ஆரியத்தின் எதிர்ச்சொல்லே திராவிடம். ஆனால் இன்றைய அ.தி.மு.க., ஆட்சியில், ஆரியம் ஒளிந்து கொள்வதற்கு ஏற்ற மறைவிடமாகத் திராவிடம் ஆகிவிட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், திராவிட இயக்கக் கோட் பாடுகளுக்கு எதிரான போக்குகளே தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. அண்மைக்கால மூன்று நிகழ்வுகள், அதனை நூற்றுக்கு நூறு உறுதி செய்துள்ளன.

chidambaram temple

1. தொடங்கப்பட விருக்கும் பன்னோக்கு மருத்துமனை நியமனங்களில், இட ஒதுக்கீடு இல்லை என்ற அறிவிப்பு.

2. சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் வழக்கில், தமிழக அரசின் மெத்தனப்போக்கு.

3. சேதுக் கால் வாய்த் திட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில், தமிழக அரசு எடுத்துள்ள நிலை.

இவை மூன்றும், மிக வெளிப்படையாக, இன்றைய அ.தி.மு.க., அரசு, தமிழினத்திற்கும், சமூக நீதிக்கும் நேர் எதிரானது என்பதைப் பறை சாற்றியுள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக, 1927ஆம் ஆண்டே ‘கம்யூனல் ஜி.ஓ’ என்னும் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அரசு ஆணையைத் தமிழகம் வெளியிட்டது. அவ்வாணை 1929ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

ஆனால் இன்று அதற்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில், ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய சட்டமன்றக் கட்டிடமாக எழிலார் மாளிகையன்று, கலைஞரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. அந்த அழகுக் கட்டிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனிப்பாரற்றுக் கிடப்பதை நாடு அறியும். மக்களின் வரிப்பணத்தைத் திட்டமிட்டு வீணடித்த முதலமைச்சர், இப்போது அதனை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற, மேலும் பல கோடி ரூபாயைச் செலவழித்து வருகின் றனர்.

அம்மருத்துமனைக்கான இயக்குனர், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை, 27.12.13 அன்று அரசு நியமித்துள்ளது. 83 பதவிகளுக்கு 07.01.14ஆம் நாளுக்குள் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 12 பக்கங்களைக் கொண்ட அந்த அறிவிப்பு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என்று மிக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன என்றும், ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக் கலாம் என்றும் அவ்வறிவிப்புக் கூறுகின்றது.

போனால் போகட்டும் என்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், அட்டவணைச் சாதியினர், பழங்குடியினர் ஆகியோரும் கூட விண்ணப்பிக்கலாம் என்கிறது அரசு. அடடா, எவ்வளவு கருணை!

அரசுப் பணி நியமனத்தில், இடஒதுக்கீட்டிற்கு எதிரான, இப்படி ஓர் அறிவிப்பு இன்றுவரை வந்ததில்லை.

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும், இட ஒதுக்கீடு கோரி இங்கு நடந்த போராட்டம் மிக நீண்டது. அதனை இன்றைய முதலமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்தவர்கள் எவரும் அவர் அருகில் இருப்பதாகவும் தெரியவில்லை. இருந்தாலும், அவரிடம் எடுத்துரைக்கும் துணிவு யாருக்கும் வரப்போவதில்லை. அதனால், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று எல்லாவற்றிலும் அடாவடியாக ஜெயலலிதா நடந்து கொள்கிறார்.

ஏற்கனவே, இட ஒதுக்கீட்டின் பெரும்பான்மை உரிமைகளை நான் இழந்து நிற்கின்றோம். நாட்டில் உள்ள பணிகளில், 85 விழுக்காட்டிற்கும் மேலே, தனியார் நிறுவனங்களில்தான் உள்ளன. மீதமிருக்கும் 12 15 விழுக்காடு அரசு வேலைகளுக்குத் தான் இடஒதுக்கீடு உள்ளது. அவற்றுள்ளும், நீதிபதிகள், துணை வேந்தர்கள், மிக மூத்த உயர் பதவிகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், எங்கெல்லாம் அதிகாரம் உள்ளதோ, அங்கெல்லாம் இட ஒதுக்கீடு இல்லை. பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீட் டிற்கு இடமில்லை.

தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, தன்நிதிக் கல்லூரிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் கூட இன்று இட ஒதுக்கீடு இல்லை. 1929 முதல் அரசுப் பணிகளிலும், 1940 முதல் கல்விக் கூடங்களிலும் நாம் பெற்றிருந்த இடஒதுக்கீட்டு உரிமைகள் அனைத் தையும் ஒவ்வொன்றாக இழந்து வருகின்றோம் என்னும் உண்மையைக் கூட இன்றைய இளைய தலைமுறையினர் உணராமல் இருக்கின்றனர் என்பது மற்றொரு வேதனை.

உயர் சிறப்பு மருத்துவமனை என்பதால் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அரசு கருதுகிறதாம். உயிர்காக்கும் பணி என்பதால், இட ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர், தகுதியற் றவர்களாக இருந்துவிடக் கூடுமாம். இப்படி எல்லாம் எழுதுகிறது, ஆளுங் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் இந்த வரிகள் எவ்வளவு காயப்படுத்துகின்றன, இழிவு படுத்துகின்றன என்பதை எழுதியவர்கள் உணர்ந்தார்களா என்று தெரியவில்லை. இப்படி எழுதியவரே கூட, ஒரு பிற்படுத்தப்பட்டவராக இருக்கலாம். உயர் சிறப்பு மருத்துவமனையில் உயிர்காக்கும் பணி நடைபெறுகிறது என்றால், பிற மருத்துவமனைகளில் எல்லாம் வேறு என்ன பணி நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை.

பிற அரசு மருத்துவமனை மருத்து வர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்ததைப் போல ஏறத்தாழ இரு மடங்கு ஊதியம் இங்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஊதிய முரணுக்கு என்ன காரணம் என்பது விளக்கப்பட வில்லை.

எந்த மருத்துவமனையாக இருந்தாலும், பணி நியமனம், ஊதியம் ஆகியன அரசின் மற்ற துறைகளில் அமைவது போன்றே இருக்க வேண்டும் என்றுதான், 01.01.2012ஆம் நாளிட்ட அரசு ஆணையே கூறுகின்றது. மருத்துவப் பணி நியமன ஆணையத்தின் நிலையும் அவ்வாறாகவே உள்ளது.

பிறகு எப்படி ஓர் அரசு, இவ்வளவு வெளிப்படையாகச் சட்ட மீறலைச் செய்கிறது என்று புரியவில்லை. எனவே இந்த அத்துமீறலை, மக்கள் மன்றத்திற்கு மட்டுமின்றி, நீதி மன்றத்திற்கும், கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து எழுந்துள் ளது.

எனினும், மக்கள் மன்றத்தையே முதன்மையாக நம்ப வேண்டும் என்ற படிப்பினையை அண்மைக்கால நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்குத் தந்துள்ளன.

தில்லை நடராசர் கோயில் வழக்கு, காஞ்சி சங்கர மடம் சங்கர ராமன் கொலை வழக்கு ஆகியன அடுத்தடுத்த அதிர்ச்சிகளைத் தந்துள்ளன. சிதம்பரம் கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்களின் கைகளுக்கே சென்றமைக்கு, ஜெயலலிதா அரசின் திட்டமிட்ட செயல்பாடின்மையே காரணம் என்பதை அனைவரும் அறிவோம்.

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கு மிகப்பழமையானது. 1885ஆவது ஆண்டே இதுகுறித்து நீதிபதி முத்துச்சாமி அய்யரும், ஷெப்பர்டு என்கிற வெள்ளைக்கார நீதிபதியும் ஓர் அழுத்தமான தீர்ப்பினை அளித்துள் ளனர். சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்தும் அன்று, தீட்சிதர்கள் இந்து மதம் சாராத தனிப்பிரிவினரும் (separate denomination) அல்லர் என்பதே அத்தீர்ப்பு. இதுகுறித்து மிக விளக்கமாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிதம்பர ரகசியம் என்னும் நூலில் செய்திகளைத் தந்துள்ளார். மீண்டும் 1951இல் இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்தது. அப்போதும் அதே மாதிரியான தீர்ப்புதான் வழங்கப் பட்டது. இறுதியாக 2006ஆம் ஆண்டு, அழுத்தம் திருத்தமாக நீதிபதி பானுமதி தன் தீர்ப்பை எழுதியிருந்தார். அப்போதும் அதனை ஏற்காத தீட்சிதர்கள், மறு முறையீடு செய்தார்கள். அதனை ஏற்று இரண்டு நீதிபதிகள் விசாரணை செய்து, நீதிபதி பானுமதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதனை நீதிமன்ற மொழியில், ஒருங்கிணைந்த தீர்ப்புகள் (concurrent judgement) என்று கூறுவர். ஆனால்,     அதையும் தாண்டி, உச்சநீதிமன்றத்திற்குத் தீட்சிதர் கள் சென்றனர். அந்த மேல்முறையீட் டில்தான், சுப்பிரமணியன் சாமி தன்னை இணைத்துக் கொண்டு வாதாடினார். தன் வாதுரையில், சிவபெருமானோடு வானத்தில் இருந்து, நேரடியாக இறங்கி வந்தவர்கள் தீட்சிதர்கள் என்று ‘அறிவியல் பூர்வமான’ செய்தியை முன்வைத்தார். நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ‘சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?’ என்று கலைஞர் கவிதை பாடியதாக, உண்மைக்கு முற்றிலும் புறம்பான ஒரு செய்தியை முன்வைத்தார். அதனையும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இறுதியில் சுப்பிரமணியன் சாமியும், தீட்சிதர்களும் விரும்பிய தீர்ப்பையும் அளித்து விட்டது.

அதனால்தானோ என்னவோ, தீர்ப்பு வந்த அன்று, சிதம்பரம் கோயிலில், சுப்பிரமணியன்சாமி பெயரிலும், நீதிபதிகளின் பெயர்களிலும் தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை செய்திருக்கிறார்கள். தங்களின் வாதத் திறமையால் இவர்கள் வெற்றி பெற்றுவிட வில்லை. எதிர்த்து வாதிட வேண்டிய தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் யாரும் அங்கு அனுப்பப்பட வில்லை. இளைய வழக்கறிஞர் ஒருவர், மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்க, நீதிபதிகள் அவரைத் தேடிக் கண்டு பிடித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு முழுக்க முழுக்கத் தமிழக அரசே காரணம். அரசின் முடிவு என்று பார்க்காமல் கலைஞர் அரசு எடுத்த முடிவு என்றே ஒவ்வொன்றையும் பார்ப்பதால் இது போன்ற அவலங்கள் ஏற்படுகின்றன. அது மட்டு மின்றி, தீட்சிதர்கள் கையில் கோயில் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்றே அரசு கருதி இருக்கும் என்றும் நாம் கருதலாம்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் தீர்ப்பு வந்த மறுநாள், சிதம்பரம் தீட்சிதர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்திற்குப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்த அந்நிகழ்வை அனைத்து நாளேடுகளும் படத்துடன் வெளியிட்டிருந்தன. எனவே அவருடைய ஒரு பக்கச் சார்பு தெளிவாகவே வெளிப்படுகின்றது.

தீட்சிதர்கள் வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தது. சேதுக்கால்வாய் வழக்கிலோ எதிர் நிலையையே எடுத்திருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள்தான், சேதுக்கால்வாய்த் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டியவர். பிறகு ஏன், அண்ணாவைக் கட்சியின் பெயரில் வைத்திருக்கும் அ.தி.மு.க., எதிர்க்கிறது என்ற ஐயம் யாருக்கும் எழக்கூடாது. ஏனெனில் அண்ணாவின் கொள்கைகளை எதிர்ப்பதற்குத்தானே அவர் பெயரை அவர்கள் கட்சியில் வைத்திருக்கிறார்கள். அண்ணாவை மட்டுமன்று, எம்.ஜி.ஆரையும் உள்ளூர எதிர்ப்பவர்தான் ஜெயலலிதா. அதனால்தான், சிதம்பரம் கோயிலைத் தீட்சிதர்களிடம் இருந்து மீட்க, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சட்டத்தை இன்று அவர் முறியடித்திருக்கிறார். எனவே கலைஞரைத்தான் ஜெயலலிதா எதிர்க்கிறார் என்று எவரேனும் தவறாகக் கருதிக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை உடனே கைவிட வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என எல்லோருமே ஜெயலலிதாவின் எதிரிகள்தான். திராவிட இயக்கக் கொள்கைகள் அனைத்துமே அவருக்கு எதிரானவைதான்.

உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு செய்திருக்கும் மனுவில், சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கு எதிராக, இரண்டு செய்திகள் கூறப் பட்டுள்ளன. ஒன்று, பச்சோரி கமிசன் அறிக்கையின் பரிந்துரைப்படி இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பது. இன்னொன்று, இராமர் பாலம் புராதனப் புனிதச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது.

பச்சோரி ஆணையத்தை எந்த மத்திய அரசு நியமித்ததோ, அந்த அரசே இப்போது அதனை ஏற்பதற்கில்லை என்று அறிவித்து விட்டது. ஆனால், ஜெயலலிதா அதை ஏற்க வேண்டும் என்கிறார். ராமர் பாலத்தைப் பொறுத்தளவு அது முற்போக்குச் சிந்தனையாளர் களின் கருத்துக்கு மாறுபட்டது மட்டுமன்று, ஜெயலலிதாவின் முந்தைய கருத்துக்கே மாறுபட்டது. அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, சேதுக்கால்வாய்த் திட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் அ.தி.மு.க., அத்திட் டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்து வோம் என்று உறுதி கூறியுள்ளது. இன்று முற்றிலும் எதிரான நிலையை அவர் எடுத்திருக்கிறார்.

கட்சி வேறு பாடுகளைக் கடந்து, சமூக நீதியிலும், தமிழின மேம்பாட்டிலும் அக்கறை உடையவர்கள் அனைவரும் ஓரணியாய்த் திரண்டு, ஜெயலலிதா அரசின் ஆரிய ஆட்சியினை எதிர்க்க வேண்டிய நேரம் இது.

Pin It