தேர்தல் முடிவுகளை முன்வைத்து, மூத்த பத்திரிகையாளரும், சிறந்த மார்க்சியச் சிந்தனையாளருமான தோழர் இரா. ஜவஹர் அவர்களுக்குச் சில வினாக்களை அனுப்பியிருந்தோம். அவற்றிற்கு அவர் அனுப்பிய விடைகள் இங்கே...

1. தமிழகத்தில் தி.மு.கழகமும், இந்திய அளவில் பொதுவுடைமைக் கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித் துள்ளன. சித்தாந்தங்களின் அடிப் படையிலான அரசியலைவிட்டு மக்கள் விலகிப் போகின்றனரா?

அப்படி ஒரு தோற்றம் உள்ளது உண்மைதான்.

“ சோஷலிசம், கம்யூனிசம், சுயமரியாதை, சமூக நீதி போன்ற சித்தாந்தங்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. இது போட்டிகள் நிறைந்த உலகம். எல்லோரும் போட்டியிடலாம். நீயும் போட்டியிடு. சரி, தப்பு, நீதி, அநீதி, சுயநலம், பொதுநலம் என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாதே. வெற்றி - அது ஒன்றுதான் குறிக்கோள். எது வெற்றி ? பணம், பதவி, அதிகாரம், சுகபோகம் - அதுதான் வெற்றி. அதை அடைய என்ன வேண்டுமானாலும் செய். வென்றவரை எல்லோரும் போற்றுவார்கள். அவர் செய்த அநீதிகள் கூட சாமர்த்தியம் என்று பாராட்டப்படும். எனவே உனது வளர்ச்சியை நீ பார். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. இப்படியே அனைவரும் வளர்ச்சி அடையலாம். சமூகமே வளர்ச்சி அடைந்துவிடும். இதற்குச் சித்தாந்தம் எல்லாம் தேவையில்லை. “ - இந்தக் கண்ணோட் டம்தான் இப்போது மக்களை, குறிப்பாக இளைஞர்களை வழி நடத்துவது போலத் தோன்றுகிறது.

சித்தாந்தங்கள் காலாவதி யாகிவிட்டன என்ற கண்ணோட்டம் இப்போது உருவானதில்லை. 1950 ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்க நாட்டில் உருவாகிவிட்டது. இதை உருவாக்கிய வர்களில் பிரபலமானவர் டேனியல் பெல் என்னும் சமூகவியல் வல்லுநர். அவரது கட்டுரைகளின் தொகுப்பு 1960 ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் தலைப்பே “ சித்தாந்தத்தின் முடிவு “ என்பதுதான்.

“ உணர்ச்சி நிரம்பிய, மனித வாழ்க்கை முழுவ¬ தயும் மாற்ற முனைகிற சித்தாந்தங்கள்தான் தாராளவாதமும் (முதலாளித்துவம் ), சோஷலிசமும். ஆனால் இவை மக்களைத் திரட்டும் திறனைக் கடைசியாக இழந்துவிட்டன. ஏனென்றால் போர், பொருளாதார மந்தம், அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை இந்தச் சித்தாந்தங்களால் தடுக்க முடியவில்லை. எனவே வளர்ந்த நாடுகளில் இனி சித்தாந்த அடிப்படை யிலான நடவடிக்கைகளுக்கு வேலை இல்லை. அவ்வப்போது எழும் பிரச்சினை களுக்கு அவ்வப்போது தீர்வு உருவாக்கிக் கொள்ளப்படும்” என்பது அவரது கருத்தின் சுருக்கம்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளி லேயே ஐரோப்பிய நாடுகளில் இடது சாரிக் கண்ணோட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் பெரும் எழுச்சிகளை நடத்தினார்கள். 1960, 1970 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்த எழுச்சிகள் ஆட்சி மாற்றங் களையும், பெரும் சமூக சீர்திருத்தங் களையும் ஏற்படுத்தின. வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் சோஷலிசப் புரட்சிகள் வெற்றி வாகை சூடின. ‘சித்தாந் தத்தின் முடிவு’ என்ற கணிப்புப் பொய்யானது.

பிறகு 1990 ஆம் ஆண்டுகளில் போலந்து தொடங்கி, சோவியத் நாடு வரை பல நாடுகளில் சோஷலிசம் வீழ்ந்தது. உடனே ‘வரலாற்றின் முடிவு’ என்ற புத்தகம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அரசியல் வல்லுநர் ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா எழுதிய புத்தகம் அது.

“மனித இனத்தினுடைய சித்தாந் தத்தின் பரிணாம வளர்ச்சி தனது இறுதிப் புள்ளியை அடைகிறது; மேற்கு நாடுகளின் தாராளவாத ஜனநாயகம் என்பது உலகம் முழுவதும் அரசாங் கங்களின் இறுதி வடிவமாக ஆகிறது; வரலாறு முடிகிறது. இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்” என்று அதில் அவர் கூறினார்.

ஆனால் அதன் பிறகுதான் வெனிசுலா உள்ளிட்ட பல தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

ஆகவே சித்தாந்தமோ, வரலாறோ முடியவில்லை; தொடர்கின்றன. முற்போக்குச் சித்தாந்தங்களுக்கும், பிற்போக்குச் சித்தாந்தங்களுக்கும் இடையிலான போராட்டமும் தொடர்கின்றது. வெற்றி தோல்விகள் மாறி மாறி வருகின்றன.

எனவே “தமிழகத்தில் தி.மு.கழகமும், இந்திய அளவில் பொதுவுடைமைக் கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்துள் ளன. சித்தாந்தங்களின் அடிப்படை யிலான அரசியலைவிட்டு மக்கள் விலகிப் போகின்றனரா?”

இல்லை.சித்தாந்தங்களின் அடிப் படையிலான அரசியலைவிட்டு மக்கள் விலகிப் போகவில்லை.

ஒருவகையான சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசியலை விட்டு விலகி, வேறுவகையான சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசியலுக்குப் போகிறார்கள்.

இந்தத் தேர் தலில் இந்திய அளவில் பார்த் தால், காங்கிரஸ் மற்றும் கம்யூ னிஸ்ட் இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்த மக் களில் கணிசமானோர் விலகி, பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் போயிருக் கிறார்கள்.

அதாவது“வேற்றுமை யில் ஒற்றுமை” என்னும் காங்கிரஸின் சித்தாந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியிருக்கிறார்கள்; “ஒரு பாரதம், சிறந்த பாரதம்” என்னும் பா.ஜ.க.வின் சித்தாந்த நிலைப்பாட் டுக்குப் போயிருக்கி றார்கள். வேற்றுமைகளை அங்கீகரிக்காத இந்துத் துவா சித்தாந்தம் இது.

அதேபோல “உழைக்கும் மக்களுக்கு நலன் தரும் வளர்ச்சி; பெருமுதலாளிகளுக்குச் சலுகை ரத்து” என்னும் கம்யூனிஸ்ட் இயக்கச் சித் தாந்த நிலைப்பாட்டி லிருந்து விலகியிருக் கிறார்கள்; “அனைவருக் கும் பொதுவான வளர்ச்சி” என்னும் பா.ஜ.க.வின் சித்தாந்த நிலைப்பாட்டுக் குப் போயிருக்கிறார்கள். அனைவருக்கும் பொதுவான வளர்ச்சி என்பதன் பெயராலேயே, அதானியையும், அம்பானிகளையும் மலையளவு வளர்த்துள்ள முதலாளித்துவச் சித்தாந்தம் இது.

தமிழ்நாட்டில் “பிற் படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக மேல் தட்டு மக்கள் என்று கருதப்படுவோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படு வதற்கு எதிர்ப்பு” என்னும் தி.மு.க.வின் சமூக நீதிச் சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியிருக்கிறார்கள்; “ சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்குச் சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும்” என்னும் அ.தி.மு.க.வின் சித்தாந்த நிலைப் பாட்டுக்குப் போயிருக்கிறார்கள். சமூக நிலையையும், பொருளாதார நிலையை யும் இணைத்து நிபந்தனை போடும், ஆதிக்கச் சாதிகளின் சித்தாந்தம் இது.

அதே நேரத்தில், இவ்வாறு போன வர்கள் எல்லாம் இந்தச் சித்தாந்த வேறு பாடுகளைப் புரிந்து கொண்டுதான் போனார்கள் என்று இதற்கு அர்த்த மில்லை.

எந்த மனிதரும் சித்தாந்தம் இல்லாமல் இருக்க முடியாது; அதை அவர் உணரலாம் அல்லது உணராமல் இருக்கலாம். ஆனால் சித்தாந்தம் இருக் கும். இதை அவரது சொல்லோ, செயலோ, நேரடியாகவோ, மறைமுகமாக வோ வெளிப்படுத்திவிடும்.

அதே போலச் சித்தாந்தம் என்றாலே அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கும் சித்தாந்தம் உண்டு.

சித்தாந்தம் என்ற சொல்லையே அ.தி.மு.க. உச்சரிப்பதில்லை. ஆனால் அதனுடைய இந்துத்துவா ஆதரவுப் போக்கும், மற்ற பல பிற்போக்கான சித்தாந்த நிலைப்பாடுகளும் விவரம் அறிந்தோருக்குத் தெரிந்தவைதான்.

ஆம் ஆத்மி கட்சி, சித்தாந்தம் வேண்டாம் என்ற அர்த்தத்தில் வெளிப்படையாகவே சொல்கிறது. “ மரபு வழிப்பட்ட சித்தாந்தங்களால் கட்டுப் படுத்தப்படாத அணுகுமுறையைத்தான் நாங்கள் நம்புகிறோம்; நாங்கள் இடதுசாரியும் இல்லை; வலதுசாரியும் இல்லை” என்று அந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறுகிறது. அதிலேயே “தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக் கூடாது.அவை தனியார் துறையில்தான் (முதலாளிகளிடம்தான்) இருக்க வேண் டும்” என்றும் கூறுகிறது. இது அப்பட்ட மான வலதுசாரிச் சித்தாந்தம்தானே.

எனவே மக்களின் கணிசமான பகுதியினர், ஒருவகையான சித்தாந் தத்தின் அடிப்படையிலான அரசியலை விட்டு விலகி, வேறுவகையான சித்தாந் தத்தின் அடிப்படையிலான அரசிய லுக்குப் போயிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஏன் போனார்கள் ? தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் இந்தத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் ?

தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்களை தி.மு.க. ஆதரவாளர்களே சொல்லட்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்விக்கான காரணங்களை அடுத்த கேள்விக்கான பதிலில் சொல்கிறேன்.

2. இந்திய நாடாளு மன்றத்தில், 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் 53 இடங் களையும், 2009ஆம் ஆண்டுத் தேர்தலில் 20 இடங்களையும் பெற்ற பொதுவுடைமைக் கட்சி கள், 2014 தேர்தலில் வெறும் 10 இடங்களை மட்டுமே பெற்றுள் ளன. இந்தத் தேய்மானத்திற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டி லும் புதுச்சேரியிலும் இரு பொதுவுடைமைக் கட்சிகளும் இணைந்து 18 இடங்களில் போட்டியிட்டு, ஒரு சதவீதத் திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். 1952இல் எதிர்க் கட்சியாக இருந்த பொதுவுடை மைக் கட்சிகளின் இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணம்?

இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. ஒன்று, புறநிலைக் காரணம். இரண்டு, அகநிலைக் காரணம்.

முதலில் புறநிலைக் காரணம் :

சமூகத்தில் பணம், சாதி, மதம் ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்து கின்றன. இந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஆதிக்க சக்திகளிடம்தான் அரசு அதிகாரம் முதல் பிரச்சார சாதனங்கள் வரை அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இந்த ஆதிக்க சக்திகள் அனைத்துக்கும் முதல் அரசியல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிகள். எனவே எந்தக் கட்சி வளர்வதையும் ஆதிக்க சக்திகள் ஏற்றுக் கொள்ளும்; ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதை மட்டும் ஒரு போதும் பொறுத்துக் கொள்வதில்லை; என்ன விலை கொடுத்தும் ஒடுக்கும் என்பதே பொதுவான இந்திய வரலாறு. அத்தனை ஒடுக்குமுறைகளையும் சந்தித்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பது என்பது காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவது போல மிக மிகக் கடினமானது.

அடுத்து அகநிலைக் காரணங்கள் :

1. “முதலாளித்துவக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான்” என்று நீண்ட காலமாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் முன் தங்களை முன் நிறுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க.தான், அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.தான் என்று கூட்டணியின் பெயரால் இவர்களே சொல்கிறார்கள். கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா தவிர இந்திய அளவிலும் இதைப் போலத்தான் நிலை எடுக்கிறார்கள். இதனால் தங்களது ஒப்பில்லாப் பெருமை மிக்க சுய அடையாளத்தை மிகப் பெரும் அளவுக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே இழந்துவிட்டன. இந்த இழப்பின் விளைவே இந்தத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.

2.பொருளாதாரம், அரசியல் தளங்களில் செலுத்திய அளவுக்குக் கவனத்தை, சாதி, மதம், பெண்ணியம், மொழி போன்ற சமூகத் தளத்திலும், கலை, இலக்கியம், ஊடகம் போன்ற பண்பாட்டுத் தளத்திலும் செலுத்த வில்லை.

3. இந்தத் தேர்தலின் மிகப் பெரும் சரிவுக்கு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வியே முதன்மையான காரணம். டாட்டா, பிர்லாக்களை எதிர்த்தே வளர்ந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால் அதன் தலைமையிலான ஆட்சியில் கடைசிக் காலத்தில் தொழில் வளர்ச்சியின் பெயரால் அதே டாட்டா வுக்காகவும், வெளிநாட்டு முதலாளிக் காகவும், சிங்கூரிலும், நந்திகிராமத்திலும் விவசாயிகள் ஒடுக்கப்பட்டார்கள். இது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது போக அனைத்துத் துறைகளிலும் இடது முன்னணி அரசு சிறப்பாகச் செயல்படத் தவறியது. அவற்றின் பலனை இப்போது மார்க்சிஸ்ட் கட்சி அறுவடை செய்துள்ளது.

4. மற்ற பல காரணங்கள்.

3. காங்கிரசுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று கூறிய பொதுவுடைமைக் கட்சியினர், தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி பற்றிப் பேசியதை மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி நியாயப்படுத்தி உள்ளது சரியா?

சரியில்லை.

4. உலகில் உள்ள பொதுவு டைமை நாடுகள், சீனா தொடங்கி கியூபா வரை, ஈழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பது குறித்து...?

மிக மிக வருந்தத்தக்கது. வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது.

5. வர்க்கப் போராட்டமே இந்தியாவின் தேவை என்று கருதிய பொதுவுடைமைக் கட்சியினர், வருணசாதிப் போராட்டமும், தேசிய இனப் போராட்டமும்தான் இந்தியாவின் இன்றைய தேவை என்று தங்கள் கருத்தை மீள் பார்வைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்களா?

வருணசாதிப் போராட்டத்தின் பெயரால், ஆளும் வர்க்கங்களை ஆதரிக்கும் அமைப்புகளை எதிர்த்தும், உழைக்கும் வர்க்கத்தை ஆதரித்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. பார்ப்பன எதிர்ப்பின் பெயரால் மற்ற ஆதிக்க சாதியினர், தலித் மக்கள் மீது நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் விடும் அமைப்புகளை எதிர்த்தும் போராட்டம் தொடர்கிறது. தேசிய இனத்தின் பெயரால் அதே தேசிய இனச் சகோதர அமைப்பினரைப் படுகொலை செய்ததை எதிர்க்கும் கண்ணோட்டமும் நீடிக்கிறது.. “இந்தி ஒரு போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்” என்ற முழக்கத்தின் பெயரால் தமிழைப் புறக்கணிப்பதை எதிர்ப்பது தொடர்கிறது.தமிழினப் பண்பாட்டு மரபின் பெயரால் பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் போக்கை எதிர்ப்பதும் தொடர்கிறது. இவற்றில் எதிலும் மீள் பார்வை தேவைப்படவில்லை.

இந்தியாவில் வர்க்கம் என்பது உள்ளடக்கமாகவும், சாதி அதன் வடிவமாகவும் உள்ளன; எனவே ஒன்றை வைத்துக் கொண்டு மற்றதை ஒழிக்க முடியாது; இரண்டு போராட்டங்களும் இணையாக நடத்தப்பட வேண்டும்; சமூக, பண்பாட்டுத் தளங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற புரிதலும் செயல்பாடும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அதிகரித்து வருகின்றன.

6. 1964ஆம் ஆண்டு பிளவுண்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மீண்டும் இப்போது இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர். அது சரிதானா? அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சரிதான். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பு அனேகமாக இல்லை.

7. பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களை ஜெயலலிதா கடுமையாக அலட்சியப்படுத்தியபோதும், அவமதித்தபோதும், இறுதிவரை அ.தி.மு.க. வுடனான உறவை தொடர விரும்பியதற்கு என்ன காரணம்?

சுயமரியாதையைத் ‘ தியாகம்’ செய்தாவது சில எம்.பி. சீட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என்னும் அளவுக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நாடாளுமன்றவாதம் செல்வாக்குச் செலுத்துவதுதான் காரணம்.

8. ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தமட்டில், தி.மு.க., காங்கிரஸ் மீது ஒரு விதமான பார்வையும், அ.தி.மு.க. மீது இன்னொருவிதமான பார்வையும் பொதுவுடைமைக் கட்சிகள் கொண்டிருப்பது ஏன்?

மக்களின் மன நிலைதான் காரணம். மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு அமோக ஆதரவும், அ.தி.மு.க. மீது கடும் வெறுப்பும் இருந்திருந்தால் அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பார்வை மாறியிருக்கும். மற்றபடி காங்கிரசுக்குப் பொதுவான எதிர்ப்பு என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுவான கொள்கை.

Pin It