ishwariyrai 350திரைப்படக் கலைஞர் ஐஸ்வர்யா ராய் தெரிவித்ததாக ஒரு கருத்தை, தமிழ் வார இதழ் ஒன்றில் படித்தேன். “ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசியத் தேவையையும் இந்தச் சமூகமும், குடும்பமும் நிறைவேற்றுவதே இல்லை” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

எல்லா வகையிலும் சமூகத்தின் வசதியான இடத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அப்படிப்பட்ட ஒரு சூழலை, சமூகத்திலோ அல்லது குடும்பத்திலோ உணர்ந்திருப்பாரா என்பதை நாம் இங்கே ஆராயப் போவதில்லை. அவர் தெரிவித்துள்ள கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதே நம் கேள்வி.

கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய கணக்குகள்தான்! ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்’ என்ற விந்தை மனிதர்களின் தலைகள் கவிழும்படி, பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை மகாத்மா புலே, சாவித்திரி பாய், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதிப் போராளிகள் உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள்.

இவைகள் எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை, ‘ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசியத் தேவைகளையும் இந்த சமூகமும், குடும்பமும் நிறைவேற்றுவதே இல்லை’ என்ற கூற்றிலும் இருக்கிறது.

இன்றைக்கும் பெண்களின் அத்தியாவசியத் தேவைகள், உரிமைகள் எத்தனையோ புறக்கணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பெண்களால் கேட்க முடியாதவை, கேட்டாலும் எளிதில் கிடைக்காதவை, கிடைக்கவே கிடைக்காதவை எனப் பல உண்டு.அவற்றில் ஒரே ஒரு செய்தியை மட்டும், மார்ச்-8- உலகப் பெண்கள் நாள் சிந்தனைக்காக முன்வைக்க விரும்புகிறேன்.

“வீட்டில் ஒரு டாய்லெட் கட்டச் சொல்லி 12 வருஷமா என் கணவரைக் கெஞ்சிக்கிட்டிருக்கேன். ஆனா, அதை அவர் காதுலயே போட்டுக்கலை. இப்போ என் பொண்ணு வயசுக்கு வந்த பிறகும் முள்ளுக் காட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கு. மகளுக்குப் பாதுகாப்பா இந்த வசதியைக் கூடப் பண்ணிக் கொடுக்க முடியலையேனு அவமானமா இருந்துச்சு. அதான் தாலியைக் கழட்டி வித்து, டாய்லெட் கட்டிட்டேன்” - மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்மணி பத்திரிகையாளர்களிடம் சொன்னது.

கழிப்பறை இல்லாமல் இருக்க முடியாதா? தாலியை விற்றுக் கட்ட வேண்டிய அளவுக்கு, அது என்ன அத்தனை அத்தியாவசியமான ஒன்றா என்று கேட்கக் கூடும். ஏழைப் பெண்ணாய் இருந்து பார்த்தால் அப்போது தெரியும்...தாலியை விட, கழிப்பறை புனிதமானது என்று.

சரி செய்திக்கு வருவோம். எங்கள் ஊரில் என்னுடைய சிறு வயதில் எந்த வீட்டிலும் & முதலாளி என்று அழைக்கப்படுபவர்களின் வீடு உள்பட கழிப்பறை கிடையாது. ஊருக்கு வடக்கே பத்து நிமிட நடைத் தொலைவில் உள்ள பரம்பு(சிறு மலைகளின் தொடர்)க்கும், தெற்கே காட்டுப்பகுதிக்கும் பெண்கள் காலைக்கடன் கழிக்கப் போவார்கள். ஆண்கள் மேற்கே கம்மாய்க் கரைப் பக்கம் போவார்கள்.

ஆனால் இன்றைக்கும் ஆண்கள் அந்தப் பக்கம்தான் போகிறார்கள். ஏனென்றால், வீடுகள் அதிகரிப்பதோ, தொழிற்சாலைகள் பெருகுவதோ அவர்களின் திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்குச் சிக்கலாக இல்லை. திறந்தவெளிக் கழிப்பிடங்கள் சுகாதாரக் கேடு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாளடைவில், பரம்புப் பகுதியில் வீடுகள் அதிகரித்து, குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. ஆள்நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டிருப்பதால் பெண்களால் இயற்கை உபாதைகளுக்கு அந்தப் பக்கம் ஒதுங்க முடியவில்லை. வசதியிருப்பவர்கள், இன்று வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டிக் கொண்டார்கள். மற்ற பெண்களின் நிலை? இது போன்று எத்தனை எத்தனை கிராமங்கள்? சாலைகளைத் தவிர இருக்கின்ற இடங்களில் எல்லாம் கட்டிடங்கள் எழுப்பட்டுவிட்ட நகரங்களில், கழிப்பறை வசதிகள் இல்லாத பெண்களுடைய வாழ்க்கையின் ஒரே ஒரு நாளை மட்டும், கற்பனையிலாவது வாழ்ந்து பார்க்க நம்மால் முடியுமா?

ஆண்களைப் பொறுத்தவரை, கழிப்பறை என்பது சிறுநீர், மலம் கழிப்பதற்கான இடம் மட்டுமே. ஒரு சில ஆண்களுக்குக் கூடுதலாக புகைபிடிப்பதற்கும் அந்த இடம் பயன் படக்கூடும். பெண்களுக்கு அப்படியில்லை. மாதவிலக்குக் காலங்களில் கழிப்பறையின் தேவை, மிக மிக அத்தியாவசியமானது. அதனால்தான், தன் மகள் வயதுக்கு வந்தவுடன், தாலியை விற்றுக் கழிப்றை கட்டியதாகச் சொல்கிறார் சங்கீதா.

ஊர் விழிக்கும் முன்பே எழுந்து, ஊரடங்கும் வரை காத்திருந்து தன்னுடைய அத்தியாவசியக் கடமைகளை முடிக்க தான் பட்ட துன்பங்களை அந்தத் தாய் உணர்ந்திருந்த காரணத்தால், தாலியின் புனிதத்தைவிட, கழிப்பறை முக்கியமானதாகப் பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை, ஒரு கழிப்றைக்காகத் தன் கணவரிடம் 12 ஆண்டுகள் கெஞ்சியிருக்கிறார்.

womens 350சமூகமும் சரி, குடும்பமும் சரி எப்போதும் பெண்ணை, பெண்ணின் தேவைகளை மதிக்கத் தயாராக இல்லை. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி, கழிப்பறை வசதியைப் பெறாத மக்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு, கிராமங்களின் எண்ணிக்கை 62.9 விழுக்காடு என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இதில் இவர்கள் சொல்லும் ‘சுத்தமான இந்தியா’விற்கான வரையறை என்ன? ஒரு நாள் கூத்திற்காக, பிரதமரின் உடைக்கு 10 லட்சம் செலவு செய்ய முடிகிற ஒரு அரசாங்கத்தால், மீதியிருக்கிற 50 விழுக்காட்டு மக்களுக்குக் கழிப்பறைகளைக் கட்டித்தர முடியாதா? முடியும், ஆனாலும் செய்யவில்லை.

காரணம், ஆண்களால் ஆண்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட நம் குடும்ப அமைப்பும், சமூகமும் - அரசும் - பெண்களை, அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை.

அதனால்தான், அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டிடங்கள் பெண்களுக்கானதாக இல்லை. அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கானதாகவும் இல்லை.

மாதவிலக்குக் காலங்களில், பெண்கள் பயன்படுத்தும் பஞ்சுப்பட்டைகளை (நாப்கின்) ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மாற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இல்லையென்றால், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலான கொடுமையான நோய்களுக்குப் பலியாக வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். வேலைக்குப் போகின்ற பெண்களுக்கு இது சாத்தியமே இல்லை. அதிலும் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் - பொது இடங்களில் கழிப்பறை பயன்பாடு என்பது கொடுமையின் உச்சம்.

கீதா இளங்கோவன் இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப்படத்தைப் பார்த்தால், கழிப்பறை என்பது பெண்களுக்குக் கணவனை விட முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதைத்தான் பீகாரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்மணி பூஜாதேவி செய்திருக்கிறார். முதன் முதலில் வந்த அன்றே, கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கழிப்பறை கட்டச் சொல்லி கேட்டிருக்கிறார். அவருடைய கோரிக்கை கணவராலும், மற்ற உறவுகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆறு மாதங்கள் பொறுமைகாத்த பூஜாதேவி, தன்னுடைய உணர்வுகளை மதிக்காத, அத்தியாவசியத் தேவையைக் கூடப் புறக்கணிக்கின்ற அந்த வீட்டில் வாழ முடியாது என்று தாய் வீட்டிற்குத் திரும்பிப் போய்விட்டார். அதற்குப் பிறகும், பஞ்சாத்தார் மூலம் பூஜாதேவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதில்தான் முனைப்புக் காட்டியுள்ளனரே தவிர, அவருடைய அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றும் எண்ணம் ஒரு சிறிதும் அவர்களிடம் இல்லை.

குடும்பமானாலும் சரி, சமூகமானாலும் சரி தங்கள் பெருமையையும், புனிதத்தையும் நிலைநாட்டும் இடமாகத்தான் பெண்ணின் உடலையும், மனத்தையும் பார்க்கிறார்கள். சொத்துத் தகராறானாலும் சரி, நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையானாலும் சரி, சுமக்க முடியாத அளவுக்குப் பெண்களின் மீதுதான் இழிவுகள் திணிக்கப்படுகின்றன. சமுதாயத்தில் ஆண்களைப் போல, பெண்களும் ஓர் அங்கத்தினர்.

ஆண்களுக்கு உண்டான தேவைகளை விட, இயற்கையாகவே ஒருபடி மேலான தேவைகள் பெண்களுக்கு இருக்கின்றன என்பதை குடும்பமும் சமூகமும் இனியாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

Pin It