பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தேசியக் கல்விக் கொள்கை 2020அய் முழுமையாகப் படிக்காததால் அதைப் பலர் எதிர்க்கிறார்கள் என்று தமிழக ஆளுநர் பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்தப் பேச்சைப் பற்றிய உங்கள் கருத்து.

ஆளுநர், தான் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கிறோம் என்ற நிலையில் தமிழகத்திற்கு வரவில்லை. நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டு, கல்விக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும்

prince gajendra babu 243ஒற்றைப் பண்பாட்டுத் தேசியத்தைக் கட்டமைக்கும் ஆவணமான தேசியக் கல்விக் கொள்கை 2020அய்ப் பிரச்சாரம் செய்பவராக கருதிக்கொண்டு, செயல்படுவதற்காக வந்து அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்.

 அரசமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்திருக்கும் பணி என்பது, சட்டப்பேரவையின் அங்கமாக இருக்கும் ஒரு ஆளுநர், சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்தின்பால் இருக்கிறதா என்று பார்த்து, அதற்கு ஒப்புதல் கொடுப்பது.

 முதலமைச்சர் தலைமையில் இருக்கிற அமைச்சரவைதான் கொள்கை முடிவு எடுக்க முடியுமே தவிர, கொள்கை முடிவை ஆளுநர் எடுக்க முடியாது. இந்தக் கொள்கை நல்லது இந்தக் கொள்கை தவறானது என்று பிரச்சாரம் செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லை.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் பிரச்சார மேடையாக மாற்றுவது மரபு மீறும் செயல். பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்று அமர்ந்திருக்கும் மாணவர்களிடையே ஒரு கொள்கை நல்லது என்று சொன்னால் அதன் தீய அம்சங்கள் என்ன என்று சொல்லக்கூடிய வாய்ப்பு இணைவேந்தராக இருக்கக் கூடிய உயர் கல்வி அமைச்சருக்கு இருக்கிறது. ஆளுநர் பேசிய பிறகு அமைச்சர் பேச முடியாது என்பது, பதில் பேச முடியாது என்பதல்ல. ஆளுநருக்கு மரபைக் காக்கத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் அமைச்சரும் மரபைக் காக்காமல் போய்விடக்கூடாது என்ற பெருந்தன்மையோடு அமைச்சர் நடந்து கொள்கிறார். எனவே இனி மாணவர்களே எழுந்து குரல் கொடுக்கும் சூழல் உருவாகலாம்.

ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படித்து இருப்பாரேயானால், ஒரு சாதாரண மனிதனாக நான் கேட்கிறேன், என்னுடன் விவாதிக்க ஆளுநர் தயாரா?

அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்தியாவிலேயே தமிழக மாணவர்களுக்குத்தான் “கிரகிக்கும் தன்மை” குறைவாக இருக்கிறது என்றும் இங்கு கல்வியில் தரம் இல்லை என்றும் சொல்லியிருப்பது பற்றி தங்களுடைய கருத்து

அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அதேபோல் ஆளுநர் திரு ரவி அவர்களும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. இரண்டு பேரும் யுபிஎஸ்சி தேர்வுக்காகப் படித்தவர்கள். அரசமைப்புச் சட்டத்தை நாடி நரம்புகளில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நடந்த விவாதங்கள், அந்த விவாதங்களுக்குப் பின்னால் இருந்த இந்தியாவைப் பற்றிய கனவு, இவை எதுவுமே இந்த இரண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தெரியாது.

திரு.அண்ணாமலை சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழக மாணவர்களுக்கு நிச்சயமாக ஆர்.எஸ்.எஸினுடைய சனாதனக் கோட்பாட்டைக் கிரகிக்க இயலாது. இங்கு அநீதிக்கு எதிரான ஒவ்வாமை இருக்கிறது. சமத்துவமின்மைக்கு எதிரான ஒவ்வாமை இருக்கிறது. தமிழகத்து மாணவர்களுக்கு இருக்கிற சமத்துவப் புரிதல் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இல்லை. எனவே அவர் விரும்புவது போல் மாணவர்கள் கற்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

கல்வி உரிமைக்காக, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாகப் போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநிலப் பட்டியலுக்குக் கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்படிப் பயணிக்கிறோம்?

முதலாளித்துவம் தன்னுடைய இலாபத்திற்காக அரசை இயக்குவது என்பது காலந்தோறும் நடந்துவரும் சூழ்ச்சிதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தந்தை பெரியார் காமராஜரை ஆட்சியில் அமர்த்தி விட்டு, அவரது ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டத்தைத் தெருவில் இறங்கி நடத்தினார். அதேபோல் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு தொண்டர்களாகிய மக்களைத் தயார் படுத்த வேண்டும். மக்களாட்சி மாண்புக்கு எதிரானவைகளைக் கண்டித்து மக்கள் திரள் தெருவிற்கு வர வேண்டும். தொடர்ச்சியாக (Consistent) போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

ஒரு போராட்டத்தின் வெற்றியின் மூலம் நாம் சிறிது தூரமே பயணிக்கிறோம். இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இலக்கை அடையும் வரை நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் 1976இல் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த 50 ஆண்டுகளில் நாம் “மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கல்வி” என்பதை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறோம் என்ற சுய விமர்சனத்தோடு நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

நேர்காணல்: மா.உதயகுமார்

Pin It