கடந்த இதழ் தொடர்ச்சி

விவேகாநந்தர் இந்தியச் சாதி அமைப்பை விமர்சித்தார் என்பது உண்மையா?

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவைத்தை மட்டுமல்ல விவேகாநந்தர் இந்தியாவில் பிறந்த இதர சமையங்களையோ இல்லை இந்து மதம் சார்ந்த உட்பிரிவுகளையோ அவர் எந்நாளும் ஆதரித்ததில்லை. சநாதன இத்து மதம் ஒன்றே இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான தாய் மதம் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

சாதிமுறை உட்பட சநாதன இந்து மதத்தின் எந்த நம்பிக்கைகளையும் நிறுவனங்களையும் அவர் இந்து மதத்தின் குறைபாடுகளாகவோ நீக்கப்பட வேண்டியவையாகவோ விமர்சித்ததில்லை. பலரும் நம்புவதைப்போல சாதி அமைப்பை அவர் இந்து மதத்தின் கேடு எனக் கருதியவர் இல்லை. பல்வேறு பிளவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஒட்டி இணைத்து இந்து மதத்தை முழுமையாக்கப் பயன்பட்ட ஒரு பசையாகவே அவர் சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டார்.

விவேகாநந்தரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை பல நேரங்களில் தெளிவற்றவையாகவும் சிக்கலானவையாகவும் இருக்கும் அந்தச் சிக்கல் அவர் பேச எடுத்துக்கொண்டபொருளின் சிக்கற் தன்மையினால் (complexity) உருவானதல்ல. மாறாக அவர் வெளிப்படையாகப் பேச விரும்பாத சிலவற்றை, சற்றே நசுக்கி, நசுக்கிப் பேச நேர்ந்ததின் விளைவு அது.

19ம் நூற்றாண்டில் இந்துவாக இருப்பதன் பொருள், அதாவது “இந்துத்தன்மை” (Hinduism) என்பதற்கு அளிக்கப்பட்ட பல்வேறு வரையறைகளில் மிகவும் தீவிரமான சமூக மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ஒன்று விவேகாநந்தரின் வரையறை. மிகவும் நவீனமானதாக இன்று நம்பப்படும் அவரது வரையறை இந்து மதத்தின் கட்டுப்பெட்டித்தனமான, களையப்பட வேண்டிய பல அம்சங்களைப் புதிய மொழியில் நியாயப்படுத்தின.

எவை எல்லாம் இந்து மதத்தின் கொடு அம்சங்களாகச் சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்கியோரால் அடையாளம் காட்டப்பட்டனவோ அவை எதுவும் இந்து மதம் பிற உலக மதங்கள் எல்லாவற்றிற்கும் “தாய் மதமாக” இருப்பதற்குத் தடையாக இல்லை என அவரை வாசிப்பவர்களை நம்ப வைப்பதாகவும் இருந்தன.

இராமகிருஷ்ணரைத் தனது குருவாக மட்டுன்றி கிருஷ்ணனின் அவதாரமாகவும், தனது தெய்வீக ஆற்றல்கள் அனைத்தையும் இறப்பதற்கு முன் ஒரு அற்புத நிகழ்வொன்றின் மூலம் தனக்கு ஈந்து சென்றவராகவும் முன்னிறுத்தியவர் விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் இது போன்ற சித்துக்களை நம்பாதவர் மட்டுமல்ல, ஏற்காதவருங்கூட என்பது ஒருபுறம் இருக்க இந்து அடையாளம் குறித்த தன்னுடைய கட்டமைப்பிற்கு ஏற்ப தனது குருவை விவேகாநந்தர் கட்டமைத்த விதம் சுவாரசியமானது. இராமகிருஷ்ணரின் போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது மகேந்திரநாத் குப்தா என்பவர் இராமகிருஷ்ணரின் இறுதி நான்காண்டுகளில் அவரைச் சந்தித்துத் தொகுத்த அவரது உரையாடல்கள்தான்.

அவற்றையும் அவரது வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும்போது இராமகிருஷ்ணர் எல்லோரையும் எல்லா நம்பிக்கைகளையும் சமமாக நேசிக்கும் விரிந்த இதய விசாலம் உடையவர் என்பது தவிர, பக்திப் பாரம்பரியத்தில் வந்த அவர் ஒருவிதப் பித்து நிலையில் (religious ecstacy) வாழ்ந்தவர் என்பது விளங்கும். ஆனால் விவேகநந்தரோ தன் குருவைப் பல மதங்களையும் ஆய்ந்து அவற்றின் சிறந்த அமசங்களைத் தொகுத்துக் கொண்ட ஒரு தத்துவ ஞாநியைப்போல முன்வைப்பார்.

இராமகிருஷ்ணர் எந்நாளும் இந்து மதத்தைப் பிற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனச் சொன்னதில்லை. குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை அவர் எதிர் நிலையில் நிறுத்தியதில்லை. இந்து மதத்தை அவர் பெருமிதத்தோடு நினைவு கூர்வது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுந்தான். அதுவும் கூட மார்வாரி இனத்தவரின் ஒரு பக்திக் கொண்டாட்டத்தைக் கண்டு அவர் பரவசமடந்த தருணத்தில்தான், ஆகா இதுவன்றோ இந்து மதம் என்கிற ரீதியில் அவர் அதைச் சொன்னார்.

“ஒரு நபர் ஏற்றுக்கொண்ட மதத்தில் தவறுகள் உள்ளதென்றால் அவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கடவுளே அதைத் திருத்துவார். மற்ற மதங்களில் தவறுகள் இருக்கிறதென்றால் அவற்றைத் திருத்துவது நம் வேலை அல்ல. கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்” என்று சொன்னவர் இராமகிருஷ்ணர். அது மட்டுமல்ல, தன் மதமே சிறந்தது எனச் சொல்வதையும் அதன் மூலம் அடையும் வெற்றிப் பெருமிதத்தையும் அவர் கடுமையாகக் கண்டிப்பார். வெற்றி பெறுவது பெரிய விசயமல்ல. வென்றவர்கள் தோற்பதும் தோற்றவர்கள் வெல்வதும் சகஜம் என்பார்.

மதங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் சீடர் விவேகாநந்தரோ இந்து மதம் ஒன்றே முழுமையான மதம் எனவும் பிற அனைத்தும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் (phases) உள்ளவை என்றும் சொன்னவர். அது மட்டுமல்ல இராமகிருஷ்ணரின் கருத்தும் அதுதான் எனச் சொல்லத் துணிந்தவரும் கூட.

1896ல் விவேகாநந்தர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இராமகிருஷ்ணர் குறித்து இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகிறார். இராமகிருஷ்ணரை வாசித்துவிட்டு இராமகிருஷ்ணர் குறித்த விவேகாநந்தரின் உரையை வாசித்தால், இராமகிருஷ்ணருக்கும் விவேகாநந்தரின் இராமகிருஷ்ணருக்கும் உள்ள வேறுபாடுகள் விளங்கும்.

மேற்கத்திய பொருள் முதல் அணுகல்களையும் இஸ்லாத்தின் வாள்வீச்சையும் வென்ற மதம் சநாதன இந்து மதம் என்கிற இராமகிருஷ்ணருக்குச் சற்றும் பொருந்தாத ஒரு திரையில் அவரை வரைந்து காட்டுவார் அவரது சீடர். இராமகிருஷ்ணர் இஸ்லாம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதமாக கற்றுத் தேர்ந்து ஆய்வு செய்து அவற்றில் புதிதாக ஒன்றுமில்லை என அறிந்தாராம்.

இராமகிருஷ்ணர் யாருடைய நம்பிக்கையையும் தாக்க வேண்டாம், “மிகவும் உள்ளடக்கும் தன்மையே இல்லாத” இஸ்லாமிய நம்பிக்கையையும் கூடத் தாக்க வேண்டாம் என்றாராம். மற்ற நம்பிக்கைகளைத் தாக்காமலேயே அவற்றை மேலுயர்த்த வேண்டும் என்றாராம். ஆக, மற்ற நம்பிக்கைகளை மேலுயர்த்தப்பட வேண்டியவை என இராமகிருஷ்ணர் கருதினார் என்றாகிறது. விவேகநந்தரைப் போற்றுபவர்கள் இப்படி இராமகிருஷ்ணர் எங்கே சொன்னார் எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமடைவர்..

சனாதனமதத்தை என்றென்றைக்கும் அழியாத மதம் என இராமகிருஷ்ணரை முன்னிறுத்திப் பேசும் அவரது சீடர், “இந்த மதத்தைப் போதிக்க உகந்த மண் இந்திய மண், உகந்த மக்கள் இந்துக்கள்” என்று கூறியதன் ஊடாக, “இந்தியா”, “இந்திய மண்” “இந்து” ஆகியவற்றை ஒன்றாக நிறுத்தி இந்துத்துவ அரசியலுக்குக் கால்கோள் இட்டார் என்பது நினைவிற்குரியது. “தேசம்” என்கிற கருத்தாக்கத்தை முன்னிறுத்தாத, சொல்லப்போனால் வெறுத்த இராமகிருஷ்ணரின் பெயரால் இதைச் செய்வதற்கு விவேகாநந்தர் இம்மியும் தயங்கவில்லை.

பார்ப்பனர்களை விமர்சித்தார், “அழுகிப் போன சாதிமுறையை ஒழிக்கவேண்டும்” எனச் சொன்னார் என்றெல்லாம் விவேகாநந்தர் குறித்துக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் இப்படித்தான். பார்ப்பனர்கள் அதிகார ஆசை கொண்டவர்கள் எனச் சொல்லும் விவேகாநந்தர்தான் இதை அவர்களின் ஒரே ஒரு பலவீனம் எனவும் மற்றபடி அவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் எனவும் சொல்கிறார்.

vivekander 600

‘புத்தர் முதல் ராம் மோகன் ராய் வரை” இந்தச் சமூகத்தைச் சீர்திருத்த வந்த எல்லோரும் ‘மதம், சாதி ஆகிய இரு நிறுவனங்களையும் முற்றாக வீழ்த்த நினைத்தார்கள், தோற்றார்கள்” என்கிறார். ஆக சாதியை முழுமையாக வீழ்த்த வேண்டியதில்லை, வீழ்த்தவும் முடியாது என்றாகிறது.

“மத ஆசாரியார்கள் (priests) என்ன சொன்ன போதிலும் சாதி என்பது ஒரு கெட்டி தட்டிப்போன நிறுவனம். அது தன் சேவையை முடித்து விட்டது. இப்போது அது தன் அழுகல் நாற்றத்தால் இந்தியாவை நிறப்பியுள்ளது. மக்களுக்கு அவர்கள் இழந்துபோன சமூகத் தனித்துவத்தை (social individuality) மீட்டளிப்பதன் முலமே அதை நீக்க முடியும்” - என்கிற விவேகாநந்தரின் வாசகங்களை வைத்துத்தான் அவர் பெரிய சாதி எதிர்ப்பாளர் என்கிற பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகங்கள் தெளிவாக சாதி ஒழிப்பை வற்புறுத்தி ஏதும் சொல்லவில்லை என்பது தவிர இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து வாசித்தால் அதிர்ச்சி அளிக்கும்.

விவேகாநந்தர் பேசுகிறார்: “ சமஸ்ஸ்கிருதத்தில் ‘ஜாதி’ என அழைக்கப்படும் உயிர்கள்தான் (species) படைப்பின் அடிப்படைத் தத்துவம். எல்லா வேதங்களும் சொல்வது., ‘நான் ஏகன்; நான் அநேகன் ஆனேன்’ என்பதைத்தான்.. படைப்புக்கு முன் உள்ளது ஒருமை; படைப்பு என்பது பன்மை. இந்தப் பன்மைத்துவம் முடிவுக்கு வரும்போது படைப்பு அழியும்.

எந்த உயிர்களும் ஊக்கத்துடனும் செயல்திறனுடனும் இருந்தால் அது பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும். இது முடிவுக்கு வரும்போது அது சாகிறது. ஆக, ஒரு தனிநபர் தனது இயல்பை, அவனது பிரகிருதியை, அவனது ஜாதியை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான் ஜாதி என்பதன் மூலக் கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வந்தது. சமீபத்திய நூல்களிலும் கூட சம பந்தி போஜனம் மறுக்கப்படவில்லை. நம் தொல் பழ நூல்களிலும் கூடசாதிகளுக்கிடையே திருமணம் மறுக்கப்படவில்லை. பின் ஏன் இந்தியா வீழ்ந்தது? ஜாதி குறித்த இந்தக் கருத்தை விட்டொழித்ததால்தான்..”

என்ன சொல்கிறார் விவேகாநந்தர்? சாதியை அதாவது ஒருவரது இயல்பை வெளிப்படுத்துவதுதான் சுதந்திரமாம். ஒருவருக்கு மலம் அள்ளுவது இயல்பாக இருக்கலாம். இன்னொருவருக்கு மந்திரம் சொல்வது இயல்பாக இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தும் சுதந்திரம் அழியும்போது சமூகத் தனித்துவம் பாழாகிறது. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. இந்தியாவின் அழிவிற்கு அதுவே காரணம்.

இனி மீண்டும் விவேகாநந்தர்: “இப்போதுள்ள ஜாதி என்பது உண்மையான ‘ஜாதி’ அல்ல. மாறாக அதன் முன்னேற்றத்திற்கான தடை. இன்றுள்ள அமைப்பு ஜாதியுடைய சுதந்திரச் செயல்பாட்டைத் தடுத்துவிட்டது. எந்த ஒரு கெட்டிதட்டிப்போன வழமை அல்லது உரிமை அல்லது பரம்பரைத் தன்மையான வகுப்பு (class) என்பதும் உண்மையில் ஜாதியின் வீச்சைத் தடுக்கிறது. எந்த ஒரு தேசமும் எப்போதெல்லாம் இந்தப் பன்மை நிலையை (variety) இழக்கிறதோ அப்போது அது சாக நேர்கிறது.

என் நாட்டு மக்களே நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். நீங்கள் ஜாதியை அழித்ததால்தான் இந்தியா வீழ்ந்தது, எந்த ஒரு உறைந்த பிரபுத்துவம்(frozen aristocracy) அல்லது முன்னுரிமை பெற்ற வர்க்கம் (privileged class) என்பதெல்லாமும் ஜாதியின் மீதான தாக்குதல்தானே ஒழிய அதுவே ஜாதி அல்ல. .

ஜாதி அதன் வீச்சைப் பெறட்டும். ஜாதிக்குத் தடையாக உள்ள அனைத்தும் உடைந்து சிதறட்டும். நாம் மேலெழுவோம்ஞ்” இதுதான் விவேகாநந்தர் சாதி மீது வைக்கும் “விமர்சனம்”. அவரது “விமர்சனத்திற்காக” அவர் தேர்ந்து கொண்ட மொழி எத்தனை சிடுக்குகள் நிறைந்ததாக உள்ளது என்பதையும் கவனியுங்கள். ஜாதி என்பது ஒருவரது இயல்பின் அடியாக உருவாவது.

அந்த இயல்பை அவர் நிறைவேற்றி வரும்வரை அது அற்புதமான ஒன்றுதான். வருணம், பரம்பரை என்கிற வடிவில் கெட்டிதட்டிப் போக விடாமல் ஜாதி என்பது சமூகத்தில் சுதந்திரமாக நிலவ விட வேண்டும். புத்தர் முதலானோர் சாதியை முற்றாக ஒழித்துவிடுவது என்று கூறியது அபத்தம் என விவேகாநந்தர் கூறியதன் பொருள் விளங்குகிறது.

இந்தியா பல ஜாதிகளை மட்டுமல்ல, மொழிகளை, இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனாலும் இந்தியா என்பது இந்த வேற்றுமைகளை எல்லாம் கடந்து ஒரு ஒருமையாக நின்று உலகிற்கு வழிகாட்டும் என்பதாக விவேகாநந்தர் முன்வைக்கும் சிந்தனைகள் பலவும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க ஆகியவற்றின் திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமஸ்கிருதத்தை “ஒரு மகத்தான புனித மொழி” எனச் சொல்லும் விவேகாநந்தர், பிற மொழிகள் அனைத்தையும் “(அதனுடைய) வெளிப்பாடுகள் (manifestations)” என்கிறார். பிற மதங்களை தாய் மதமான இந்து மதத்தை நோக்கிய வளர்ச்சியின் இடை நிலைகள் (phases) என அவர் முன்வைத்ததின் இன்னொரு பக்கம்தான் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளை சமஸ்கிருதத்தின் வெளிப்பாடுகள் என அவர் கூறுவதும் என்பதை நான் கவனிக்கத் தவறலாகாது. “ஆரியர்” என்கிற இன அடையாளம், “சமஸ்கிருதம்” என்கிற மொழி அடையாளம், “இந்து மதம்” என்கிற மத அடையாளம் ஆகியவற்றின் ஊடாக அவர் இந்தியாவை வரையறுக்கிறார்.

“சமஸ்கிருதம் என்பது (இந்தியாவின்) மொழியியல் தீர்வாக அமைவதைப் போல, ‘ஆரிய’ என்பது இனவியல் தீர்வாக அமைகிறது. சமூக அரசியல் பிரச்சினைகளுக்கும், கலாச்சாரம், வளர்ச்சி ஆகியவை பல்வேறு மட்டங்களில் ஏற்றத் தாழ்வுடன் இருப்பதற்கும் பிராமணத்துவமே தீர்வாக உள்ளது” என்பது விவேவேகாநந்தர் நம் நாட்டுப் பிரச்சினைகளுக்கு முன்வைக்கும் இறுதித் தீர்வு.

இந்தியாவிற்கு இத்தகைய மகத்தான கலாச்சாரத்தைத் தந்ததற்காக ஆரியர்களை மனதாரப் பாராட்டும் விவேகாநந்தர், இந்தக் கலாசாரம் சாதி அமைப்பின் ஊடாகக் கையளிக்கப்பட்டது என நன்றி ததும்புகிறார்.

“அது (அதாவது ஆரியக் கலாசாரத்தின் கொடையான சாதி அமைப்பு) முழு இந்தியாவையும் பொருள் அல்லது வாளால் (wealth or sword)வழி நடத்தப்படாமல் ஆன்மீகத்தால் தூய்மை செய்து கட்டுப்படுத்தப்பட்ட அறிவுத் திறனின் வழிகாட்டலில் வைத்தது. இந்தியாவின் தலைமை ஜாதியாக உள்ளவர்கள் உயர்ந்த ஆரியர்கள்- அதாவது பிராமணர்கள்” என்கிற விவேகாநந்தரின் கூற்றை நாம் மிகக் கவனமாக ஆராய வேண்டும். ‘பொருளால்” வழிநடத்தப்படுவது என்பது கிறிஸ்தவதையும். வாளால் வழி நடத்தப்படுவது என்பது இஸ்லாமையும்.

ஆன்மீகம் தழுவிய அறிவுத் திறன் மிக்க பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுவது என்பது இந்து மதத்தையும் இங்கே குறியீடு செய்கின்றன.. இப்படிப் பார்ப்பனர்களால் வழிநடத்தப்படும் இந்து மதம் ஆரியர்களின் கொடை என்பது விவேகாநந்தர் வைக்கும் முத்தாய்ப்பு.

பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைப் பிறவி அல்லது கர்ம பலன் என்கிற வடிவில் வரையறுத்துப் பெயர் சூட்டப்பட்ட (designated) சாதிகளாகத் தான் கருதவில்லை என விவேகாநந்தர் சில இடங்களில் கூறுகிறார். அதாவது அப்படிப் பிறவி அடிப்படையில் வரையறுக்கப்படாத யாரும் இந்த நிலைகளை அடையலாம் என்கிற பொருளில் அவர் இதைச் சொல்கிறார். வாளின் மூலம் அதிகாரம் பெற்ற யாரும் சத்திரியராகலாம்; கல்வியின் ஊடாக யாரும் பிராமணர் ஆகலாம்; சொத்தின் மூலம் யார் ஒருவரும் வைசியர் ஆகலாம் என்பது விவேகாநந்தரின் துணிபு. அப்படி மேல் நிலையை அடைந்தோர் அந்த உயர் நிலையின் பெருமைகளைக் தக்க வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இங்கே நமக்கொரு அய்யம் எழுகிறது. அப்படியானால் ஒரு சூத்திரர் கல்வியின் மூலம் பிராமணர் ஆக இயலுமா? அது முடியாது என்பதுதான் விவேகாநந்தரின் கருத்தாக உள்ளது. சூத்திரர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் இப்படி மேல் நிலை அடைய வேண்டுமானால், “நீங்கள் உங்களின் சாதி முழுமையையும் முதலில் மேல் நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

பிறகு உங்களின் மேல் நோக்கிய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. எனவே அடித்தளச் சாதியினரைப் பொருத்த மட்டில் அவர்கள் உயர் சாதி நிலையை அடைய வேண்டுமானால் யாரொருவரும் அதைத் தம் சொந்த முயற்சியில் சாதித்துவிட இயலாது. அவர்கள் ஒட்டு மொத்தமாய் அதற்கு ஆசைப்பட வேண்டும்.

அந்தச் சமூகம் முழுமையுமே அதற்குத் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான விதி முறைகளை “இந்திய மூதாதைகளான ஆரிய பிராமணர்கள்” உருவாக்கியுள்ளனர் என்கிறார். இதை எல்லாம் செய்யாமல் வெறுமனே சாதி அமைப்பையும் பார்ப்பனீயத்தையும் திட்டிக் கொண்டு இருந்தால் போதாது என்கிறார்.

”உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நான் சாதிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் எங்கும் அவற்றின் திட்டங்களும் நோக்கங்களும் இந்தியாவில் உள்ள அளவிற்கு உன்னதமானவைகளாக இல்லை. ஜாதி என்பது இப்படித் தவிர்க்க இயாலாதது என ஆகிற போது தூய்மை, பண்பாடு, தியாகம் ஆகியவற்றால் அடையாளப் படுத்தப் படும் ஜாதியையே நான் ஏற்றுக் கொள்வேன்.

டாலர்களால் அடையாளப்படுத்தப்படும் ஜாதியை அல்ல, எனவே (இந்தச் சாதி அமைப்பின் மீது) கண்டன வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வாய்களை மூடிக் கொள்ளுங்கள். இதயங்களைத் திறவுங்கள்.”

இதுதான் விவேகாநந்தர் நமக்குச் சொல்லும் சேதி விவேகாநந்தரைத் தூக்கிப் பிடிப்போர் அவரின் ஊடாக நமக்குச் சொல்லும் சேதி.

Pin It