கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. 62 நாடுகள் சட்டத்தில் மரண தண்டனைக்கு வழி இருந்தாலும், அமுல்படுத்தாது நிறுத்தி வைத்துள்ளன. அய்.நா.வின் பொதுச் சபை 2007 டிசம்பர் 18 இல் உலக நாடுகள் அனைத்தும் மரணதண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரகடனம் செய்துவிட்டது.

ஆனாலும், இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க முன்வரவில்லை. தூக்கு தண்டனை அமுலிலுள்ள நாடு அமெரிக்கா, அங்கே தூக்கு தண்டனை தரப்பட்டவர்களில் 126 பேர் குற்றமற்றவர்கள் என்று கண்டறியப்பட்டு, பிறகு, அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது. அப்பாவிகளும் தூக்கு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

தூக்குத் தண்டனை இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதத்துக்கு எந்த அடிப்படையான காரணமும் இல்லை. 1976 இல் கனடாவில் தூக்கு தண்டனை ரத்தானது. அதன் பிறகு தான் அங்கு 40 சதவீத கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று அரசு புள்ளி விவரம் தருகிறது. நாட்டின் விடுதலைக்குப் போராடியவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தப்பட்டனர். அந்த பயங்கரவாதிகள் தான் பிறகு வரலாற்றில் தேச பக்தர்களாக போற்றப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இப்போதுகூட செண்பகராமன் என்ற ‘சுதந்திர’ப் போராட்ட தியாகிக்கு முதல்வர் கலைஞர் சிலை திறந்து, அவரது தியாகத்தைப் பாராட்டியுள்ளார். இந்த செண்பராமன் யார்? உலகையே மனிதப் பிணங்களின் குவியல்களாக்கிய இட்லரின் படையில் இடம் பெற்றவர். இட்லரின் கப்பல் படையில் பணியாற்றியவர். எம்டன் கப்பலில் சென்னை துறைமுகம் வந்து, சென்னை மாநகரத்தைக் குறிவைத்து, குண்டுகள் வீசப்பட்ட போது அந்த ‘எம்டன் கப்பலை’ கடலில் ஓட்டி வந்தவர் செண்பகராமன். ஆனாலும், அவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால், சிலை வைத்து தியாகி என்று புகழாரம் சூட்டும் நிலை திரும்பியிருக்கிறது.

இந்தியாவில்கூட பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட ஒரு பிரதேசம் உண்டு. அதுதான் கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானம், அங்கு மன்னராட்சி நடந்தது. அங்கே திவானாக இருந்தவர் சர்.சி.பி. இராமசாமி அய்யர். பிரிட்டிஷ் ஆட்சி அனைவருக்கும் பொதுவான மனுநீதிக்கு எதிரான கிரிமினல் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதை அமுல்படுத்த முடியாது என்று திருவாங்கூர் சமஸ்தானம் மறுத்தது. காரணம் என்ன? பார்ப்பானுக்கும் மரண தண்டனை வழங்கவேண்டியிருக்கும் என்பதால் தான், ‘மனு நீதி’, ‘பிராமணனுக்கு’ மரண தண்டனையை தடைசெய்துள்ளபோது, பிரிட்டிஷாரின் கிரிமினல் சட்டம் அந்த விதிவிலக்கை எதிர்த்தது.

திருவாங்கூர் அரண்மனையில் அந்தக் காலங்களில் அரசர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போராட்டங்கள் நடந்தன. பதவியில் இருப்பவரை கொலை செய்துவிட்டு, மற்றொருவர் பதவிக்கு வருவார். இப்படி அரசர்களைக் கொலை செய்வதற்கு எப்போதுமே - பார்ப்பனர்கள்தான் பயன்படுத்தப்பட்டனர். என்ன காரணம்? ‘பிராமணன்’ கொலை செய்தால் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்க முடியாது என்பதால் தான்.

கொலைகார பார்ப்பான் பிடிபட மாட்டான். அப்படியே பிடிபட்டாலும் தூக்கு தண்டனை நிச்சயம் கிடையாது. புதிதாக ஆட்சிக்கு வரக்கூடிய அரசர்கள், இவர்களை விடுதலை செய்து விடுவார்கள். இந்த வரலாற்று உண்மைகளை பழம்பெரும் சுதந்திர போராட்ட வீரர் கோவை அய்யாமுத்து எழுதிய ‘மேயோ கூற்று மெய்யா? பொய்யா?’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அதன் காரணமாகத்தான் பார்ப்பனர் குற்றம் செய்தாலும் தூக்கு தண்டனை உண்டு என்ற சட்டத்தை அமுல்படுத்த திருவாங்கூர் தேவஸ்தானம் மறுத்தது.

இதை அப்போதே டாக்டர் அம்பேத்கர் கண்டித்து எழுதினார். பிரிட்டிஷ் அரசும், அம்பேத்கர் கருத்தை வழிமொழிந்து ‘பிராமணர்களுக்கு’ மட்டும் தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு தரக்கூடாது என்று திருவாங்கூர் சமஸ்தானத்தை வலியுறுத்தியது. அப்போதுதான் திவான் சர். சி.பி. இராமசாமி அய்யர் புதிய உத்தரவு ஒன்றை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டார்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் இனி எவருக்குமே தூக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்பதே அந்த உத்தரவு. பார்ப்பன ஏடுகள் சர்.சி.பி. ராமசாமி அய்யரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி புகழ்ந்து எழுதினர். பார்ப்பனர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, எல்லோருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்தது தான் அந்த மனிதாபிமானத்தின் பின்னணி ரகசியம்.

அன்று சர்.சி.பி. ராமசாமி அய்யருக்கு புகழாரம் சூட்டிய பார்ப்பன சக்திகளின் வாரிசுகள் தான் இன்று, தூக்கு தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிறார்கள். மனித உரிமையிலும், இவர்களின் மனுதர்மப் பார்வை தான் கோலோச்சுகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து உளவு நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட சுரப்ஜித் சிங் என்பவருக்கு 1991 இல் பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றில் 14 பாகிஸ்தானியர் இறந்தனர். அந்தக் குண்டு வெடிப்பு சதிக் குற்றம் சுரப்ஜித் சிங் மீது சுமத்தப்பட்டது. இந்தியாவின் உளவு நிறுவனத்தைச் சார்ந்தவர் - பாகிஸ்தானில் குண்டுகளை வெடிக்கச் செய்த குற்றத்தில் தூக்கு தண்டனை விதித்தபோது, தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்ற மனிதாபிமானக் குரல் எழுந்தது.

17 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்ட நிலையில் பா.ஜ.க.வினர், பாகிஸ்தான் அரசைக் கண்டித்தனர். தூக்கு தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மனித உரிமையாளர்கள் அனைவருமே தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரினர்.

அதே பா.ஜ.க. வினர் தான் இந்தியாவில் நாடாளுமன்றத்தைத் தகர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். சுரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை தரக் கூடாது என்று அவர் சீக்கியர் என்ற காரணத்தால், பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தூக்கு விதிக்கப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, சுரப்ஜித் மீதான தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதற்கு என்ன காரணம்? அவரை ஆத்திரப்படுத்தியது யார்? இந்தியாவின் பார்ப்பன சக்திகள்தான்; என்ன நடந்தது?

இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனத்தைச் சேர்ந்த காஷ்மீர்சிங் என்பவர் பாகிஸ்தானில் ஊடுருவிய போது பிடிபட்டு, 35 ஆண்டுகாலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். பாகிஸ்தான் மனித உரிமைத் துறை அமைச்சரான அன்சார்புருனே, சிறைச்சாலைக்கு நேரடியாக சென்றபோது, இதை அறிந்து அதிர்ச்சியடைந்து, அவரை விடுதலை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டார். காஷ்மீர் சிங்கை இந்தியாவின் எல்லை வரை அழைத்து வந்து, இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார், அந்த அமைச்சர். அந்தப் பிரியாவிடை கண்ணீருடன் நடந்தது.

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு வாரத்தில், மற்றொரு சம்பவம் நடந்தது. இந்தியாவுக்குள் கிரிக்கெட் பார்ப்பதற்காக சட்ட விரோதமாக ஊடுருவிய காலிப் முகம்மது என்ற பாகிஸ்தானியரை, கைது செய்து, பம்பாய் சிறையில் அடைத்து வைத்தனர். இந்திய உளவுத் துறையின் சித்திரவதையால் சிறையில் பிணமானார்.

அவரது சடலத்தை எந்த எல்லைப் பகுதியில் காஷ்மீர் சிங் ஒப்படைக்கப்பட்டாரோ, அதே பகுதியில் அடுத்த 10 நாளில் இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த நிலையில் தான் முஷாரப், சுரப்ஷித் சிங் தூக்கிற்கு உத்தரவிட்டார். இந்தப் பின்னணியை பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடித்தன.

இப்போது தமிழ்நாட்டில் அண்ணாவின் நூற்றாண்டை நாம் எடுக்கப் போகிறோம். அண்ணாவின் நூற்றாண்டுக்கு மிகப் பொருத்தமான செயல்பாடு தூக்கு தண்டனை ஒழிப்பு என்பதாகவே இருக்க முடியும். ஒவ்வொரு அண்ணாவின் பிறந்த நாளிலும் கைதிகளின் மனித உரிமைகளைக் காப்பாற்றும் செயல்பாடுகளிலேயே கலைஞர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகள், 20 ஆண்டுகாலம் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்று தண்டனையின் வரம்புக் காலத்தை ஜெயலலிதா தனது பார்ப்பன ஆட்சியில் உயர்த்தியதால், ஆயுள் தண்டனைக்குள்ளான கைதிகள் பலர், விடுதலை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கலைஞர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சியின் ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அதே போல் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிறைச்சாலை விதிகள் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அண்ணாவின் நூற்றாண்டில் முதல்வர் கலைஞர், இந்த சாதனைகளை செய்தால் வரலாற்றில் அவரது புகழும் பெருமையும் மேலும் உயரும்.

தூக்கு தண்டனை எதிர்ப்புக்காக 1949 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் கலைஞர். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தமிழன் கணபதியை அன்றைய மலேசிய அரசாங்கம் தூக்கிலிட்டது. மலேயா தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த மலேயா கணபதி மீது சுமத்தப்பட்ட குற்றம், ஒரு கைத்துப்பாக்கியும், 6 ரவுண்டு வெடி மருந்துகளையும் வைத்திருந்தார் என்பதுதான்; எவரையும் கொலை செய்யவில்லை. அப்போது கலைஞர் கொதித்தெழுந்து ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற கண்ணீர் காவியத்தைப் படைத்து நூலாக வெளியிட்டார். அந்நூல் இப்படித் தொடங்குகிறது.

“பகவத்சிங்கைத் தூக்குமேடையிலே ஊஞ்சலாட்டி உவகை கொண்ட ஏகாதிபத்தியம் - திருப்பூர்க் குமரனைத் தடி கொண்டு தாக்கித் தெருவெலாம் குருதியோடச் செய்து, அதை நக்கிக் குடித்து எக்காளமிட்ட ஏகாதிபத்தியம் - இதோ, இன்று மலேயா சர்க்கார் என்ற உருவிலே தன் சொர சொரப்பான ரத்த நாக்குகளால் கணபதியையும் ருசித்துப் பார்த்துவிட்டது.

தூக்கு மேடை எத்தனையோ மனிதர்களைத் தனக்கு உணவாக்கிக் கொண்டு உல்லாசம் பாடியபடி தான் இருக்கிறது. அதன் கோரப் பற்களுக்கிடையே சிக்கிச் சீரழிந்த மனித உருவங்கள் கணக்கிலடங்கா. குற்றவாளிகளின் குரல்வளையை நெரிப்பது மட்டுமல்ல, நிரபராதிகளின் வாழ்வை அரைநொடியில் தீர்த்துக் கட்டி, தன் வயிற்றைப் புடைக்க வைத்துக் கொண்டிருக்கிறது தூக்கு மேடை! தூக்கு மேடையிலே உறைந்திருக்கும் ரத்தத்திலே, எத்தனை உத்தமர்களின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அங்கே அறுத்தெறியப்பட்ட நரம்புகள் ஒவ்வொன்றும் - ஒடித்தெறியப்பட்ட எலும்புகள் ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தால், எத்தனை நீதிபதிகளின் நேர்மை அம்பலத்திற்கு வரும்!

இப்படி தூக்கு தண்டனைக்கு எதிராக அன்று குரல் கொடுத்த கலைஞர், இன்று, மவுனத்தைக் கலைத்து, மனித உரிமைக்குக் குரல்கொடுக்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் எதிர்பார்ப்பு.

- சென்னை தூக்கு தண்டனை எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசியது - 2.8.2008