செப்டம்பர் - 15 அண்ணா பிறந்தநாள்

(இருபதாம் நூற்றாண்டில், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பன்முக ஆளுமை அறிஞர் அண்ணாவிடம் இருந்தது. எழுத்தாளர், பேச்சாளர், படிப்பாளி, சிந்தனையாளர், அரசியல் ஆற்றலாளர், திரைக்கதை ஆசிரியர், நாடக நடிகர் என்று அவர் தொட்ட துறைகளிலெல்லாம் பெரு வெற்றி பெற்றார். 1934ஆம் ஆண்டு, பெரியாரின் தலை மாணாக்கராகப் பொதுவாழ்விற்குள் வந்த அண்ணா, படிப்படியாக வளர்ந்து புகழின் சிகரத்தை எட்டினார். 1960களை அண்ணாவின் காலம் என்றே கூறலாம். செப்டம்பர் 15 - அண்ணாவின் 106ஆவது பிறந்தநாளையட்டி, அவர் தொடர்பான சில செய்திகள் கீழே)

1962ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, தன் தில்லிப் பயணம் குறித்து விளக்குகிறார் :

“எங்களை ஏற்றிச் சென்ற விமானம் எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும் சென்று கொண்டிருந்தது. என் மனத்திலே பல்வேறு விதமான எண்ணங்கள் அலை அலையாய்க் கிளம்பின. இரவு பன்னிரெண்டு மணி. விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது. என் மனமோ, தம்பி, உன்னை விட்டுப் பிரிய மறுக்கிறது.

நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.

நான் திராவிடன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

திராவிடக் கலாச்சாரம் தனித்தன்மை வாய்ந்தது” என்றெல்லாம் எழுதிச் செல்லும் அவர், தில்லியில் தனக்குக் கிடைத்த வரவேற்புப் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

“நான் தில்லி சென்றால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப் பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக் கொண்டேன்.

தில்லி பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும் பரிவுடன் நடந்து கொண்டனர்.”

ஈழத்தடிகள் குறித்த செய்தியன்று அண்ணாவின் மடலில் காணக்கிடைக்கிறது.

“ஈழத்து அடிகள் அவர்கள் 1938ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாவது சர்வாதிகாரியாகப் பணியாற்றியவர். அவரும், நானும் சிறையிலிருந்த காலத்தில் ஏற்பட்ட நட்பும், பாசமும் வளர்ந்து, அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆக்கிவிட்டன. ‘திராவிட நாடு’ ஏட்டின் நிர்வாகியாக, நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் ஈழத்தடிகள்.” (காஞ்சி - 3.9.64)

மறைந்த தத்துவமேதை டி.கே.சீனிவாசன், அண்ணாவைப் பற்றிய தன் நினைவொன்றைக் குறித்துள்ளார் (தென்னகம், 24.10.69).

திருச்சி, தெப்பக்குளத்தில் உள்ள ‘டவுன் ஹாலில்’ அண்ணா அவர்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றும் வகையில், இரண்டு நாள்கள் கூட்டத்தை, டி.கே.சீ. ஏற்பாடு செய்துள்ளார். முதல் நாள் தமிழிலும், இரண்டாம் நாள் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதாக ஏற்பாடு. நிறைய விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், அண்ணா ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த அதே நாளில், அதே பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியாரின் கூட்டத்திற்கு, யாரோ போட்டியாக ஏற்பாடு செய்து விட்டனர். அந்தச் சுவரொட்டியைக் கண்ணுற்ற அண்ணா, சீனிவாசனை அழைத்து, “இன்று ஒரு நாள் போதும், நாளை நாவலர் பாரதியார் இதே பகுதியில் பேசும்போது நம் கூட்டம் வேண்டாம்” என்றார். சீனிவாசனோ, “அண்ணா, நாம்தான் முதலில் ஏற்பாடு செய்தோம். அது மட்டுமின்றி, நீங்கள் இங்கே பேசும்போது, நாளை அங்கே ஒரு கூட்டமும் இருக்காது” என்றார்.

“அதனால்தான் கூட்டத்தை நான் ரத்து செய்யச் சொல்கிறேன். அவர் பேசும்போது கூட்டம் இல்லாமல் இருக்கலாமா? அந்த அவமானத்தை, நம்மினும் மூத்தவருக்கு நாம் கொடுக்கலாமா? உடனே நம் கூட்டம் இல்லை என்று அறிவியுங்கள்” என்றாராம் அண்ணா!

தலைவர் சம்பத்தும் தோழர் அண்ணாதுரையும்!

கழகத்தை விட்டு ஈ.வெ.கி.சம்பத் பிரிந்து சென்று, தனிக்கட்சி கண்ட நேரம். அதுவரையில், ‘ அண்ணா, அண்ணா’ என்று அழைத்து வந்த சம்பத், பிரிந்து போனபின் கூட்டங்களில், ‘தோழர் அண்ணாதுரை’ என்று பேசத் தொடங்கினார். அது குறித்துப் பத்திரிகையாளர்கள் அண்ணாவிடம் கேட்டனர். “ என் தம்பி வளர்ந்து, தனிக்கட்சி கண்டு, தலைவராக ஆகி, என்னைத் தோழர் அண்ணாதுரை என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார் என்பது மகிழ்ச்சிதானே! அவர் என்னைத் தோழர் அண்ணாதுரை என்றே அழைக்கட்டும். நானும் அவரை இனிமேல் தம்பி சம்பத் என்பதற்குப் பதிலாக, தலைவர் சம்பத் என்று அழைக்கிறேன்” என்றாராம் அண்ணா.

தன் பேச்சைத் தம்பி கருணாநிதி கேட்கவில்லை என்பதாக, ஒரு நிகழ்ச்சியை அண்ணா தன் உரையன்றில் (3.6.1968) குறிப்பிடுகின்றார்.

“திருவாரூரிலிருந்து ஒரு மாணவன் அனுப்பிய கட்டுரை ஒன்றை நான் முன்பு நடத்திய திராவிட நாடு வார இதழில் வெளியிட்டேன். பின்னர், நான் திருவாரூர் சென்றிருந்த போது, அந்தக் கட்டுரையை எழுதிய மாணவனை அழைத்து வரும்படி சொன்னேன். மிகவும் மெலிந்த உருவத்துடனும், எளிய தோற்றத்துடனும் இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, “நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.

“நீ முதலில் நன்றாகப் படி. படித்து முடிக்கும் வரையில் கட்டுரைகள் எழுத வேண்டாம். முதலில் படிப்பில் கவனம் செலுத்து” என்றேன்.

இன்று நான் சொல்லுவதை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கும் கருணாநிதி, அன்று என் வார்த்தையைக் கேட்டிருந்தால், பல்கலைக்கழகப் பட்டம் பெற்று, இப்பொழுது உள்ளதை விட மேலும் பன்மடங்கு திறமை படைத்தவராகவும் இருந்திருப்பார்.”

தொகுப்பு : சுபவீ

Pin It