மனுஸ்மிருதி சட்டத்தின் முன் மக்கள் சமமானவர்கள் இல்லை. அங்கு வருணங்களுக்கு ஏற்ப சட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. “அரசின் புதிய வழக்கறிஞர் குற்றம் சாற்றப்பட்டவர்களோடு இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக, பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசைதிரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகிறது” - என்று ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, சட்டமும், நீதியும் மக்கள் முன் சந்தேகங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இவை குறித்து, “சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்ற விரிவான விளக்க நூலைத் தலைவர் கலைஞர் எழுதி இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை இந்நூலை வெளியிட்டுள்ளது. உடன்பிறப்புக்குக் கலைஞரின் கடிதம் வடிவில் அமைந்துள்ளது இந்நூல்.

ஜெயலலிதா முதல் முறையாக 1991 இலிருந்து 1996வரை ஐந்துஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தார். அப்பொழுது அவர் முதல்வர் பொறுப்பேற்பதற்கு முன்னர் அவரின் சொத்து மதிப்பு 01.07.1991 ஆம் நாளின்படி 2 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 957 ரூபாய். இது நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட செய்தி. ஆனால் அவர் ஐந்து ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்து முடிந்தபின் 30.04.1996ஆம் நாளின்படி சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பெங்களூர் நீதிமன்றத்தில் பட்டியலிட்டுப் பதிவு செய்த ஜெயலலி தாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்துப் பட்டியலின் ஒரு பகுதி சொத்தின் இன்றைய அரசு மதிப்பு, 2847 கோடியே 50 லட்சம் ரூபாய். சந்தை மதிப்பு 5107 கோடி ரூபாய் என்று சொல்லும் இந்நூலின் பின் இணைப்பில், ஏறத்தாழ தமிழகம் முழுவதும் ஜெயலலிதா தரப்பினரின் சொத்துப் பட்டியலாக 306 பட்டியல்களை வெளியிட்டுள் ளது. இவைகளை எல்லாம் பார்க்கும் போது, பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மார்கோசின் மனைவி இமெல்டா மார்கோஸ்தான் கண்முன் வருகின்றார்.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு ஊழல் பட்டியலை அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம். முதல் முதலாகக் கொடுத்தது தி-.மு.கழகம். தலைவர் கலைஞர், நாஞ்சில் மனோகரன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், என்.வி.என். சோமு. இரகுமான்கான் ஆகியோர் பட்டிய லைக் கொடுத்துள்ளார்கள். அதே போல சுப்பிரமணிய சாமியும் ஊழல் குற்றப்பட்டியலைக் கொடுக்க, ஆளுநர் அனுமதியளித்தார் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர-.

அப்பொழுது தொடரப்பட்ட ஜெயலலிதா மீதான ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கு, தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதையைப் போல, முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கும் அனுமன் வாலைப்போல, 18 ஆண்டுகளாக இன்னமும் நடந்து கொண்டிருக்கும் அவலத்தைத்தான் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இந்நூலில் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்த ஊழல் வழக்கில் குறிப்பிடத்தக்க செய்தி, வாய்தா...வாய்தா...வாய்தா, 18 ஆண்டுகளாக வாய்தாவில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த வழக்கு. எப்படிக் கேட்கிறார்கள் வாய்தா? சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து கொண்டு, நியாயமற்ற முறைகளில் நீதிமன்றக் கண்டனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் அளவுக்கு எப்படி எல்லாமோ வாய்தாக்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா.

“நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களைவிடச் சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு அவரது மனுவில் காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையில் குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது”.

“நீண்ட அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்தவுள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது...சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆறுமாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாக கடந்த ஆறு மாதமாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதுபோல உணருகிறேன்”.

“இது குற்றவியல் நீதிமன்றமா, அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா? இந்த வழக்கு விசாரணை, கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்திவைக்கப்பட்ட நாட்கள்தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததன் நோக்கம், விசாரணை தினமும் நடந்து, விரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடையேதும் இல்லாமல் நடக்க வேண்டும்”.

- ஜெயலலிதாவின் வழக்கு வாய்தா இழுத்தடிப்பினால், நொந்து நூலான நீதிபதிகள்தாம் இப்படித் தம் தீர்ப்புகளின் போது, தம் மனக் கொதிப்புகளை ஜெயலலிதாவுக்கான கண்டனங்களாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் வால் வளைந்து கொண்டுதான் இருக்கிறதே ஒழிய நிமிர்த்த முடியவில்லை என்ற விரிவுகளைக் கலைஞர் உரிய சான்றுகளுடன் இந்நூலில் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

ஒரு குற்றவாளி, தனக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் எப்படியெல்லாம் வாதிடுவாரோ என்று அஞ்சுவது இயல்பு. நீதிபதி என்ன தீர்ப்பு சொல்வாரோ என்று பதைபதைப்பதும் இயல்பு. ஆனால் தனக்கு எதிராக வாதிடும் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்தான் கடைசியவரை, தனக்கு எதிராக வாதாட வேண்டும் என்று வழக்குப்போட்ட முதல் நபர் ஜெயலலிதாதான், நீதிமன்ற வரலாற்றில். காரணம் பவானிசிங் பெயரளவில் அரசு வழக்கறிஞர். ஜெயலலிதா குழுவுக்கு ஆதரவாகச் செயல்படுபவர். இதனை தி.மு.க. சுட்டிக்காட்டி அவரை அப்பதவியில் இருந்து நீக்கிய போதுகூட, உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, பவானிசிங்கையே தனக்கு எதிராக வாதாடச் செய்தவர் ஜெயலலிதா.

இங்கே சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது கேள்விக்குறியாக மாறியதா, இல்லையா? தான் சொல்லும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் ஜெயலலிதா ஆதரவு நடவடிக்கையால் அவருக்கு நீதிபதி குன்கா அபராதம் விதித்து தண்டனை அளித்தது ஊரறிந்த உண்மை.

இது மட்டுமா! தன் வழக்கில் தான் சொல்பவர்தான் நீதிபதியாக இருக்க வேண்டும் என்று எந்தக் குற்றவாளியாவது நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? தன் வழக்கின் நீதிபதியாக பாலகிருஷ்ணாதான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை போய் வழக்காடியவர் ஜெயலலிதா.

ஆனாலும் நீதிமன்றத்தில் இன்னமும் நீதி வீழ்ந்து விடவில்லை. நேர்மையான நீதிபதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் 18 ஆண்டுகளைக்கடந்தும், ஜெயலலிதா எவ்வளவு வாய்தா வாங்கினாலும், மனுமேல் மனுக்களைப் போட்டாலும் உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம் - சிறப்பு நீதிமன்றம் என்று அலைந்து இழுக்கப் பார்த்தாலும் வழக்கு இறுதி நிலையை அடைய இருக்கிறது.

இந்நிலையில் வாய்தாக்கள் தொடர்கின்றன என்பன போன்ற, ஜெயலலிதாவின் ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த விரிவான செய்திகளை கலைஞரின் எழுத்து வடிவில் தாங்கிவரும் “சொத்து குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்ற நூல் மக்கள் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்றால் மிகையாகாது!

சொத்துக் குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை
ஆசிரியர் : தலைவர் கலைஞர்
வெளியீடு : தி.மு.கழகம்
அண்ணா அறிவாலயம்,
சென்னை - 18.
விலை : ரூ. 50-/

Pin It