட்களும்

மேலும் சில சுதந்திரங்களுமிருந்தன

அவைகளை உபயோகிக்க முடியாத அவர்கள்

எப்போதும் ஓவியங்களாகவே யிருக்கிறார்கள்

அவ் ஓவியனும்

 

5.

நான் காகமாகயிருந்த போது

எல்லையற்ற வானமிருந்தது

விரும்பிய இடங்களிலெல்லாம் கிளைகளிலிருந்தன

மேலும்

ஒரு கவிஞனிருந்தான்

சில நேரங்களில் தானியங்களிறைக்க

எப்பொழுதும் என்னை பாடிக்கொண்டிருக்க

6.

துரோகங்களில் கைவிடப்பட்ட நம் பறவைகள்

இப் பிரபஞ்சத்திலிருப்பதில்லை

அவைகளற்ற பிரபஞ்சம்

நம் பிரபஞ்சம் போலவே இருப்பதில்லை

ஒரு போதும்

7.

விழு

கிழக்கின் ஆலமரயிலைகளில் பரவும்

சூரியன் நீதான்

எழு

மேற்கின் சமவெளியில் விழுந்த

அவ்வாலமரயிலைகளிலொன்றும்

நீதான்

8.

இரவிலொரு வானைக் கிழித்தோம்

அலைகளின்றியிருந்த

யின்னும் பெய்திடாத மழைத்துளிகளின்

சேகரங்களிலிருந்து

விழுந்த ஒற்றைத் துளி

யின்னும் விழுந்து கொண்டே இருக்கிறது

அவ்வானுக்கு மிகக் கீழே

நம் பூமிக்கு மிக மேலே

Pin It