ரபேல் விமான ஊழலில், மத்திய அரசுக்கு எதிரான பல சான்றுகளைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எடுத்துக் காட்டினார். இன்றுவரையில் உரிய விடையை மத்திய அரசு தரவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு விசாரணையை அனுப்புவதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை.

rafale aircraftஇப்போது அது தொடர்பான கோப்புகள் அனைத்தும் தொலைந்து போய்விட்டன என்று ‘‘பொறுப்பாக’’ பதில் சொல்லியுள்ளனர். பேச்சு வழக்கில் ‘‘சோலி முடிஞ்சுது’’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அப்படித்தான் ரபேல் விவகாரத்தை முடிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.

வரவிருக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை அறிந்து கொண்ட அக்கட்சி, தேர்தலையே தள்ளிப்போட பல சூழ்ச்சிகளைத் திட்டமிட்டது. விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கிக் கொண்டவுடன், அதைக் காரணமாகக் காட்டி ஒரு போர்ச் சூழலை இங்கு உருவாக்க முயன்றனர்.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இதுவே தக்க தருணம் என்று முடிவெடுத்தனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று எண்ணி மகிழ்ந்தனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீசிய பந்து இவர்கள் விக்கெட்டைச் சாய்த்துவிட்டது. இவர்களின் ஆசையில் அவர் மண் அள்ளிப் போட்டுவிட்டார்.

தேர்தலைச் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஆளும் பாஜக கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. வேறு வழியின்றி உறுதிமொழிகளை ஊரெங்கும் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றனர்.

கஜா புயல் வீசிய போது, வரைபடத்தில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது என்றே தெரிந்து வைத்துக் கொள்ளாத நம் பிரதமர் மோடி, இப்போது தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் சீசன் டிக்கெட் எடுத்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை வந்து போகின்றார்.

சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு, எம்ஜிஆர் பெயரைச் சூட்டப் போகின்றாராம். இனிமேல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும், வந்து சேரும் விமானங்கள் அனைத்தும் தமிழில் பேசுமாம். தேர்தல் வந்தால் இவர்களுக்குத் தமிழ் நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்தால் சமஸ்கிருதம் பெருமை பெறும்.

ராணுவம் தொடர்பான கோப்புகளையே தொலைத்து விட்டவர்கள், நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறார் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். இதே கேள்வியை தேர்தல் நாளில் மக்களும் கேட்பார்கள்.

Pin It