lalu nitish 350ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தை விடாது சொல்லி வருகிறார். “அமெரிக்காவில் இருப்போர் அமெரிக்கர்கள் என்றும், இங்கிலாந்தில் இருப்போர் இங்கிலீஷ்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அப்படி இந்துஸ்தானத்தில் இருப்போர் எல்லாம் இந்துக்களே” என்கிறார் அவர். இதில் இரண்டு தவறுகள் உள்ளன. ஒன்று தர்க்கரீதியானது, மற்றொன்று சட்ட ரீதியானது.

அமெரிக்கர்கள் என்பது இடம் சார்ந்து அழைக்கப்படுவது, இங்கிலீஷ்காரர்கள் என்பது மொழி சார்ந்து அழைக்கப்படுவது. ஆனால், இந்துக்கள் என்பது மதம் சார்ந்தது. முந்தியதற்கும் இதற்கும் சம்பந்தமே யில்லை. நமது அரசியல் சாசனத்தில் நமது நாட்டிற்கு “பாரத் என்ற இந்தியா” என்றுதான் பெயர் கொடுக்கப்பட்டி ருக்கிறதேயழிய வேறு இல்லை. “இந்துஸ்தானம்” என்னும் சொல்லே அதில் கிடையாது. அது ஒரு குறிப் பிட்ட மதம் சார்ந்ததாக மாறியிருந்த தால்தான் அதை நம் அரசியல்சாசன கர்த்தாக்கள் தவிர்த்துவிட்டார்கள்.

இதையெல்லாம் அறியாதவர்போல இந்த மோசடிக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரும்பத் திரும்பக் கூறிவருவ தன் ஒரே நோக்கம் நாட்டில் மதப் பகைமையை உருவாக்கத்தான். அந்த அமைப்பு பிறவி எடுத்ததன் நோக்கமே இதுதான். பிராமணியம் என்னும் நாசகாரக் கட்டமைப்பானது மேல்தட்டு வருணங்களின் நலனுக்காகக் கீழ்த்தட்டு வருணங்களை அடக்கி ஆண்டது, கூடவே சகல வருணங்களது பெண் களையும் ஒடுக்கி வைத்தது. இதற்காக அது மேலே அரசாங்க அளவிலும், கீழே குடிமைச் சமூக அளவிலும் வேலை செய்தது. இப்படி வேத காலம் தொட்டுக் காரியங்கள் நடந்தன.

நவீன காலத்தில் அவற்றைச் செய்யத்தான் ஆர்.எஸ்.எஸ் அவதாரம் எடுத்தது. அதற்கு இன்று அந்த அமைப்பு கடைப்பிடிக்கும் தந்திரம் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து வெகுமக்களைத் திசை திருப்புவது. மெய்யான எதிரி பிராமணியமே என்பதைச் சூத்திரர்களும், பஞ்சமர்களும் உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஒரு பொய்யான எதிரியை அது கட்டமைக்கிறது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தக் கேவலமான தந்திரம் நாட்டின் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் உகந்ததகவே உள்ளது. அந்த வெளிநாட்டு - உள் நாட்டு நிறுவனங்கள் தாங்கள் இந்தியாவைக் கொள்ளையடிப்பதைப் பாட்டாளி மக்கள் உணர்ந்திடாமல் இருக்கவும், இந்தத் திசைதிருப்பல் வேலை உதவுவது கண்டு அவர்களும் ஆதரிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். என்கிற மடிசஞ்சி அமைப்பிற்கும், பெரும் கார்பரேட் நிறுவனங்கள் என்கிற நவீன முதலாளித்துவ அமைப்பிற்கும் இடையே ஒரு தகாத கூட்டணி உருவானது. அதன் பிரதிநிதியாக நிறுத்தப்பட்டவர்தான் மோடி. இன்று அவரது ஆட்சியைக் கொண்டு வந்துவிட்டார்கள் - பல தகிடுதத்தங்கள் மூலம்.

பிராமணியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டணியின் மோசமான விளைவுகளை நாடு அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. பொருளாதாரத் துறையில் தொடரும் விலைவாசி உயர்வு, திட்டக் குழுவை ஒழித்துக்கட்டிப் பெருமுதலாளிகளை மட்டுமே நம்பியி ருக்கும் கட்டமைப்பை உருவாக்குவது என்று கிளம்பிவிட்டது மோடி அரசு. சமூகத் துறையிலோ மேலும் மேலும் மதப் பகைமையை வளர்க்கும் வஞ்சக வேலைகளைத் தீவிரப்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். அதன் ஒரு பகுதிதான், “இந்துஸ்தானம் - இந்துக்கள்” பேச்சு.

இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும், அங்கே இந்துக் களுக்கு மட்டுமே முழுக் குடியுரிமை இருக்க வேண்டும், இதர மதத்தார் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தனது “குருஜி”யாக மதிக்கும் கோல்வால்கர் 1930 - 40களிலேயே கூறிச் சென்றிருக்கிறார். அதை அவரது “நாம் அல்லது நமது தேசத்தின் வரையறை” மற்றும் “சிந்தனைக் கொத்து” ஆகிய நூல்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய நாடுகள் பலவும், “மதச்சார்பற்ற அரசு” என்று மதங்களின் பிடியிலிருந்து அரசை விடுவித்து, அவற்றைத் தனிமனித நம்பிக்கையாக வைத்திருக்க முயன்று வந்தபோது, இந்தியாவிலோ அதற்கு நேர்மாறாக, “இந்து ராஷ்டிரம்” என்று இந்து அரசை நிறுவ ஆர்.எஸ்.எஸ். ஆசைப்பட்டது. அதற்காக “இந்து தேசம் வேறு, முஸ்லிம் தேசம் வேறு” என்று முதன்முதலாக மதத்தின் அடிப்படையில் இரு தேசங்களை முன் மொழிந்தது. அதற்கு எசப்பாட்டுப் போல, 1940இல் முஸ்லிம் லீக்கும் “பாகிஸ்தான்” கேட்க, இந்தியத் துணைக்கண்டம் இரு நாடுகளாகப் பிளவுபட்டது. அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரங்கள் - காந்தியை இந்து மதவெறியன் கோட்சே படுகொலை செய்தது - இந்திய பிராந்திய வரலாற்றில் கொடுமையான கருப்பு அத்தியாயம். அப்படியும் ஈவு இரக்கமின்றி மதவெறி அரசியலை முன்னெடுத்துச் சென்றது ஆர்.எஸ்.எஸ். அதற்காகவே முதலில் ஜனசங்கம், பிறகு பாரதிய ஜனதா கட்சி என்று ஆரம்பித்தது. அது எப்படி 1992இல் பாபர் மசூதியை இடித்து மதவெறித் தீயை மேலும் கொளுந்துவிட்டு எரியச் செய்தது என்பதை அறிவோம். அந்தக் கொடூரமான பாரம்பரியத்தைத்தான் இப்போதும் தொடர்கிறார் மோகன் பகவத் தனது அந்தப்பேச்சின் மூலம்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி எவரும் எதிர்பாராதது. ஏன் அந்தக் கட்சியே எதிர்பாராதது. அதற்கு மிக முக்கியமான காரணம், உ.பி. - பீகாரில் அது பெற்ற அதீத இடங்கள். அங்கேயெல்லாம் மதவெறி யைக் கிளப்பி விட்டுத்தான் தேர்தல் ஆதாயத்தை அறுவடை செய்தது அந்தக் கட்சி. அதற்காகவே குஜராத்தின் “கலவர ஸ்பெஷலிஸ்டு” அமித் ஷாவை உ.பி. அனுப்பியதும், அங்கே முசாபர் நகரில் அக்கிரமமான ஒரு மதக்கலவரம் வெடித்துப் பல உயிர்கள் பலியானதும் தெரிந்த செய்தி. அப்படி இந்து மதத்தின் அடிப்படையில் “வாக்கு வங்கியை” உருவாக்கித் தான் வெற்றி பெற்றிருக் கிறார்களே தவிர உருப்படியான சமூக - பொருளாதார மாற்றுக் கொள்கைகளை வைத்து அன்று.

நாடு நாசமா னாலும் பரவாயில்லை, தேர்தலில் ஜெயித்தால் போதும் எனும் பா.ஜ.க.வின் அநியாயக கோட்பாட்டை அந்த மாநிலங்களது மக்கள்கூட இப்போது புரிந்து கொண்டு வருவது நமது தேச அரசியலில் ஒரு நல்ல திருப்பம். இன்னும் நூறு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் “மோடி அலை” என்னும் படத்தின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் 10 இடங்களில் 4இல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் ஓரிடத்தில் வெறும் 711 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுபோல கர்நாடகத் திலும் அது தோல்வியைச் சந்தித் துள்ளது. மூன்றில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோற்ற இரண்டு இடங்களில் வாக்கு வித்தியாசம் 30 ஆயிரத்திற்கும் மேலே என்றால், ஜெயித்த ஓரிடத்தில் அந்த வித்தியாசம் 6ஆயிரம் மட்டுமே. மத்தியப் பிரதேசத்தில்கூட அது ஓரிடத்தை இழந்துள்ளது. அதனால்தான் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஏடும் (26.8.14) தனது தலையங்கத்தில், “ தனது ஏற்றம் என்பது இறக்கமாக மாறாது என்று பா.ஜ.க. கருதக்கூடாது என்பதைத்தான் இந்த முடிவுகள் காட்டுகின்றன” என்று சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவிலும், இந்த இடைத்தேர்தல் முடிவிலும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முக்கியமான படிப்பினை இருக்கிறது. அவற்றின் வாக்குகள் சிதறியது, பா.ஜ.க.வின் முந்திய வெற்றிக்கு ஒரு காரணம் என்றால், அவை ஒன்று சேர்க்கப் பட்டது தற்போதைய அதன் தோல் விக்கு ஒரு காரணம் என்பதை அவை உணரவேண்டும்.

பீகாரில், லாலு பிரசாத் கட்சி நிதிஷ்குமார் கட்சியோடு கூட்டணி அமைத்தது - பழைய பகைமைகளை எல்லாம் மறந்து - ஒரு பெரிய நம்பிக்கையை மதச்சார்பற்ற சக்திகளுக்கு அங்கே தந்திருக்கிறது. அதனால்தான் அந்த இருவரது கட்சிகளுக்கு 10இல் 6 இடங்களை வழங்கியிருக்கிறார்கள் மக்கள் என்பதை அழுத்தமாக மனத்தில் கொள்ள வேண்டும்.

உ.பி.யிலும் இடைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. இப்போதும் பா.ஜ.க. அங்கே தனது மதக்கலவரத் தந்திரத் தையே நம்பியிருக்கிறது. “மக்களவைத் தேர்தலுக்குப் பிந்திய பத்து வாரங்களில் உ.பி.யில் நடந்த வகுப்புக் கலவரங்களில் மூன்றில் ஒரு பகுதி, அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடக்க விருக்கிற 12 சட்டமன்றத் தொகுதிகள் அல்லது அவற்றுக்கு அருகே நடந்திருக் கின்றன” (டைம்ஸ் ஆஃப் இந்தியா 27.8.14) எனும் திடுக்கிடும் செய்தி, அந்தக் கலவரங்கள் சங்பரிவாரத்தால் திட்ட மிட்டு உருவாக்கப்படுபவை எனும் உண்மையைக் கக்குகின்றன.

போதாக்குறைக்கு, “லவ் ஜிகாத்” என்பது உ.பி.யில் நடப்பதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் பேசியிருக்கி றார். அதிலிருந்து இந்துப் பெண்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக் கிறார். அதாவது முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பதற்காகவே திட்டமிட்டு இந்துப் பெண்களைக் காதலிப்பதாக ஒரு பெரும் புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார். அந்தப் பேச்சைப் படித்ததும், நமக்கு தமிழகத்தின் பா.ம.க. தலைவர்தான் நினைவுக்கு வருகிறார். முந்தையவர் காதலுக்குத் தடைபோட மதத்தை இழுக்கிறார் என்றால், இவர் அதற்காகச் சாதியை இழுத்தார்.

அந்தக் காரியத்தைத்தான் மேற் கொண்டது உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பத்திலிருந்து. அதில் பா.ஜ.க.வும் இப்போது தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பெண்களை உடைமைப் பொருளாக நினைக்கக் கூடிய வருணாசிரமத்தின் ஆணாதிக்கக கெடுபிடியை உசுப்பிவிட்டு அதில் அரசியல் குளிர்காயலாம் என்று இந்தக் கூட்டம் நினைக்கிறது. இதற்கெல்லாம் சித்தாந்தத்தளம் போடும் வகையில்தான், “இந்துஸ்தானம் - இந்துக்கள்” என்று பேசியிருக்கிறார் மோகன்பகவத்.

வருகிற ஆபத்தை உ.பி.யின் மதச்சார்பற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டென்று உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் தோல்வி பற்றி இன்னும் கலங்கி நின்றி டாமல், பீகாரின் இந்த இடைத்தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்க வேண்டும். லாலுவும் நிதிஷீம் கூட்டுச் சேர்ந்தால் அங்கு பா.ஜ.க.வைப் பின்னுக்குத் தள்ள முடிகிறது என்றால் இங்கே முலாயமும், மாயாவதியும் அணி சேர்ந்தால், அதைச் சாதித்துக் காட்ட முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாயாவதி அதற்கு முன் வந்தால் அவரைக் கைகுலுக்கி வரவேற்கத் தயாராக இருப்பதாக முலாயம் ஏற்கனவே கூறியிருப்பது புதிய நம்பிக்கையைத் தருகிறது. அதுபோல மாயாவதியும் பா.ஜ.க.விற்குள் தீவிரமாகப் புகுந்துள்ள ஆர்.எஸ்.எஸ். பற்றி அண்மையில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருப்பது அந்த நம்பிக் கையை அதிகரித்திருக்கிறது. பார்ப் போம், என்னாகிறது என்று.

பீகாரிலிருந்து பாடம் கற்க வேண்டியது உ.பி. மட்டுமல்ல, முழு இந்தியாவும்தான். தற்போது இந்துமத வெறிச் சக்தியே மிகப்பெரிய அரசியல் அபாயமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை எதிர்த்து முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டளை. மதச்சார்பற்ற சக்திகள் தங்களது பலத்தைச் சிதறடிக் காமல் ஒன்றுபட்டு நிற்பது தேசம் முழுமைக்கும் தேவையானது. அது சமூக விசயத்திலும் பொருளாதார விவகாரங்களிலும் ஒரு சரியான மாற்றுக் கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட ஒற்றுமை என்றால், இன்னும் சிலாக்கியமானது. இன்னும் வெகுமக்கள் நெஞ்சைக் கவரக்கூடியது. முந்திய காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளை மக்கள் மத்தியில் விளைந்த அதிருப்தியை மூலதனமாகக் கொண்டே பா.ஜ.க. தனது அரசியல் வெற்றிக்கு அச்சாரம் போட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.

இதையெல்லாம் மனத்தில் கொண்டு மதச்சார்பற்ற கட்சிகள் நெருங்கி வரட்டும். கொள்கை ரீதியிலான ஒற்றுமை என்பதை இடது சாரிகளும் நிச்சயம் உற்சாகத்தோடு வரவேற்பார்கள். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பரிவாரத்திற்கு எதிராக ஒரு விரிவான அணிவகுப்பு களம் இறங்கு வதையே மனிதநேயமுள்ள சகலரும் எதிர்பார்க்கிறார்கள். நடந்து கொண்டி ருக்கும் மெய்யான பாரத யுத்தத்தில் வெல்வதற்கு அதுவே வழி என்று அவர்கள் நியாயமாகவே நினைக்கி றார்கள். அதில் எந்த மதச்சார்பற்ற அரசியல்வாதி யாவது சுணக்கம் காட்டு வாரேயானால், அவர் மோகன் பகவத்தின் பேச்சை மீண்டும் வாசித்துக் கொள்ளட்டும்!

Pin It