குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள, அல்லது வழக்குகளை எதிர் கொண்டுள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று, நாட்டின் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை கூறியிருக்கிறது.

இங்கே குற்றப்பின்னணி என்பது தெளிவுபடுத்தப் படவில்லை. நாட்டின் நலன், மக்கள் பிரச்சினை களுக்காக மக்களைத் திரட்டிப் போராடும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறை செல்கிறார்கள்.

போராடினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் இவர்கள் குற்றப்பின்னணி உடையவர்களா? இவர்களுக்கும உச்சநீதிமன்ற அறிவுரை பொருந்துமா?

உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் அடங்கிய அமர்வு தெளிவாகக் கூறுகிறது, ‘தீவிரக்குற்ற வழக்குகள்’ ‘ஊழல் வழக்குகள்’.

பாபர் மசூதி இடிப்பு, ரயில் எரிப்பு, என்கவுண்டர் கொலை, மதக்கலவரங்களைத் தூண்டுவது போன்றவைகள் தீவிரக் குற்ற வழக்குகளாகக் கருதப்பட வேண்டியவை.

மாட்டுத் தீவன ஊழல், பினாமி பெயரில் சொத்துகள், ஒரு ரூபா சம்பளம் வாங்கிக் கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்து நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஊழல்களும் குற்றப்பின்னணியாகத்தான் கருதமுடியும்.

இத்தகைய குற்றப்பின்னணி உள்ளவர்களை பிரதமலோ, மாநில முதல்வர்களோ அமைச்சர்கள் ஆக்கக் கூடாது என்கிறது நீதிமன்றம்.

உமாபாரதி, நிதின் கட்காரி, உபேந்திர குஷ்வாஹ், நிகல் சஞ்ச் ஆகிய குற்றப்பின்னணியினர், மோடி அமைச்சரவையில் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, குற்றப்பின்னணியுடைய புருசோத்தும சோலங்கி, பாபு பொக்கிரியா போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படியே இப்பொழுதும் இருக்கப் போகிறாரா? அல்லது களை எடுக்கப் போகிறாரா?

அமைச்சர்கள் மீது குற்றப்பின்னணி என்பது ஒரு புறம் இருக்கட்டும். பிரதமர் அல்லது மாநில முதல்வர்களே குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தால், அவர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் நீதிமன்றம்.

Pin It