என் பற்களுக்கிடையே

பர்ஃகரின் சாஸ் வழிகிறது

வேண்டாம் நீ குதிரைக்கு அருகில் போகாதே

உனது தந்தையின் திராட்சைத் தோட்டத்தில்

நானொரு வேலைக்காரன்

உனது இரவு சவாரி

என் முதுகெலும்பை உடைத்துப் போட்டது

நீ அனுப்பிய பாலாடைக் கட்டியும்

பார்பாரியன் லஸ்ட் புத்தகமும்

எனக்குள் கரைந்துவிட்டன

எனினும் வருகின்ற கோடைகாலம் வரைக்கும்

கூட நீ என்னை அனுமதிக்கப் போவதில்லை

ஒழிந்து போ

என் தனிமைக்கு கால்பந்து மைதானம்

அதன் பனியீரம்

யூரோக்களை வீணடிப்பவளுக்கு

என் சிறிய பண்ணை வீடு பிடிக்காது

அங்கே நீ விட்டுச் சென்ற மலைப்பாம்பு

ஒரு சிறிய பறவையையும் விட்டு வைப்பதில்லை

நாளை எனது நண்பர்களுடன்

நிலவொளியில் உறங்கும் நாள்

நீ வரமுடியாது தவளைக் குட்டி

உனது விடுமுறை நாள்

எனது பர்ஃகரில் வழிகிறது.

என் ஈரம் காயவில்லை

ரிம்பாவின் பிரசங்கம்

ஒளவனின் வளையங்கள்

பைஸின் அணக்கம் கொண்ட குரல்

டாலி உன் காகத்தைத் துரத்து

அல்லது கூண்டுக்குள் வை

ஜோஸ் எனது அன்பளிப்பாக போய்விட்டான்

சென்ற குளிர்பருவத்தில்

அவனது வீட்டருகே

ஜெல்லி மீன்கள் நீந்தும் குளத்தில்

எனது பூனையை வருடியும் நீவியும்

தனது இசையை ஆழ்ந்த முத்தத்தில் மீட்டினான்

எனக்கு வெட்கமேயில்லை

அவித்த முட்டைகளை நிறையத் தின்பதாக

அம்மா வைகிறாள்

எனக்கும் முட்டையிட வேண்டும் போல்

இருக்கிறது

சிரிக்காதே

இந்தக் காகங்களோடு போரடிக்கிறது

எனது குளியலின் போது

அருவி மோதும் சிலிர்ப்புடன்

ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் பாடலை

யார் கேட்கிறார்கள்

ஆயினும் ஓளவனை நேசிக்கிறேன்

அவன் நிலவையும், மீன்களையும் வைத்து

அதிகக் கதைகள் சொல்கிறான்

அவயத்தில் அவன் செய்யும் பிரசங்கம் தான்

காய்ச்சல் நாளில் கிடைக்கும்

பென்சில் ரொட்டியைப் போல்

தொண்டையை வரற்றுகிறது

மற்றபடி பூனைகளின் மத்தியில்

அவன் ஒரு இனிமையான முட்டாள்.

 

நகங்களைக் கடிக்கும்

கெட்ட பெண்களின் மார்க்கச்சைகளை

தாழ்வாரத்தில் கொண்டு வந்து

போட்டு விடுவதாக கிண்ணிக் கோழிகளை

ஏசுகிறாள் அம்மம்மா

அறையில் தொங்கும் அவயங்களின்

புகைப்படத் துளைப்பு தாங்காமல் போன

ருக்கியை சமாதானப்படுத்த

இந்த கய்னோக்கன் பின்கள் போதாது

எனது பகுதிநேர சம்பளத்தில்

இரவுகள் குறைந்து வருகின்றன

ருக்கி கின்னஸ் சாதனைக்காக

பின்புறம் பயணிப்பவன்

அவனது காலை ஒரு ஒடு பாதையில்

சென்று நீச்சல் குளத்தில் முடியும்போது

அங்கே பெர்ச் மரத்தடியில்

ஒரு பூனையைப் பிடிக்க அலையும்

யுவதியைப் பார்ப்பான்

அவள் ஒருமுறை பழங்கள்

உலர்த்தும் பரணின் மேல்

என்னை ஏற்றியிருக்கிறாள்

இந்த அதிகாலை நகரம்

பனிமூடி அறிவிக்கிறது

ரிச்சி ஒரு காலை புணர்ச்சிக்காரன்

 உனக்கான பகைமை

வயதான பழைய மரத்திடம்

உனது பெயரை ஞாபகப்படுத்தாதே

அது தனது புதிய தளிர்களுக்கு

பெயரின்றி சிடுசிடுக்கின்றது

கடும் புலிகள் தின்று விட்டிருக்கும்

எருமையின் எலும்புக் கூடு

ஒரு இலைப்பூச்சியை

அரித்துவிட்டுப் போன எறும்புகள்

இப்படித்தான் விசுவாசமற்ற வைகளிடமிருந்து

துவங்குகிறது உனக்கான பகைமை

விசுவாசம் கண்ணீர் எனில்

காமம் ஒரு வெட்டுக்கத்தி

காதல் நம்பகம் எனில்

வேட்கை துரோகம்

மற்றபடி உனது ஆடையைத் துழாவுவது

உன் இறந்த காலக் குற்றங்கள்தான்

அப்படித்தான் உனது கல்லறையை
Pin It