இலங்கையில் ஈழத் தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வழிவகுக்கும் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் பவுத்த மத குருக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தப்படி 13ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் வரலாறு காணாத பேரிழப்புகளையும், அநீதிகளையும் தமிழினம் கடந்து வந்திருக்கிறது.

இலங்கையின் பெரும் பொருளாதார நெருக்கடி, அய்.நா மன்றங்களில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானங்கள், சர்வதேசப் பொருளாதார அமைப்புகளிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் இவற்றின் பின்னணியில் இன்று இலங்கை அரசு வேறு வழியின்றி தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்க முனைந்திருக்கிறது. இதில் தமிழர்கள் நலன் மட்டுமில்லை, சிங்களவர்களின் நலனும் உள்ளடங்கியிருக்கிறது. ஆனால் மத நிறுவனம் அடிப்படைவாதத்தை இனவாதத்தை முன்வைத்து, இதனை எதிர்க்கிறது.

மதவாதிகள் இராஜகுருக்களாக நேரடியாகவும் மறைமுகவாகவும் செயல்படுவார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டிய இடத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பதில் சொல்ல இலங்கை அரசைத்தான் சர்வதேசச் சமூகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அரசு மட்டும்தான் குற்றவாளியா? சிங்கள-பவுத்தப் பேரினவாதத்தை விதைத்துப் பரப்பிய மதகுருக்கள்? அரசை வழிநடத்துகிற, அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிற மத நிறுவனம் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் அரசை எதிர்த்துத்தான் போராடினார்கள். மதகுருக்களை எதிர்த்து அல்ல. இதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

அன்பைப் பரப்புவதாக மதம் காட்டிக்கொள்ளும். ஆனால் சிறுபான்மையினரை வாட்டிக்கொல்லும். இலங்கையின் அரசியலாளர்கள் மத நிறுவனத்தைப் புறந்தள்ளிவிட்டு, பொறுப்போடு செயல்பட வேண்டும். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதுவும் ஈடாகாது. 13ஆவது சட்டத் திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்துங்கள்.

Pin It