வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்

- பிரமிள்

தனபாண்டியன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவன் அம்மா இறந்து விட்டாள். அதை முன்னிட்டு எல்லோரும் அவனைத் தூற்றினர். அவனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தபோது அவனது அப்பா அவனிடம் இரைந்தார் - ‘எங்கப்பா அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததுக்கு நீதாண்டா காரணம்.’ ஆறு மாதக் குழந்தைக்குக் கோபம் வராதா.? ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறை விட்டான் என்று வாசித்துக் கொள்ளவும்). தன்மேல் பொறாமை கொண்ட ஊர் நாட்டாண்மைக்காரர்தான் பில்லி சூன்யம் வைத்திருப்பான் என்றான். அவரும் ஒத்துக் கொண்டார். அதிலிருந்து அவனைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டார். அவனும் பெயரைச் சுருக்கி பாண்டியன் என்று மாற்றிக் கொண்டான்.

பிற்காலத்தில் நிறைய ரசிகர் நற்பணி மன்றங்கள் தோன்றின. அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர். அவன் செத்துப் போனான்.

எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடை யொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.

இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகி விட்டதா.?). Raymond Federman ‘யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ்காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப்படுத்தல்களைக் கலைவது’ நடக்கும் என்கிறார். (பார்க்க: மீட்சி 33 ; மொழி பெயர்ப்பு நாகார்ஜூனன்).

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்கூடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக் கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).

இப்படியாக அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் (வாள் போன்ற மொழியை வேண்டுபவர்கள் இந்த வரியை அடித்துவிடவும்). கண்ணைப் பறிக்கும் அவனது அழகைக் கண்டு யாரும் பெண் கொடுக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தன்னிலும் 40 வயது மூத்த பெண்ணைத் திருமாணம் செய்து கொண்டான். அவளோ அவனை மதிக்காமல் தினமும் இம்சித்து வந்தாள். இது பொறுக்காத மனு நீதிச் சோழன் ஒரு நாள் அவள் கனவில் வந்து ‘இப்படியெல்லாம் செய்தால் நரகம்தான் கிடைக்கும்; ஆணுக்கு அடங்கியிருப்பதே பெண்ணின் கடமை’ என்று எடுத்துரைத்தான். அவள் கனவிலேயே ’போடா மயிரு’ என்று பதில் சொன்னாள். ‘நான் தமிழச்சி; என் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது’ என்றும் அவள் சொன்னதாகக் கேள்வி. அவள் தொந்தரவு தாங்காமல் விவாகரத்து கேட்டான். அவள் ஒப்புக் கொள்ளாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்).

அடிவாங்கியதிலிருந்து பாண்டியன் முற்றிலும் மாறிப் போனான். சாத்வீக வழியே சிறந்தது என்று சன்னியாசி ஆக முடிவு செய்தான். ஆனால் சன்னியாசம் வாங்கப் போகும் வழியில் இன்னொரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

காட்சி :

ஒருவன் சிறுகதை எழுத முயல்கிறான். இவ்வாறு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவளின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டான். இம்முறை குழந்தை பிறந்ததும் அவனே இறந்து விட்டான்.

இரண்டாவது இடைவெட்டு : படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க, பல திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே போகிறேன். கதை சுவாரஸ்யம்தான் முக்கியம் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். கதையின் போக்கிலேயே கதாநாயகன் இறந்தாலும், தனியாக ஒரு வரி ‘அவன் செத்துப் போனான்’ என்று கொடுத்திருக்கிறேன்.

வாசகி, உனக்கு போரடித்தால் எந்த இடத்திலும் அதைப் படித்துவிட்டு கதையை முடித்துக் கொள்ளலாம். குறிப்பு : இப்படி நடுவில் அடிக்கடி இடைவெட்டு வருவது வாசக அனுபவத்தில் குறிக்கிடுவது போலாகும் என்பவர்களே - கதை எழுதுவதே வாசக அனுபவத்தில் குறிக்கிடுவதுதானே.! (இதை யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தெரியப்படுத்துபவர்களுக்கு ‘உன்னைப் போல் ஒருவன்’ பட டீவிடி இலவசப் பரிசு. போட்டியில் கலந்து கொள்ள கடைசி தினம் : 24.12.2009).

அவனது சமாதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : ‘பிறந்தது கிமு 989; இறந்தது கிபி 2095. இந்த முப்பத்து மூன்று வயதில் சாதிக்க நினைத்ததையெல்லாம் சாதித்துவிட்டு உள்ளே உறங்குகின்றான் கும்பகர்ணன்’.

பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்து விடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி. தர நிர்ணயம் ஒவ்வொருவர் அடிமனத்திலும் இருப்பது; அதை மாற்ற முடியாது என்று தன்னிலையைக் கரைத்தழிக்க விரும்பும் பின் அமைப்பியல்வாதிகளுக்குச் சொன்னான். தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கையில் கட்டுடன் அலைவதைப் பார்க்க முடிந்தது.

கேட்டதற்கு, முன்னோர்கள் வைத்த வினையை அவன் அறுவடை செய்ததாகவும், அதற்கு நிவாரணம் தேடிக் கொண்டதாகவும் சொன்னான். மக்கள் நம்பி, அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.

இடைவெட்டு : கடந்த இரண்டு பத்திகளும் அலுப்பு தட்டுகிறது என்று சொல்பவர்களுக்கு : இது போர்ஹே உத்தி. எந்நேரமும் வாசகனை ஏமாற்றி இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

காலைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். எதிரே கடல். தூரத்திலிருந்து பெரிதாக வரும் அலை ஓய்ந்து திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்க வாட்டில் திரும்பினால்..... (தொடரும்)

- ஜ்யோவ்ராம் சுந்தர்

Pin It