1.     இருண்டகால கருவறையிலிருந்து

உயரும் ஒளிக்கவிதை

மகாவானக் கீற்றிலிருந்து

இறங்கிவந்த ஒலிவிதை

பெரும்பிரளய கனல் கடலில்

அமர மகா விருட்சம் -

செந்தமிழ் கிளைகளில் பறந்திறங்கிய

கருங்காகங்களும் சிட்டுக்குருவிகளும்

யானைகொத்திப் பறவைகளும்

பாரதியின் மாய ஸ்பரிசத்தில்

தேன்தமிழ் குயில்பாட்டு!

2.     பச்சைமானுட கவியின் காயம்பட்ட ஆத்மா

சூன்ய ஆகாசத்தில் செயற்கைகோளாக சுழன்றது.

அவனின் பருந்துக்கண்

பூவுலக செடி, கொடி, பறவை

மிருக, மனித, பூச்சி, புழுக்களை கண்ணுற்று

செந்நீர் கொட்டும் வைரவாக்காய்

உலக மனிதநேய கவிப்பாட்டாய்

உருவம் கொண்டது!

3.     பெருச்சாளி கவிஞர்களும்

பச்சோந்தி கவிகளும்

வெளிஆதிக்க ஒற்றர்களும்

இரகசிய பதுங்கு மடைகளில் உண்டு கொழுத்தனர் -

பிரபஞ்சகவி கருங்காளியின் திரிசூலமெடுத்தான்

அந்நிய சக்திக்கு எதிராக பராசக்தி!

4.     அகக்கனலில் சொந்தப்பூணூல் எரித்த

கலகக்கார மகாகவி

பஞ்சமர்க்கும் பவித்திர நூல் அணிவித்தான்

ஜாதிப்பிரஷ்ட்டு கசப்பு நீர்ச்சுழலில் மூழ்கினான் -

கவிஞனின் கனல் முத்திரை பதித்த மண்ணில்

இன்றும் ஜாதிக்கொடுமையின் பெருஞ்சுவர்

தலித் மக்களுக்கு மகாக் கொடுமை!

5.     பாரதியின் ஒரு கண் சூரியன் - மறுகண் சந்திரன்

எல்லை அடையாளக்கோடில்லா ஓருலகம்

தங்க பட்டையும் வெள்ளிசங்கிலியும் கழுத்தில் கட்டிய

அடிமை நாய்கள் இல்லாத உலகம்

மனித ஏற்றத்தாழ்வும் பணாதிகாரப் பிசாசும்

இல்லாத உலகம் -

தனியரு மனிதனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

6.     வெளியாதிக்க வெள்ளை கருமேகம் சூழ்ந்த ஆகாசத்தில்

சுதந்திர இடிமின்னல் நாதமாக

காலத்திற்கு முன்னே திக்கெட்டும் முழுங்கிய கவி -

காலத்தை வென்ற கரும்பாறை கனல் சிற்பம்

ஜனகண அதிகாரத்தின் ஐந்தாவது காவல் தூண் -

ஆடுவோமே - பள்ளு பாடுவோமே;

ஆனந்த சுதந்திரமடைந்துவிட்டோமென

7.     ஆடலும் பாடலும் முடித்து அரங்கத்தைவிட்டு

மாயன பூமியை நோக்கி மகாப்பிரயாணம்

சுடலையில் எரிந்த மகாகாவியம்

சாட்சியங்களாக பதினாலுபேர் மட்டும்

அவர்கள் மனிதர்களல்ல...

ஈரேழு பதினாலு உலகின் பிரதிநிதிகள்!

8.     இந்த இருண்டகாலம் -

உலகமயமாதல் என்னும் மகாமாரியின் கொடுங்காலம்

எழுதுகோலாய் உயிர்த்தெழுந்த பாரதியின்

பராசக்தி பிரளயகால தாண்டவம் -

எந்த பெருங்கழுகு

இந்த பூவுலக கருமுட்டையை

கொத்திவிழுங்க அடைகாக்கிறது?

எந்த சாத்தான், சைத்தான், கலிபுருடன் ஆகிய மூவர் கூட்டணி

எந்த வம்சத்தின் மகாபலிக்கு

கொள்ளிவைக்க காத்திருக்கிறது?

எந்த தீவிரவாத சக்திகள்

உலக அமைதியை பதுங்கு குழிகளில்

அடக்கம் செய்ய காத்திருக்கிறது?

எந்த இயற்றை சுற்றுச்சூழல் அழிவு சக்திகளின் கைவாள்

பிரபஞ்சத்தாயின் சிரசறுக்க முனைகிறது?

மனித குலுத்தை வேரறுக்கவிருக்கும்

அணு, இரசாயன நோய்க்கிருமி ஆயுதங்கள் உள்ள

பதுங்கு அறைகளின் திறவுகோல்

எந்த வெறிபிசாசின் கைகளிலிருக்கிறது?

எந்த பிரளயத்தின் முடிவிலும்

ஒரு வெண்புறா வானத்தில் வட்டமிட்டு

பசுமை கண்டடையவே செய்யும்.

Pin It