குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி நிற்கிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மக்கள் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கங்கள் என்று தமிழகமே கொந்தளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கட்சிகளை கொடூரமாக ஒடுக்கின. அசாமில் 6 பேரும், உ.பி.யில் 19 பேரும், கருநாடகாவில் 2 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். டெல்லியில் சங்கிகள் வெளி மாநிலத்திலிருந்து வன்முறையாளர்களை இறக்குமதி செய்து இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொலை வெறியாட்டத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்து விட்டனர்.
காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி, அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ‘ராமன்’ கோயிலைக் கட்ட நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஆணவத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றி விடலாம் என்று இறுமாப்புடன் செயல்பட்ட ‘மோடி-அமித்ஷா’ அணி இப்போது சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக் கிறது. அமெரிக்காவின் வெளி விவகாரத் துறை, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தியா - மத மைனாரிட்டி மக்களுக்கு எதிராக தவறான பாதையில் செயல்படுவதை சுட்டிக்காட்டி யுள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் குடியுரிமை பதிவுச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு கேரளா, மே. வங்கம், பஞ்சாப், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், புதுச்சேரி, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களும் இந்தச் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்த நிலையில் நடுவண் ஆட்சி நிறைவேற்றிய சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்கள் மீது திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தையும் மாநிலங்களின் குடியாட்சி உரிமையையும் பறிக்கும் ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி, 1989, 1991, 1998, 1999, 2004 தேர்தல் அறிக்கையில் குடியுரிமைப் பதிவேட்டை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் அசாம் மாநிலத்தைப் போல் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றுவோம் என்று கூறியிருந்தது. இப்போது தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து விவாதிக்கவில்லை என்று மோடி கூறுகிறார். ஆனாலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க அமைச்சரவை அவசரமாகக் கூடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குடியுரிமைப் பதிவேட்டுக்கும் மக்கள் தொகை பதிவேட்டுக்கும் உள்ள தொடர்புகளைப் பிரித்து பார்க்க முடியாது. குடியுரிமைப் பதி வேட்டை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுதான் - மக்கள் தொகைப் பதிவேடு தயாரிப்பாகும். ஏற்கனவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற ‘சென்சஸ்’ எடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான தேவை குறித்து கேள்வி எழுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் ஒதுக்கி வைத்துள்ள மத்திய அரசு மீது, தமிழ்நாட்டு மக்கள் சந்தேகமும் அச்சமும் அடைகிறார்கள். குறிப்பாக அசாமில் குடியுரிமைப் பதிவேடு தயாரிக்கும் முயற்சி கடும் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் பெரியார் மண்ணாகிய தமிழ்நாடு தான் இந்தியாவை ‘இந்து இராஷ்டிர மாக்கும்’ முயற்சியை முறியடிக்கத் தீவிரமாகப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.
மனித சங்கிலி
மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முன்முயற்சி எடுத்து மக்கள் ஒற்றுமை இயக்கம் ஒன்றை விசாலாட்சித் தோட்டப் பகுதியில் உருவாக்கி குடியுரிமைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி (1.3.2020) காலை 11 மணியளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 45 நிமிட நேரம் மனித சங்கிலியில் மக்கள் கைகோர்த்து குடியுரிமை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சட்டத்தின் ஆபத்துகளை விளக்கியும், கணக்கெடுப்புகளை புறக்கணிக்கக் கோரியும் வலியுறுத்தும் துண்டறிக்கைகளை மக்களிடம் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.