நிச்சயங்களுடனான நீர்த்திவலைகளின் ஓவியங்களடங்கிய சற்று நீண்ட வெளி.

வாழ்வின் பெரும் வியப்பூட்டும், அயர்ச்சியூட்டும் சோதனைகளின் நெருடல்களாலான சூழ்நிலைகளுக்கு பிந்தைய நிலைகளின் பல மையங்களிலிருந்துதான் படைப்புகளும், அர்ப்பணிப்புகளின் விவாதங்களும், குவிமையமும் தோன்றுகின்றன என்பதாகவே தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நவீன கவிதை சார்ந்து சொல்லத் தோன்றுகிறது. அப்படைப்புகளின் ஓளியில் விரியும், சிக்கல்களும், புதிர்த் தன்மைகளுமான வரைபடங்களின் விளக்கங்களும், அனுபவங்களும் அப்படைப்பாளி உருவாக்க முயன்ற சோதனை களினடிப்படையிலான வரைபடங்களின் வீரியமும் சற்று ஒத்திருந்தாலும் அப்படைப்பாளி அப்படைப்பில் உணரும் வேறுபாடுகளுமிருக்கின்றன.

வாசகன் அடைந்து கொண்டிருக்கும், அடைய முயலும் அவ்வரைபட நுட்பங்களின் புரிதல்களும், உணர்தல்களும் சில சமயம் படைப்பாளியை விடவும் அதிகமானதாக அல்லது வெறுமனே உணர்ந்திட முடிந்திடாத சிறு குழப்பமாகவும் விரிந்து நிற்கின்றன. நவீன கவிதை வெளியின் பழக்கங்களுக்கிடையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதென்பது எல்லா வகையிலும் அவற்றை வாசிப்பதன் அடிப்படையிலே அமைகிறது மட்டுமல்லாமல் வெறுமனே இது பிறவி சார்ந்தது / தெய்வசக்தி சார்ந்த / அகஸ்மாத்தாக நிகழக்கூடியது அல்ல. இதிலிருந்து உருவாகும் புரியாமைக் கேள்விகளும், உணர்தலற்ற தனங்களும் வாசிப்பின் தொடர் முயற்சியில் விடுவிக்கப்படக் கூடியவையே. மேலும் வெறும் அருஞ்சொற்பொருள் தளத்தில் அதன் எல்லா வியாக்கியானங்களையும் நிகழ்த்துகிறவர்களுக்கும், நிறுவுவர்களுக்கும் இது சாத்தியமே ஆகாது.

மேலும் மேலும் அவர்களுக்கு இது குழப்பங்களையேத் தோற்றுவிக்கும். உணர்ச்சியின் விழுமியங்களும், அறிவு சார்ந்த நிகழ்வுகளுமடங்கிய, புலனொன்றின் மூலம் மிகச்சரியாக உணர முடிந்திடாததாகவிருக்கும் நவீன கவிதைகளின் இயங்குநிலை சற்றே சுதந்திரமான, தீர்க்கமான இறுக்கமான இயங்குநிலையைக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லத்தோன்றுகிறது. தொடர் வாசிப்பின் முயற்சியில்லாத நபர்கள் வெறும் கூச்சலுடனும், பம்மாத்துடனும் இவற்றை ஒதுக்குகிறார்கள். அவர்களுக்காக நவீனக் கவிதைகள் எந்தவித கவலையும் கொள்வதில்லை. வெறும் உணர்ச்சி நிலைகளும் / அறிவுத் தளங்களும் மட்டுமே கொண்டியங்கும் கவிதை மாதிரியின் தோல்விகளும் / வெற்றிகளும் அதனுள்ளிருப்பதை தேர்ந்த வாசகன் உணர்ந்துவிடமுடியும்தான். நவீன கவிதைகள் தொடக்கம் முதலே தனது பன்முகத்தன்மையையும், நேர்த்தியான சுதந்திர நுண் கருத்தாக்கங்களையும் சோதனைகளின் வழியே பரப்பி இன்று வரை நிலைத்து வந்திருக்கின்றன. இதைத்தான் எழுத்து, கணையாழி, மீட்சி, கல்குதிரை, புது எழுத்து, அன்னம், அகரம் போன்ற வணிகம் சாராத இதழ்களும், பதிப்பகங்களும் தொடர்ச்சியாக மாறி மாறி செய்து வருகின்றன. இவைகளுக்கெனயிருந்த அல்லது இவைகளால் அடையாளம் காட்டப்பட்ட படைப்பாளர்களின் வரிசையும் தமிழ்சூழலில் நிறைய்ய இருக்கிறது.

1.     பிறிதொன்றில் இல்லாத தெளிந்த வேறுபாடு

2.     காட்சிப்படுத்துதலில் நிற்கும் நுட்பமான ஓவிய மனோபாவம்.

3.     சூழலுக்கு ஏற்ற இசைச்சொற்களின் சேர்ப்பு / பிரிப்பு

4.     ஒழுங்கும், இறுக்கமும், அமைதியுமான மூர்க்கமான வடிவவெளி

5.     இருத்தலியலின் அழகியலும், சுதந்திர தர்க்கமும் இவைகள்தான் நவீன கவிதைகளை சற்றே ஒருங்கிணைக்கும் புள்ளிகளெனத் தோன்றுகிறது. ஒரு வரிசையில், அளவுகோலின் அடிப்படையிலான இவை நாள்தோறும் மாறக்கூடியதாக யிருந்தாலும் வெகு சிலரால் குறிக்கப்படலாம்.

நவீன தமிழ்க் கவிதையின் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதல்களுக்கும் அக்கவிதைகளிலியங்கும் எதிர்த்தன்மை, செவ்வியலின் வடிவ விதிகளை நவீனத்தில் புனைவென அல்லது நிகழ்வென இணைத்தல் ஆகியவை - குறிப்புகளிலுணர்த்தும் வகைகளின் நேசங்களுக்கும், சூட்சமங்களும், இறுக்கமுமான புதிர்வெளியின் வெளிப்பாட்டு முறைகளுக்கும் காரணமாகத் திகழ்ந்தவர் சி. மணி. அந்நியத் தன்மையுடனே எல்லா அறிவார்ந்த நிகழ்வுகளிலும் இயங்கிவந்த சி. மணிக்கு பிரக்ஞைபூர்வமான வடிவ நுட்பங்களின் இணைவுகளுக்குத் தகுந்தார்போல பல பெயர்களில் எழுதி வந்திருக்கிறார்.

அந்தந்த மனநிலைகளின் வாசிப்பு மற்றும் புரிதலின் மனநிலையில்தான் ஓர்மைத் தன்மையான சிந்தனை களினடிப்படையிலும், உளவியல் காரணங்களினடிப்படையிலுமே தன் படைப்புகளை படைக்க முற்பட்டிருக்கிறார். வாசிப்பின் படி நிலைகளும், அவற்றைப் பயன்படுத்தும் உத்திகளும் ஆங்கிலப் பேராசிரியரான சி. மணிக்கு வெகு முன்பே - வாசிப்பின் வழி - கிடைத்திருக்கின்ற வாய்ப்புமிருக்கிறது. சொற்களின் புராதனங்களையும், அவற்றின் அழகுணர்ச்சிகளையும் எப்போதும் தேடிச் செல்பவராகவும், அவற்றை நவீனத்துவத்தில் மிகச்சரியாக இணைத்தலும், அவற்றின் எதிர்த்தன்மையின் விளைவுகளை அக்கவிதைகளிலேயே நிகழ்த்திக் காட்டியிருப்பதுமே சி. மணியின் வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது.

அவர் தொடர்ந்து வாசிக்க முற்பட்ட இலக்கணங்களும், சங்க கால இலக்கியங்களும், அறிவியல் நாட்களும், உளவியல் தத்துவங்களும், அரசியல் கோட்பாடுகளும் அவரை திரும்பத் திரும்ப வேறு வேறாக மாற்றிப்போட்டிருக்கின்றன. இயல்பிலிருந்து தொடர்ந்து மாறுதலடைந்தே வந்திருந்த அகமனம்சார்ந்த நுட்பப்பதிவுகளடங்கிய நிறைய்ய எழுத்துக்கள் சி. மணியிடம் உண்டு. அவரது ஆளுமைக்கு மிகச்சரியான ஒன்றை அவர் இனங்காணும் பொருட்டே வாசிப்பின் தீவிரத்திலும், கற்றறியும் தந்திரங்களிலும் தன்னையே செலவழித்துக் கொண்டிருந்திருக்கிறார். மிகச்சரியான மற்றொரு எதிர் உதாரணம் நகுலன், தன்னிலிருந்து தனக்கான எல்லா செயல்பாடுகளுக்குமான குறிப்புகளையும், புதிர்களையும் தன் வாசிப்பின் படைப்பின் வழியே கண்டடைய முற்பட்டவர். சி. மணி.

தன் புறச்செயல்பாடுகளின் வழியே அறிதலின் மற்றும் பயன்படுத்துதலின் பிரக்ஞை பூர்வமான சொல்லாடல்களை பிறவற்றிலிருந்தும் அறிந்து கொள்ளத் தீவிரமாக முயற்சி செய்துக்கொண்டிருந்தவர். ஒரு படைப்பாளிக்கு எப்போதும் தேவையாகயில்லாத பெரும் புகழையும், பெரும்பண வசதிகளையும், வெற்று ஜால்ரா கூட்டங்களையும் மேலும் சொகுசான அலுவலக வேலைகளையும் வெறுத்துதான் தான் நேசித்த இலக்கிய வகைமைக்குள் இயங்கிக் கொண்டிருந்தார் சி. மணி. (படைப்பாளிகள் யாரும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் என்பதல்ல. மாலை, கிரீடம், பிளக்ஸ் போர்டு இத்யாதிகளை எதிர்ப்பது என்பதே நம் நோக்கம்) தன் படைப்புகளின் வழியே தனிமனித நேசங்களையும், பிறழ்வு மனநிலைகளையும், நகர்புற வாழ்வின் விரோதங்களையும், குறிப்புகளிலுணர்த்தும் சமன்பாட்டுத் தத்துவங்களையும், மரண உடல்களில் நிறையும் நினைவுகளையும் வெவ்வேறான சாராம்சத்துடனும், சாத்தியத்துடனும், கலகங்களின் வரிகளோடும், இறுக்கமும், பகிர்வுமான வெளியின் ஒளிப்பரவலுடன் செய்து காண்பித்தவர் சி. மணி.

மேலைநாடுகளின் கிளர்ச்சியூட்டும், சோதனைத்தன்மையுமான சிலவற்றையும், வடிவம் சார்ந்த நுட்பமான அணுகு முறைகளையும் அவரின் சில பிரதிகளின் நெருக்கடிகளினூடே காணலாம். இது அவர் வாசிப்பின் விளைவுதான். 1974ல் வெளியான ‘வரும்போகும்’, 1976ல் வெளியான ‘ஒளிச்சேர்க்கை’ மற்றும் தொகுப்புகளில் வெளிவராத 57 கவிதைகளும் அடங்கிய தொகுப்பு க்ரியா 1996ல் வெளியிட்ட ‘இதுவரை’ ஆகும். எதிலும் நிலைகொள்ள முடிந்திடாத அந்நியத்தன்மையும், இயங்குதலின் பல்வேறு சாத்தியங்களையும் நிறுவிக் காண்பித்த, சற்றும் ஓய்வில் தொய்வடைந்திடாத சி.மணியின் அத்தொகுப்பில் உள்ள கவிதைகள் கீழ்க்கண்டவற்றுள் யாரும் கலைத்துவிடக்கூடிய மிகச்சிறிய அளவிலான பிரிவுகளில் அடங்குகின்றன.

1.     நெகிழ்வின் திவலைகளடங்கிய வெளியின் சுறுசுறுப்பு.

2.     கட்டற்ற வார்த்தைப் பிரயோகங்களற்ற திடத்தன்மையுடனான செயல்பாட்டு வரிகள்.

3.     உணர்த்துதலின் நுட்பங்களுள்ள சொற் சேர்ப்பு / பிரிப்பு விதிகள்.

4.     பழந்தமிழ் சொற்சேர்க்கை வரிகளின் குறியீட்டு எதிர்த்தன்மையியல்

5.     சூழலுக்கேற்ற நெருக்கடிகளின் விதிகளுடனான இசைத்தன்மையின் ஈர்ப்பு

6.     புகைப்படங்களின் விவரணைகளாலான வரிகளின் செயற்கையிழைகளும்/ பிழைகளும்.

1. நெகிழ்வின் திவலைகளடங்கிய வெளியின் சுறுசுறுப்பு:

தன் சூழலின் சுயம் சார்ந்த கேள்வி சி. மணிக்கு எப்போதும் உண்டு. நிகழ்வனவற்றின் விளைவுகளும் அதற்கேயுண்டான கேள்விகளும், கோபங்களும் இதனடிப்படையிலே நிகழ்ந்து கொண்டிருந்தன அவருக்குள். தன்னொளியும், பிறர்ஒளியும் சேர்ந்து பகடையாகி விட்டிருந்த இச்சூழலின் மலினமான பழமைகளின் மீதான, அடிமைத்தனங்களின் மீதான கேள்விகளுக்கு புதுமையின் இசைகயையும், அதன் பச்சையத்தையும் பரிசாக தன் கவிதைகளில் கொடுத்தவர் சி. மணி. முக்காலம் தொடர்பில்லா முக்கூடு என்பவரும், போனது வராது, வருவது தெரியாது / நடப்பதைக்கவனி. என்பவர்களையும் அறிவிலிகள் என்பதிலிருந்து அவர்யேங்கும் வெளிசார்ந்த பிரக்ஞையுடனான சுறுசுறுப்பு மிகுந்த வேகம் கொள்கின்றன.

அரக்கம் தலைப்பிலான, வாடிய பூக்கள்... என்று துவங்கும் கவிதை எஞ்சிய குமரன் குமரியைப் பிடிப்பான் திவலைகளாலான இவ்வாழ்வின் இருப்பிடம் இதுதானென்று கோடிட்டுக் காட்டுகிறார். தன் சோகத்தையும் அதே சுறுசுறுப்புடன் சொல்ல முயன்ற பிரிவு கவிதையின் ஆழம், நிரந்தர கவிதைக்கானது நீ / தனி ஊசல்போல் / இடவலமாய்த் தலையசைத்தாய் என்று முடியும் மறுப்பு கவிதை உயிரெச்சத்துடனும், கேள்விகளுடனாமான இறப்பு கவிதையின் எல்லா வரிகளிலும் படர்ந்திருப்பது நெகிழ்வின் வெளியே என்று சொல்லத் தோன்றுகிறது. கவி அரங்கம். தலைப்பிட்ட கவிதையின் இடையில் வரும் ஒரு வரி துணியின் மிது. மரபுக்கவிதையயன்று முத்திரையிடப்பட்ட கவிதையயன்றால் யாருக்கும் பயமில்லை என்று சொல்லும் தன் கவிதை சார்ந்த எதிர்தன்மை வாதம் சி. மணிக்கே உரியது என்றும் / புலவர் அடைப்பார் / கவிஞர் திறப்பார் என்பதுதான் சுறுசுறுப்பிற்கான முதல் சொல். என்ன வந்தது தலைப்பிலான அவரது கவிதை எல்லோராலும் அதன் சூட்சுமங்களுக்காகவே பாராட்டப்பட்டது. இடையசைவில் கூடல் / மூச்சசைவில் வாழ்வு - அலைவு (பக்-61) வாழ்நிலைகளின் நிச்சங்களற்ற வடிவங்களையும் சொல்லும் மிகச்சிறந்த வரிகள்.

2. கட்டற்ற வார்த்தைப் பிரயோகங்களற்ற திடத் தன்மையுடனான செயல்பாட்டு வரிகள்.

நவீன கவிதைப் பிறப்பின் தொடக்கங்களிலிருந்தே வார்த்தைப்பிரயோகங்களின் சாத்தியப்பாட்டுக் கேள்விகள் ஆரம்பம் கொண்டன. அந்தந்த கவிஞர்களுக்கேயான வடிவ சாத்தியங்களும், சொல் வெளியீட்டு முறைகளும் தனித்துவம் கொள்ளத் தொடங்கின. உரைநடைப் பிரதிகளை உருவாக்கிய சிலர் அதை கவிதைத்தனத்திலே செய்தும் காண்பித்தனர். மிகச்சிறந்த உதாரணம் நகுலன், சுந்தரராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் அவரெழுதிய கவிதைகளை விட உரைநடையில் அழகியல் அதிகம், மேலும் அவரது கோஷ்டி அரசியல் மற்றும் ஊமைத்தனம் குறித்து தனியே வேறுகட்டுரையில் விவாதிக்கலாம் - பிரமிள், ஆத்மாறாம், போன்றோர் இவர்களுக்கு மத்தியில் எழுத்து காலகட்டத்தின் பிற்பகுதியிலிருந்து சொற்களின் சிக்கனமான வீரியங்களையும், தன்னியல்புகளையும் திறந்து காண்பித்தவர். சி. மணி

மிக முந்தைய கவிதைகளான நான்கு -பக். 64, இரவச்சம் -பக்.66, வளர் குழப்பம் - பக். 67, நிலவுப்பெண் - பக். நிலவு குறித்து இதிலுள்ள பல கவிதைகளில் முக்கியமானது இவ- அணைப்பு - பக் 90, சாதனை - பக் 89, ஒலி-பக்.106, நிழல்-பக். 107, மயக்கம்-பக். 104, உருவகம்-பக்.108, நடை-பக்.113, இலக்கை நோக்கி -பக் 136, ஆகிய கவிதைகளின் அடிநாதம் இவ்வாறு தொடங்கி இவ்வாறே முடிகிறது. சிறுகவிதைகளின் வடிவ பிரக்ஞையோடு சொல்லிவந்ததன் குவியப்பொருளை அவ்வாறே உணர்த்தி புலனொன்றின் மூலம் அறிய வைக்க முற்படுவதே இக்கவிதைகளின் வெளிப்பாட்டு முறை வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது.

3. உணர்த்துதலின் நுட்பங்களுள்ள சொற்சேர்ப்பு/பிரிப்பு விதிகள்

ஒரு படைப்பில் குவிக்கப்படுகிற கவனங்கள், மேற்சலனங்கள், குறிப்புணர்த்தும் சொற்களினாலான படிமங்களின் அடுக்குகள் இதன் விரிவுகள் சார்ந்து சொல்வதற்கும், கேட்பதற்கும் நிறைய்யவே இருக்கின்றன. உணர்ச்சி சார்ந்த வெறுமையின் வரிகள் அதீத கவனங்கொள்ளும் காலகட்டத்தில் ஓவியத்தனமான பார்வையின் பூர்விக ஒழுங்குகளின்றி விரியும் அமைதியும் மிக மூர்க்கமான சொற்சேர்ப்பு மற்றும் பிரிப்பின் - யாப்பு விதிகளின் ஒரு நவீன முறை சி. மணியின் பல கவிதைகளில் காண கிடைக்கின்றன. முக்கியமாக நீள் கவிதைகளில் சடங்காக தொற்றிக்கொள்ளும் அவை சிறு கவிதைகளின் முக்கிய செயல்பாடாக விரிந்து செல்கின்றன.

பிரித்தலும், சேர்த்தலும், வேறுவேறு விதமான மெளனப் புரிதல்களின் எல்லையற்றத் தனங்களுக்கு கொண்டு செல்கின்றன. பெரும் நம்பகத்தன்மை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இவ்விதிகளின் எல்லாக் கட்டுமானங்களும் படைப்பாளியாலே மிக செயற்கையாக உருவாக்கப் பட்டிருப்பினும் கவிதைப்பரப்பில், புரிதல் சார்ந்த வேறு வேறு அணிநகல் முறைகளுக்கு இவையே பெரும் உதவியாக இருக்கின்றன. சமகாலத் தொன்மம் சார்ந்த விதிகளை தொல்காப்பியக் கூறுகளின் வெளிப்பாடுகளோடு சொல்லிச் செல்வதும், அலங்காரங்களற்ற வொரு வெளியில் சுழல்வதுமே இப்பிரிவின் தேவையை உருவாக்குகிறது.

ஞானம் என்ற தலைப்பிட்ட கவிதை (பக் 186) அது சரி, அது எப்போது வேறு/எதுவாக இருந்தது? இந்தக் கேள்விதான் சி. மணியின் தேடலின் வெளி. எழுதுதல் குறித்து அவருக்கிருந்த பற்றும், பதற்றமும், நோயும், ஸ்பரிசமும் ஒன்றன் பின் ஒன்றாக சீற்றம் கொண்டது இவைகளிலிருந்துதான். இறப்பிற்குப் பிறகான வாழ்வை, அவர் பிறப்பிற்குபிரறகான வாழ்வு மாதிரியாகத் தான் எதிர்கொண்டார். அப்படியேதானிருக்கிறார் பதில் பக்-185 இரண்டு வகை பக்178, நுட்பங்களை வெகு இலகுவாக குவித்து ஒரு முள்ளின் இடைவெளியில் அவற்றை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் சி. மணி.

காலம்-பக்.177, மீட்பு-பக்.173, வழி-பக்.170, புரிதல் விகாரம்-பக். 164, தொடரும் இது போன்ற கவிதையில் நித்தியம் கொள்ளும் உற்சாகங்களின் நிகழ்வுகள் தொடர்ந்து பூஜ்ஜியத்திலிருந்து துவக்கம் கொள்ளும் மீளுலகின் நேசங்களைப் போலவே இருக்கின்றன. தர்க்கவியலின் கேள்விகளைப் போலும், அல்லாமலும் ஊசலாடும் இப்பிரிவுக் கவிதைகளின் உள்நோக்கங்கள் சார்ந்தும், புதுமை சார்ந்தும் மேலும் ஒரு கோட்பாடாக மட்டுமேயிருந்திடாத தன்மை சார்ந்ததுமே பேச வைக்கின்றன. சி. மணியின் ஆளுமை பிரிவுகளில் இவை சிலயிடங்கள் முன்னமே உள்ளன.

4.பழந்தமிழ் சொற்சேர்க்கை வரிகளின் குறியீட்டு எதிர்த் தன்மையியல்.

படைப்பாளி உருவாக்க முயலும் தன்னுடனான உறவுகளின் நீட்சிகளையும் பிறருடனான வேறுபாட்டு வகைகளின் அக்கறைகளையும், அக்கரையின்மைகளையும் மேலும் இவ்விரண்டிலுமில்லாத அதீத சக்தி அல்லது பிரக்ஞை பூர்வமான நேர்மைத்தன்மையற்ற பின் உருவகங்களின் உறவுகளையும் வாசகன் நட்சத்திரங்களென எட்டி எட்டிப் பறித்துக் கொண்டிருக்கின்றான். அவனது சோர்வும், புத்துணர்ச்சியும் மீண்டும் மீண்டும் அவனுக்கே உண்டான படைப்பு பிரதியிலிருந்தே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தீவிர ஆங்கில இலக்கியமும், தமிழ் உரைநடையும் சங்க கால கவிதைப்பாடல்களின் உட்சுரங்களும் மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்த சி. மணி அதிலிருந்தே நிகழ்தொன்மங்களின் வகைகளை வரிசைப்படுத்தினார்.

ஒரு குறியீட்டில், ஒரு தேடலில், ஒரு புறக்கணிப்பில், ஒரு பூஜ்ஜியத்தில் இவற்றை துவக்கினார் அவர். புரிந்து கொள்வதற்கும், உணர்வதற்கும் நிறைவான மொழியில் அதனை சவாலாகவே செய்து காண்பித்தார். அரூபமாகத் தெரிந்த இவற்றின் எளிமைகளை மீளாய்வாகவே தன்படைப்புகளில் சுருதியின் வெளிப்பாடுகளோடும், இலட்சியத்தனமற்ற, கோர்வையற்ற, சடங்கற்ற மொழியின் சிதிலங்களோடும், மேலும் கலைத்துவிட்ட இறுமாப்போடும் இவற்றைச் செய்தார். தேடி விழுந்தலையும் புலவர்களின் எல்லா இலக்கணங்களையும் ஒரு குறியீட்டில் உணர்த்திக் காண்பித்தவர் சி. மணி. எல்லாக் காலங்களுக்கும் எப்போதுமிருக்கும் ஆன்மீகத்தின் பிரச்சனைகளையும், லெளகீகத் தேவைகளுக்கான பிரச்சனைகளையும், தத்துவ விகாரங்களின் பிரச்சனைகளையும், கோட்பாட்டு நெகிழ்வுகளையும், சாத்தியங்களேயற்ற இருத்தலியலின் பிரச்சனைகளையும் தன்னுடலென மாற்றித் திருத்த அவருக்கு இதன் எல்லா விழுமியங்களும் கவிதைப்பரப்பின் வழியாகவே மையங் கொண்டமைய வேராகின. அவரது நுட்பமும், மனபிறழ்ச்சியுமாகின. தீராத இவற்றின் வழியே ஒரு பெரும் அமைதியின் மூர்க்கத்தை உணரவைப்பவர் சி. மணி.

5. சூழக்கேற்ற நெருக்கடிகளின் விதிகளுடனான இசைத்தன்மையின் ஈர்ப்பு

செவ்வியல் மொழிகளின் நுட்பமான தன்மைகளுள் மிக முக்கியமான ஒன்று அதன் இசைத்தன்மை. உணர்ந்திட மிக எளிமையானதாகயிருக்கும் இவை சொல் நேர்த்தியின் அழகியலுள் ஒன்று. சொல்லப்படும் நினைவுகளின் மீதான கடைசி பிரியமென இவை படைப்பில் விரிகின்றன. முடிவடைந்திடாத இத்தன்மையின் பாதிப்புதான் அக்கவிதையின் சாராம்சத்தை ஒரு மலரென உணரவைக்கின்றன. கண்களுக்கு புலனாகாத இவை ஒரு கவிதையின் மெல்லிய நரம்புகளில் பரவி மேன்மையான அழகியலை தோற்றுவிக்கின்றன.

இசையில் எந்த வரையரைகளையும் அறியாவதர்கள் இசையை ரசிப்பது போலவே இக்கவிதைகளில் பரவியிருக்கும் இசைத் தன்மையையும், அறிய முடிகிறது. யாப்பின் அந்த விதிகளை உதறி எரிந்துவிட்டு கவிதைகள் படைத்த பிறகும் அவற்றை நிகழ்கால தொன்மங்களின் வழியே ஈர்ப்பின் பிரசுரமாக தனக்கேயுண்டான தேட்டங்களுடன் எதிர்மரபில் இருந்து தனக்கான சவால்களை தொடர்ந்து உருவாக்கியும், புதைத்துமே இவை சொல்லப்பட்டிருக்கின்றன. அதனது அழிவை மற்றுமல்ல அது தோற்றுவிக்கும் உற்சாகமிழந்த சூழலையும் சுற்றிக் காண்பித்தது தான் இக்கவிதைகளின் நெருக்கடிகளுடனான இசைத்தன்மையின் ஈர்ப்பாகயிருக்கிறது.

6. புகைப்படங்களின் விவரணைகளாலான வரிகளின் செயற்கையிழைகளும் / பிழைகளும்.

மேற்சொன்ன 5 பிரிவுகளின் எதிர்தன்மையான இயங்கியல் வடிவமே இப்பிரிவாக சொல்லப்பட வேண்டியிருக்கிறது. சி. மணியின் ஆளுமைத் திறன்களின் நுட்பங்களும், அபத்தங்களும் இணையும் புள்ளியே இந்த செயற்கை பிரவாகங்களின் தொகுப்பாக சில நெடும் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. மிகுந்த அயர்ச்சிகளை உருவாக்கும் இந்நெருடும் கவிதை புதிர்களின் கதைகளும், சுரண்டல்களும், பிழைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு புள்ளியும் சி மணியாகவேத் தெரிகிறார். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் எழுதப்பட்ட இது மாதிரியான கவிதைகளின் வடிவங்களும், அவை உண்டாக்கும் ஊடகங்களும் நிச்சயம் உவப்பானதாக இல்லை.

மேலும் சி. மணியின் நிரந்தரமான ஆளுமைத் தனத்தை சிதறியடிக்கும் இடத்திலும் இல்லை. ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு என வெகுவாக இடம்மாறும் இச்சொற்களின் சாராம்சங்கள் மேலே சொன்ன 5 பிரிவுகளில் அடக்கம் கொண்டாலும் அதனதன் வீழ்ச்சிக்கேயுரிய நிறைய்ய விவரணை கனிலாலான செயற்கையிழைகளும், பிழைகளும், நிறைய்யவே இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்தும் சில நல்ல நிகர்கவிதைகளும் இத்தொகுதியில் இருக்கின்றன என்ற போதும் அவையயல்லாம் நபருக்கு நபர் மாறும் வரியுடையது. தனக்குள்ளேயே இதுமாதிரியான சில கதாபாத்திரங்களும் அதன் பிரியமான விவரணைகளும் சி. மணிக்கு இருந்திருக்கலாம்.

தனது படைப்புச் சூழலின் வழியே மட்டுமே சி. மணி பொதுப்பரப்பிற்குள் பிரவேசமானார். வேறு எதன் பொருட்டும் அக்கறையும், தேடலுமில்லாமல், (பணம், பரிசு, புகழ், இத்யாதி) நவீன கவிதையின் ஒரு கதையின் எல்லா கலைகளிலும் தன்னியல்பையும், மன நெருக்கடிகளையும் மாற்றி மாற்றி பயணித்துக் கொண்டிருந்தார். அறிய முற்படுகின்ற தத்துவார்த்தங்களையும், கோட்பாடுகளையும் ஒரு காலும் ஆசிரியரும் தந்துவிட முடியாது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் அவைகளெல்லாம் ஒரு பொறியையும், தொடக்கத்தையுமே ஏற்படுத்த முடியும் என்று தன் பிரதிகளின் வழியேயும், வாழ்க்கை முறையின் வழியாகவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வெற்றியும் கொண்டவர் அவர்.

சி. மணிக்கான நிறைய்ய வாசகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மேலும் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தொடர் மாற்றங்களுடன் அக்கவிதைகள் காத்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு படித்தான வார்த்தை மாயங்களில்லாமல் நவீன கவிதைகளின் இயங்குதலின் வழியில் அதன் எதிர்களை ஆக்கிரமிப்புகளாலும், கேள்விகளாலும், இறுக்கங்களின் செயல்பாடுகளாலும், இசைடையுதும், நெகிழவானதுமான, புதிர் சொற்களாலும் ஒரு வீச்சை, ஒரு குவியத்தை ஏற்படுத்தியவர் சி. மணி. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எல்லா வாசகர்களும் அடையக்கூடிய முதிர்ச்சித்தனமான நிலைகளுக்கு சி. மணியின் கவிதைகள் நிச்சயம் பயன்பெறும். எல்லாவித மன இறுக்கங்களுடன் வாழ்ந்து முடித்த சி. மணி, பிறப்பிற்கு பிறகான வாழ்வைப் போன்றே இறந்த பின்னும் இருந்து கொண்டிருக்கிறார்.

Pin It