“What is wrong with saffronising education?”

“கல்வியைக் காவி மயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?”

என்று இந்திய ஒன்றியத்தின் துணைக் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் மார்ச் 19 அன்று ஹரித்துவாரில் நடந்த ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.

எனவே ஒன்றிய அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் எல்லாம் காவிமயமாக்கவே என்று அவர்களே ஒப்புக் கொண்டுவிட்டார்கள். அதனால் அவர்களிடம் பேச எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் இலக்கை நோக்கித் தெளிவாகப் பயணிக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் விழிப்புணர்வு பெற வேண்டும்.

கல்வி என்பது காவி மயமாகத்தான் இங்கே இருந்து வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் கல்வியென்பது அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதிலும் உயர்கல்வி, குறிப்பாக மருத்துவக் கல்வி என்பது இடஒதுக்கீட்டின் மூலம்தான் பார்ப்பனரல்லாத அனைத்துச் சமூகத்தினருக்கும் கிடைத்துவருகிறது. அதனைக் கெடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே நீட் தேர்வு.

medical college studentsமீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை மருத்துவத் துறையில் திணிக்க ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியிருக்கிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பத்திரப் பதிவு அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற விழாவில், இது வரை பின்பற்றப்பட்டு வந்த ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழியை மாற்றி ‘மகரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியை ஆங்கில மொழி வழியாக உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே சமஸ்கிருதத் திணிப்பைச் செய்பவர்கள், இன்னும் எத்தனை கல்வி நிலையங்களில், கல்லூரி நிகழ்ச்சிகளில் காவிச்சாயம் பூசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே, திராவிட இயக்கம் இன்னும் எவ்வளவு வேகமாக மாணவர்களுக்கிடையில் செயல்பட வேண்டும் என்பதை உணரலாம். ஆர்.எஸ்.எஸ். புள்ளிகள் ஒவ்வொரு அதிகாரக் கட்டமைப்பிலும் ஊடுருவி பார்ப்பனிய வேதக் கொள்கைகளை எப்படித் தந்திரமாக நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சான்று.

திராவிட இயக்கத்தின் அமைச்சர்கள் என்பதால் கடுமையான எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலத்தில் நடந்திருந்தால் அவர்களும் சேர்ந்து பாரதப் பண்பாட்டின் புகழ் பாடியிருப்பார்கள்.

நீட் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயில வரும் மாணவர்களிடம் இது போன்ற காவிச் சிந்தனைகளை எளிதில் விதைத்து விடலாம். மருத்துவக் கல்லூரிக்கு மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, சென்னை மாகாணத்தில் நிலவியதையும், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் அது ஒழிக்கப்பட்ட வரலாற்றையும் நாம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதுதான் அவர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியின் ஆபத்தை உணர்வார்கள்.

“சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர்கள் வாழ முடியும். சுரண்ட முடியும். நம்மைக் கீழ் ஜாதி மக்களாக ஆக்க முடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையோடும் விழிப்போடும் காரியம் செய்துவருகிறார்கள்” (விடுதலை 15.02.1960) என்று தந்தை பெரியார் கூறியதை மாணவர்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

கல்லூரிகளில் பல்வேறு பெயர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த இடங்களில் திராவிட இயக்க மாணவர் அமைப்புகள் பெருக வேண்டும். பெரியார் பெயரில் அண்ணா பெயரில் படிப்பு வட்டங்கள் கல்லூரிகளில் செயல்பட வேண்டும்.

எட்டிப் பார்க்கும் சமஸ்கிருதப் பண்பாட்டை, முளையிலேயே வெட்டி எறியும் திராவிடம்!

- மா.உதயகுமார்

Pin It