aam aadmi office

தில்லியிலும், தமிழ் நாட்டிலும், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்து, இந்து மதக் குழுக்களின் ஊடாக மீண்டும் பா.ஜ.க., தன் சுய உருவத்தைக் காட்டி இருக்கிறது.

தில்லியின் எல்லைக்கு அருகில் உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் கௌசாம்பியில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தை 08.01.2014 அன்று 40 பேர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி யிருக்கிறது.

இந்தக் கைங்கரியத்தைச் செய்தது ‘இந்து ரக்ஷா தள்’ என்ற இந்து மத வெறிக்குழு. என்ன காரணம்?

ஆம் ஆத்மி கட்சியின் முன்னணிப் பொறுப்பாளரான பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் இருந்து இராணுவம் திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று அண்மையில் கூறிய கருத்துதான், ஆம் ஆத்மி அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டதற்குக் காரணமாம்.

இங்கே காஷ்மீர் சிக்கலுக்குள் நாம் நுழையவில்லை. நமது கேள்வி இந்நாட்டில் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், இருக்கிறதா, இல்லையா என்பது குறித்துதான்.

கருத்துச் சுதந்திரம் ஒருவழிப் பாதையன்று, அது இருவழிப் பாதை. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வரும், போகும் அது விவாதங் களாக மாறுவதும் கூட அடுத்த கட்டத் திற்கான நகர்வாக இருக்க முடியும்.

மாறாக என் கருத்துக்கு எதிர்க் கருத்தே சொல்லக்கூடாது என்று அடிதடி மிரட்டல் செய்வதெல்லாம், நாகரிகச் செயலாக இருக்க முடியாது. இது ஒரு வகையான சண்டித்தனம். அதைத்தான் தில்லியில் பா.ஜ.க., செய்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் பொத்தாம் பொதுவாக, இத்தாக்குதலுக்கும் பா.ஜ.க.,வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிறார்.

ஆனால் பாதிப்புக்கு ஆளான ஆம் ஆத்மி பிரசாந்த் பூஷன் “தாக்குதலை நடத்தியவர்கள் இந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள். இதில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில், ஒருவரான விஷ்ணுகுப்தா இதற்கு முன்னும் என்னைத் தாக்கியுள்ளார். தேஜிந்தர்கன்னாவும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்” என்று தெளிவாக பா.ஜ.க.,வை அடையாளம் காட்டுகிறார்.

வன்முறை என்பது பா.ஜ.க.,வுக்கு ஒன்றும் புதியதன்று.

அயோத்தியில் இராமர் கோயில் இடிப்பு, கோத்ரா எரிப்புச் சம்பவம், முசாபர்பாத் கலவரம் இவை எல்லாம் பா.ஜ.க.,வின் வன்முறைக் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டு.

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தைத் தாக்கியதில் காஷ்மீர் கருத்து மட்டு மில்லை காரணம். மோடி அலை என்று ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய மாய பிம்பத்தை ஆம் ஆத்மி அடித்து நொறுக்கிவிட்டது.

மோடிதான் அடுத்த பிரதமர் என்கிறது பா.ஜ.க. இந்தியத் தலைநகர் மக்கள் பா.ஜ.க.,வை ஊசலாட விட்டுவிட்டு, ஆம் ஆத்மியை இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டார்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில்.

காங்கிரஸ் துணையுடன் ஆட்சி யமைத்த ஆம் ஆத்மியின் அதிரடி நட வடிக்கைகளால் மக்களின் ஆதரவு அதற்குக் கூடுகிறது.

இந்நிலையில் 300 இடங்களில் ஆம் ஆத்மி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்று வேறு அக்கட்சி அறிவித்துவிட்டது. இது போதாதா?

காங்கிரசைவிட ஆம் ஆத்மிதான் இப்பொழுது பா.ஜ.க.,வுக்குப் பெரும் சவாலாகவும், பெரும் பூதமாகவும் கிளம்பிவிட்டது.

மோடியின் பிரதமர் கனவை உடைப்பது ஆம் ஆத்மி கட்சி என்பதை ஆத்திரத்துடன் புரிந்து கொண்டதால் தான், பா.ஜ.க., ஆம் ஆத்மியை மிரட்டி அடக்கி ஒடுக்கிவிட வன்முறையைக் கையாண்டு இருக்கிறது.

இந்தக் கோபத்திற்குப் பிரசாந்த் பூஷன் பேசிய கருத்து ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

வாதத்திற்காக எடுத்துக் கொண்டால்கூட, பிரசாந்த் பூஷன் மாற்றுக்கருத்து கூற உரிமை இல்லையா? அப்படிச் சொல்லும் போது அதற்கான மாற்றுக்கருத்தைக் கூற பா.ஜ.க.,வுக்கும் உரிமை உள்ளதே.

அதைவிட்டுவிட்டு, யார் கருத்துச் சொன்னாலும், நாக்கை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று இந்து சாமியார்களைச் சொல்லச் செய்வதும், இந்து அமைப்புகளின் மூலம் வன் முறையைக் கையாள்வதும், சர்வாதி காரத்தின் வடிவமாக இருக்குமே ஒழிய, சனநாயகத்தின் வழியாக இருக்காது.

இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில், ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கும் பா.ஜ.க., அச்சுறுத்தலாக உருவெடுக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீரபாண்டியன் ஒரு சான்றாக இருக்கிறார்.

எந்த ஒரு மனிதனுக்கும் தனிப்பட்ட அரசியல் சார்பும், கருத்தும் இருப்பது இயல்பு. ஆனால் ஒரு தொலைக் காட்சியில் அதன் அரசியல் விமர்சகர், தன் கருத்துச் சார்பை ஒதுக்கிவைத்து விட்டு, நடுநிலையோடுதான் நிகழ்ச்சியை நடத்துவார். அப்படித்தான் வீரபாண்டியன் நடத்திய அனைத்து அரசியல் கலந்துரை யாடல், விவாத நிகழ்ச்சிகள் இருந்தன. இதை ஊரறியும், நாடறியும், மக்கள் அறிவார்கள்.

மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பாக, முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்து உண்மை அறியும் குழு அளித்த அறிக்கை மீது வீரபாண்டியன் சில விமர்சனங்களைக் கூறியுள்ளார். இது அவரின் கருத்துச் சுதந்திரம்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.,வின் மாநில அமைப்புச் செயலாளர் கி. சர்வோத்தமன், சன் குழும மேலாண் இயக்குனருக்கு 23.12.13 அன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சன் வீரபாண்டியன் பேச்சு இருபிரிவினரிடம் மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதனால், அவர் அந்த தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக்காது என்று கூறியிருக்கிறார்.

இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வீரபாண்டியன் முன்னின்று நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பா.ஜ.க., கலந்து கொள்ளாது என்றும் எழுதி இருக்கிறார்.

வீரபாண்டியன் பேச்சு இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் என்று சொல்லும் பா.ஜ.க.,வின் பேச்சு என்ன சமரசத்தையா ஏற்படுத்துகிறது-?

இந்தக் கடிதத்திற்குப் பின்னர் வீரபாண்டியன் முன்நின்று நடத்தும் நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை.

பா.ஜ.க.,வின் இந்த கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித் துள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில், “ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடுநிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென்பதுதான் அறம். அதனா லேயே அவருக்குச் சொந்தக் கருத்தோ அல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது. இதர குடிமக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும், ஊடகவியலாளர் களுக்கும் உண்டு” என்று கருத்துரிமைக் கான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள்.

இன்னமும் நாடாளுமன்றத் தேர்தல் வரவில்லை. இன்னமும் மோடி பிரதமர் ஆகவில்லை. ஆட்சிக்கு வராமல் இருக் கும்போதே, பா.ஜ.க., தில்லியிலும், தமிழகத்திலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெறிப்பதும், வன் முறைக்கு வித்திடுவதுமாக இருந்தால்...

அது ஆட்சிக்கு வந்தால் இன்னமும் என்னவாகும்? ஆட்சி எப்படி இருக்கும்? மக்கள் எப்படி இருப்பார்கள்? என்ன வாகும் நாடு?

ஆம் ஆத்மியை மட்டுமில்லை, தன் வன்முறையால் நாட்டையே அச்சுறுத்துகிறது சங் பரிவாரம்.

Pin It