தந்தை பெரியார் தொடங்கிய ‘விடுதலை’ நாளிதழ் 88-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், பெரியாரின் இதழியல் பணிகள் குறித்த நூலை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

arulmozhi book on periyarதந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்ச் சமூகத்திற்காகப் பல்வேறு துறைகளில் பெரியார் ஆற்றிய பங்களிப்பை வெளிக்கொணரும் முயற்சியாக, ‘பெரியாரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில், பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளைக் கொண்டு, மே பதினேழு இயக்கம் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது.

அந்தக் கருத்தரங்கில், ‘பெரியார் இதழியல் முன்னோடி’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையை நிமிர் பதிப்பகம் தற்போது நூலாகக் கொண்டுவந்துள்ளது.

‘‘நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தாலும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாதவராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை. மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால் ஒரு பிராமணனைக் கொண்டோ ஒரு பிராமணப் பத்திரிகையைக் கொண்டோதான் தெரிந்து கொள்ள வேண்டும்..... தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட்டினருக்குத் தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக்கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை. 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத்தொகையுள்ள கூட்டத்தாருக்கு தங்கள் நாட்டில் தங்களைப் பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?” என்று தமிழருக்கென்று பத்திரிகை தொடங்குவதன் அவசியத்தைக் குடிஅரசு இதழைத் தொடங்கும்போதே பதிவு செய்தவர் தந்தை பெரியார் (குடிஅரசு, 02.08.1925).

இதழியல் ஆர்வலர்களுக்குப் பெரியார் வழங்கும் அறிவுரையைத் தொட்டுக் காட்டுகிறது இந்நூல். “நேர்மையாக, நினைத்ததைச் சொல்ல வேண்டும். மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, இன்றைக்கு இல்லை என்றாலும் நாளைக்கு அதை ஏற்றுக் கொள்கிற நிலை வரும்” என்பதே அந்த அறிவுரை.

பாரதிதாசன், சிங்காரவேலர், ஜீவா போன்ற பெரும் ஆளுமைகள் பெரியார் நடத்திய இதழில் கவிதை, கட்டுரை வடிவில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான செய்தி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், சிவகாமி (சிதம்பரனார்) அம்மையார், முத்துலட்சுமி அம்மையார் உள்ளிட்ட பல பெண்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான களமாகத் தன்னுடைய இதழ்களைப் பயன்படுத்தியவர் பெரியார்.

அக்காலத்தில் பிற்போக்குத்தனமான சனாதனக் கருத்துகளைத் தாங்கி வந்த சுதேசமித்திரன் உள்ளிட்ட இதழ்களுக்குப் பெரியார் எத்தகைய எதிர்வினை ஆற்றினார் என்ற செய்தியைச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதோடு, இதழ் நடத்துவதில் பெரியார் எதிர்கொண்ட சிக்கல்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளது இந்நூலின் சிறப்பான பகுதி.

பெண்கள் எழுதிய நூல்களும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன என்பது இந்நூலின் மூலமாக நாம் அறிந்து கொள்ளும் புதிய செய்தி.

பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்துள்ள இந்நூல், பெரியாரின் இதழியல் ஆளுமையைப் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது. பெரியாரின் மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள, அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

Pin It