மக்கள் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள், மாற்று மதத்தினர், நாத்திகர்கள், காவல் துறையினர், நீதிமன்றங்கள், அரசு அதிகாரிகள் குறிப்பாக அறநிலையத்துறை அதிகாரிகள், அறிவியல் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பெண்கள்.

இந்தப் பட்டியலில் ஏதேனும் இன்று விடுபட்டிருக்கலாம். இனி வரும் காலங்களில் ஏதேனும் சேர்க்கப்படலாம். இது ஒரு நீளும் பட்டியல்.

h raja on court and policeஇப்பரந்துபட்ட பட்டியல் போற்றப்படுவதற்காக இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. எச்.ராஜா என்கிற ஒருவரால் தொடர்ந்து தூற்றப்பட்டதற்காகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களையும் நாகரிகமின்றி நாவால் தூற்றுவார். நாட்டில் சச்சரவுகளை அரங்கேற்றுவார். நாராசமான வகையில் சுயவிளம்பரம் நாடுவார். அவர்தான் எச்.ராஜா.

வாயைத் திறந்தாலே தகுதி, திறமை, ஒழுங்கு என்று பேசும் கட்சியினரின் தேசியச் செயலாளரின் தரம் இப்படி இருக்கிறது என்றால் அந்தக் கட்சி முன்வைக்கும் தகுதி, திறமை, ஒழுங்கு எல்லாம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் உணரவேண்டும். இவர்களை உதறித்தள்ள வேண்டும்.

இவ்வளவு அத்துமீறல்களைச் செய்பவர்களோடு தான் இந்த அரசு ஒத்துப்போகிறது. இப்படிப்பட்ட அரசு இருப்பதால் தானே இவர்களும் ஆட்டம் போடுகிறார்கள்.

இவர்மீது வழக்குத் தொடுப்பதென்றால் எத்தனை வழக்குகள் தொடுப்பது, அவற்றை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிப்பது? ஜெயலலிதாவைப் போலவே இவருக்கும் ஒரு சிறப்பு நீதிமன்றம் தான் அமைக்க வேண்டும் போலிருக்கிறது. அவாளுக்கெல்லாம் நீதிமன்றங்கள் கூட தனியாகத் தேவைப்படுகிறது.

இந்த மக்களுக்கு ‘இந்து’ மதம் பிடிக்கவைத்து, அவர்களை உணர்ச்சிவயப்படவைத்து, மதக்கலவரங்கள், மசூதி இடிப்புகள் என வடநாட்டில் செய்தது போலவே தமிழ்நாட்டிலும் செய்து ஆட்சியமைக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கியே அவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். இம்முயற்சியில் தமிழ்நாட்டில் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்கள். அதனால் இதை அவர்கள் இங்கு செய்வது கடிதினும் கடிதுதான்.

ஆனால் இன்று எச்.ராஜா தொட்டிருக்கும் விசயத்தை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாது. ஆலய மீட்பு என்கிற பரப்புரையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்பரப்புரையின் ஒரு பகுதியாகவே இன்று அறநிலையத் துறை அதிகாரிகளை அவர் வழக்கம் போல் நாகரிகமற்றுச் சாடியிருக்கிறார்.

அலுவலகத் தோழி ஒருமுறை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய அண்ணனின் முதல் மாத ஊதியத்தை அவர்களுடைய பெற்றோர்கள் அப்படியே கோவில் உண்டியலில் போட்டுவிட்டார்களாம். இந்த மக்களை முன்னேறவிடாமல் தடுத்த அதே கோவில்கள் அவர்கள் முன்னேறுகிற போது முதலில் பங்கினைப் பெற்றுக் கொள்கின்றன. இன்னும் இதைத் தெளிவாகச் சொன்னால் பார்ப்பனர்கள் அந்தப் பங்கினைப் பெற்றுக் கொள்கின்றனர். இப்படி மக்களுடைய பணம் எல்லாம் அறியாமையால் ஆண்டவன் பெயரைச் சொல்லி அர்ச்சகனுக்குப் போவதைக் கண்காணிக்க வந்த அறநிலையத் துறையை எப்படியாவது அகற்றியே ஆக வேண்டுமென்று அவாள் ஆலயமீட்புப் போராட்டத்தைக் கையில் எடுத்து எச்.ராஜாவின் மூலமாக அம்புகளைத் தொடுக்கின்றனர்.

இந்துக்களை ஒருங்கிணைக்க அவர்கள் செய்யாத முயற்சி இல்லை. இந்து மகாசபையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே என்பவர் இந்துக்களை ஒருங்கிணைக்க முசோலினியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இங்கு அய்யா பெரியாரைக் கூடச் சந்தித்திருக்கிறார். இந்து மக்களை ஒருங்கிணைக்க RSS வெளியிடும் இதழுக்கு ‘Organizer’(புரட்சியாளர்கள் கையாண்ட சொல்) என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் பேசுகிறார். இந்துக்களை ஒருங்கிணைக்கும் இந்த அரும்பணியின் பயிராக விளைந்தவர் தான் பண்பாளர் எச்.ராஜா.

 “இந்து மக்களே ஒன்றுபடுங்கள்” என்று அவர்கள் தொடர்ந்து முழக்கமிடுவது மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காக அன்று, மாறாக மக்களை மேலும் சாதிய வேற்றுமைகளோடு பிரித்து வைப்பதற்காக, கோவில் கல்லாப்பெட்டியைக் கைப்பற்றுவதற்காக.

எச்.ராஜாவுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு - “யாகாவாராயினும் நாகாக்க”

Pin It