சியர்ஸ் - Cheers
இயக்கம் : மணி ஜி

படத்தின் ஆரம்ப காட்சியில் பழைய பாட்டில் எடுக்கும் ஒருவன், பிராந்தி, விஸ்கி பாட்டில்களாய் எடுத்து எண்ணி கோணியில் போட்டுக் கொண்டிருக்க, அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அதில் ஒரு பாட்டிலை அவன் வேண்டாமென தூக்கி போட. அதற்கு அவள் இது விலை அதிகமாக பாட்டிலாச்சே என்று கேட்க, அவனோ அதில் சரக்கு இருந்தால்தான் மதிப்பு இல்லையென்றால் எதுக்கும் உதவாது எனக் கூறுகிறான். பழைய பாட்டிலையெல்லாம் எடுத்துக் கொண்டு பணத்தை கணக்கிட்டு கொடுக்கும் போது, “பாத்தும்மா இதையும் உன் புருஷன் குடிச்சிறப் போறான் என்று சொல்லிவிட்டு போக, பணத்தை எடுத்துக் கொண்டு போய், வீட்டின் வாசலில் காத்திருக்கும் இரண்டு பேரிடம் கொடுத்து, இவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல, அவர்கள் போகிறார்கள். அவள் அமைதியாய் கவலையுடன் வாசல்படியில் தலையை சாய்த்து கொண்டு உட்கார, பின்னணியில் சாவுக்கு அடிக்கும் மணியின் ஓசை ஒலிக்க, உள்ளே பிணமாய் அவள் கணவன். குடிப்பதனால் ஏற்படும் கொடுமையை மிக அழுத்தமாய் வெளிப்படுத்தியிருக்கும் குறும்படம்.

அதிக வசனங்களோ, மெலோ ட்ராமாவோ இல்லாமல், பிணத்தைக் கூட அவுட் ஆப் போக்ஸிலிருந்து போய் இரண்டு கட்டைவிரல் கால்களில் கட்டு போடப்பட்டதை மட்டுமே காட்டியிருப்பது இயக்குனர் மணிஜியின் திறமையை காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார், பின்னணி இசை அமைத்த அனில் ஆகியோரின் வெளிப்பாடு எல்லாமே நேர்த்தியோடு செய்யப்பட்டிருக்கிறது.


மறைபொருள்
இயக்கம்: பொன்.சுதா

ஒரு இளம் பெண் குளித்து விட்டு உடை மாற்றிக்கொள்ள வருகிறாள். கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கிறாள். கண்ணுக்கு மையிடுகிறாள், லிப்ஸ்டிக் போடுகிறாள். பவுடர் பூசுகிறாள். ஒன்றுக்கு மூன்றாய் உடைகளை தேர்வு செய்து போட்டு கொள்கிறாள். உடைகளுக்கு ஏற்ற கை வளையல்களை தெரிவு செய்கிறாள். கடைசியாய் ஒரு புர்காவை மாட்டி, முகத்தை மூடி கிளம்புகிறாள். வசனமேயில்லாத ஆறு நிமிட படம். ஆனால் இந்த படம் உணர்த்தும் விஷயங்கள் நிறைய. இயக்குனர் பொன்.சுதாவின் முதல் குறும்படம்.

ஒளிப்பதிவு. பின்னணி இசை, எடிட்டிங் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

விபத்து

புதிதாக திருமணமான இளைஞன் ஒருவன் சினிமா தியேட்டரிலிருந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போகிறான். விபத்தில் மாட்டிக் கொள்கிறான். இங்கே புதுமணப்பெண் ஒருத்தி கணவனுக்காக காத்திருக்கிறாள். ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞனுக்கு நிலைமை மோசமாகி விட. முடிவு என்ன என்பது தான் உச்சக் காட்சி.

அடுத்து என்ன என்ற அறியும் உத்வேகத்தை யளிக்கின்ற வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. வழக்கமான குறும்பட பாணி ஒளிப்பதிவுக் கோணங்கள் இல்லாமல், திரைப்படங்களைப் போல கேமரா கோணங்களும், வசனங்களும், பின்னணி இசையும் எல்லாம் சேர்ந்து படத்திற்கு சிறப்பூட்டுகிறது.

புதுமணப் பெண்ணாக நடித்த ஸ்ரீயின் நடிப்பு அருமை. படத்தின் உயிர்நாடியே இந்த பெண்ணின் நடிப்புதான் என்றால் மிகையில்லை. 15 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை ஒரு சில நிமிடங்கள் சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் பிரின்ஸ், ஒளிப்பதிவாளர் செந்தில், நடித்த மற்ற நடிகர்கள் எல்லோருமே தங்களது திறமைகளை அருமையாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வண்டியோட்டும் நாம் தலைகவசம் போடுவதை பற்றியும், தங்களை பற்றிய விபரங்களை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வெறும் பிரச்சாரமாய் சொல்லாமல் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இக்குறும்படத்தின் இயக்குனர் சங்கர் நாராயண்.

Pin It