ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டு செல்லப்படுகிறார்கள். பல மணி நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் குடிக்கத் தண்ணீர் இன்றி, கொளுத்தும் வெயிலில் வாட்டி வதைக்கப்படுகிறார்கள். அப்படி வதங்கிய மக்களில் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அலங்கோலத்திற்குப் பெருமளவு காவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

உயர்காவல் துறை அதிகாரிகள் இங்கே ‘பந்தோபஸ்து’ என்று சொல்லிக்கொண்டு ஓடித்திரிகிறார்கள்.

இந்த அவலம் ஒரு புறம் இருக்க, இன்னொருபுறம் கலைஞர் அவர்களின் பெரும் கூட்டங்களைக் காவல்துறை அலட்சியம் செய்து கொண்டிருக்கிறது.

 சைதாப்போட்டை, புதுச்சேரி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் தன் 92ஆம் வயதிலும் கூட, நேரடியாகச் சாலை வழியாகச் சென்று மக்களிடையே உரையாற்றுகிறார் கலைஞர்.

கலைஞர் நீண்ட நெடிய அரசியல் அணுபவம் பெற்றவர். தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். தமிழக மக்களுக்கு நல்ல பல அரிய திட்டங்களைத் தந்த சிறந்த நிர்வாகி.

இவர் செல்லும் கூட்டங்களுக்கு இயல்பாகவே இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள். போகும் இடங்களில் எல்லாம் பொங்கித் திரள்கிறது மக்கள் வெள்ளம்.

ஆனால் இங்கெல்லாம் காவல் துறையினரைக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை காண முடியவில்லை. பெயருக்கு ஒரு சிலர், அதுவும் எங்காவது மூலையில்தான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா கூட்டம் என்றால், அவர் பின்னால்  ஓடிக்கொண்டிருக்கும் அதே காவல் துறை, கலைஞர் கூட்டங்கள் என்றால் தலைகாட்டுவதே இல்லை. ஏன்-?

கலைஞர் கூட்டங்களில் கலவரங்கள், விபரீதங்கள் நடக்க வேண்டும் என்று அரசும், காவல் துறையும் நினைக்கின்றனவா?

அப்படிதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆட்சியில் யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை என்பது வரலாறு. இன்று ஆட்சியில் இருப்போர் நாளை வீட்டுக்குப் போவது இயல்பு.

இன்று காவல் துறையில் ஒதுக்கப்படும் கலைஞர், நாளை முதல்வர். அப்போது இதே காவல்துறை அதிகாரிகள் எந்த முகத்தோடு கலைஞர் முன் நிற்பார்கள் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஜெயலலிதா என்றால் வெண்ணெய். கலைஞர் என்றால் சுண்ணாம்பா?

தளபதி ஸ்டாலின் சொல்வதைப்போல நாளை நீங்கள் இதற்கெல்லம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

Pin It