moddii 350 copyஇந்தியாவில் பார்ப்பனியத்திற்கு மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது என்றுசொல்வதைக் காட்டிலும் பார்ப்பனியம் மகுடம் சூட்டிக்கொண்டது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்த மகுடம் இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாத மக்களையும், சிறுபான்மையினரையும் மண்டியிட வைக்கும் மகுடம், பார்ப்பனர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மடைதிறந்து விடும் மகுடம்.

“The BJP is the political wing of Hindu nationalism, a movement that is changing India for the worse. Little wonder, as it stands for the flagrant social dominance of the upper castes of Hindu society, pro-corporate economic growth, cultural conservatism, intensified misogyny, and a firm grip on the instruments of state power. The landslide win for Mr Modi will see India’s soul lost to a dark politics – one that views almost all 195 million Indian Muslims as second-class citizens.” (The Guardian - Editorial)

உயர்ஜாதி ஆதிக்கம், கார்ப்பரேட் வளர்ச்சி, கலாச்சார பழைமைவாதம், பெண்கள் மீதான வன்முறைகள், அதிகாரங்களை அனைத்தையும் இறுகப் பற்றுதல், இந்தியாவின் இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துதல் என பா.ஜ.க.வைப் பற்றி தெளிவாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் “The Guardian” ஏடு எழுதியிருக்கிறது.

மேலும் “This is bad news for India and the world.” இது இந்தியாவிற்கும் உலகத்திற்குமான கெட்ட செய்தி என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏனெனில் உலக சமூகம் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கி நடைபோடும் போது 125 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா பின்னோக்கிச் செல்வது மனித குல முன்னேற்றத்திற்குத் தடையாகவே அமையும்.

பா.ஜ.கவைப் போன்ற அடிப்படைவாத அமைப்புகள் இன்னும் முனைப்போடு செயல்பட பா.ஜ.கவின் வெற்றி தூண்டுகோலாக அமையும். ஆகையினால் பா.ஜ.க.வின் இந்த வெற்றி முன்னேறிய நாட்டு மக்களையும் பாதிக்கும். இது உலக அரங்கில் ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஏற்பட்ட தலைகுனிவு. பா.ஜ.கவையும் மோடியையும் தூக்கியெறிந்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இந்த அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் விழிப்புணர்வையும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நாட்டில் மதவாதமும், ஜாதியவாதமும்  பல்லக்கில் ஏற்றப்பட்டிருக்கின்றன. அந்தப் பல்லக்கில் பயணம் செய்பவர்கள் பார்ப்பனப் பனியாக்கள்.  தூக்கிச் செல்பவர்கள் பார்ப்பனரல்லாதோரும், சிறுபான்மையினரும். இஸ்லாமியர்கள் மீதான  தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. இனி இந்தியர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையின் மீதும் துல்லிய தாக்குதல் தொடங்கும்.

இந்தியாவில் தேர்தல் என்னும் போர் வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, பன்மைத்துவத்தைக் காப்பாற்றும் போர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இனிமேல்தான் முற்போக்காளர்கள் ஒன்றிணைந்து வீரியத்தோடும் விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலமாக இருக்கிறது.

அரசிடமிருந்து நாட்டையும், மக்களையும், சில நேரங்களில் நாட்டு மக்களைக் காக்கும் இராணுவ வீரர்களையும் காக்கும் பணி சமூகத் தொண்டாற்றும் முற்போக்காளர்களிடமே இருக்கிறது. முற்போக்காளர்களின் பணி மக்களைக் காக்க ஒன்றாய் அணிவகுப்பதே.

இந்திய மக்களின் இதயங்களும் இதை நம்பித்தான் துடித்துக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மை மக்களாவது தங்களுக்கு நேர்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் பார்ப்பனரல்லாத மக்கள் இன்னும் தாங்கள் எவ்வளவு பெரிய பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் ஒற்றுமையே, இன்றைக்கு இந்த பார்ப்பனிய பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராடத் தேவைப்படுகிறது.

தமிழக நலனை எண்ணிப்பார்க்கிற போது நாம் நம்பியிருப்பதெல்லாம் மக்களவையில் ஒலிக்க இருக்கும் திராவிடத்தின் குரலைத்தான்.

Pin It