சென்ற வாரம் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்களில், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் வெவ்வேறு ஊர்களில் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக 10 நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் கலந்துகொண்டபின் பெற்ற அனுபவங்கள் ‘இதுதான் அடுத்த நகர்வு’ என்னும் புது நம்பிக்கையைத் தந்தன.

பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் காசு.நாகராஜனின் திட்டமிடுதலும், உழைப்பும் என்னை வியக்க வைத்தன. அவருடன் இணைந்து பேரவைத் தோழர்கள் பலரும் கடும் பணியாற்றினர். பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சிற்பிசெல்வராஜ், மூன்று நாள்களும் என் கூடவே பயணித்து எனக்குத் துணை புரிந்தார்.

subavee 499மாநகரங்கள், நகரங்கள், படித்த நடுத்தட்டு மக்கள் என்பதாகத்தான் என் சுற்றுப்பயணம் பெரிதும் அமையும். ஆனால் இம்முறை பத்து நிகழ்வுகள் பல, கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, திருமலையம்பாளையம், வாளவாடி, இம்மிடிப்பாளையம் ஆகிய மூன்று சிற்றூர்கள் எனக்குள் ஒரு சிந்தனை மாற்றத்தையும், புதிய புரிதலையும் ஏற்படுத்தின என்றே சொல்லலாம்.

மதுக்கரை ஒன்றியம் திருமலையம்பாளையத்திற்கு ஒரு மாலைப் பொழுதில் சென்று இரவு வரையில் இருந்தோம். தோழர்கள் சிலம்பரசன், பாலமுரளி உள்ளிட்டோர் ஒரு பள்ளியில் அவ்வூர் மக்களைத் திரட்டி அமர்த்தியிருந்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் கவிதாவின் தலைமையில் அச்சந்திப்பு நடைபெற்றது. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வெவ்வேறு வயதில் அங்கு அமர்ந்திருந்தனர். முதலில் நம் பாடகர் கண்ணையா ஓங்கிக் குரலெடுத்துப் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் இரண்டினைப் பாடினார்.

முன்வரிசை முழுவதும் குழந்தைகள். சலசலவென்று பேசிக் கொண்டிருந்தனர். முதலில் அவர்களோடு நான் பேசத் தொடங்கினேன். பால்வாடியிலிருந்து நான்காம் வகுப்பு வரையிலான பிள்ளைகள் அவர்கள்! அங்கிருந்த பதாகையில் உள்ள படத்தைக் காட்டி அது யார் என்று கேட்டேன். எல்லாப் பிள்ளைகளும் ‘பெரியார்’ என்று உரத்துக் குரல் கொடுத்தன. எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி!

‘தொண்டு செய்து பழுத்த பழம்’ எனத் தொடங்கும் பெரியார் பற்றிய பாடலை நிதானமாக அந்தப் பிள்ளைகளிடம் சொன்னேன். பிள்ளைகள் திரும்பிச் சொன்னார்கள். மீண்டும் மீண்டும் சொல்லி அந்தப் பாடலை அவர்கள் மனங்களில் பதிய வைத்தேன். பிறகு அதே பாடலில் வரும் “அன்பு மக்கள் கடலின் மீதில், அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்” என்னும் வரிகளை, உயர்நிலையில் படிக்கும் மாணவர்களிடம் சொல்லி, அதன் பொருளையும், அப்பாடல் எழுதப்பட்ட சூழலையும் எடுத்துச் சொன்னேன். அவர்கள் அத்தனை பேரும் கவனமாகக் கேட்டார்கள்.

கூடியிருந்த பெண்களை நோக்கி அவர்களுக்காகப் பெரியார் என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கதை சொல்வது போல் விளக்கிச் சொன்னேன். ஆர்வமாய்க் கேட்டார்கள். கவனம் திசை திரும்பாமல் அந்த மக்கள் செய்திகளைக் கேட்டுக் கொண்டபோது, பயணக் களைப்பெல்லாம் தீர்ந்து விட்டது.

மறுபடியும் உங்களைப் பார்க்க, வரும் செப்டம்பர் மாதம் வருகிறேன் என்றும், அப்போது இப்படி இல்லாமல், ஒரு நாள் முழுவதும் உங்களோடு இருப்பேன் என்றும் கூறியபோது, அங்கு எழுந்த கையொலி அன்று நான் பெற்ற புது நம்பிக்கையாக இருந்தது. கூட்டம் முடிந்து வெளியில் வரும்போது, வாசலில் என்னை வழியனுப்ப நின்ற சிறுமிகள், “தாத்தா, உண்மையா மறுபடி வருவீங்களா?” என்று கேட்டனர். கண்டிப்பா வருவேன் என்று சொன்னதும், “ஐ, ஜாலி!” என்று குரல் எழுப்பினர். அந்த ஒலி , ஆயிரம் பாராட்டுகளுக்குச் சமம் என்று தோன்றியது.

அன்று இரவு திமுகவைச் சேர்ந்த, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராசன் அவர்களின் மகள் ராணி சித்ரா வீட்டில் அன்பான வரவேற்பும், இரவு விருந்தும்!

மறுநாள் வாளவாடி! உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள ஊர். திருமூர்த்திமலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. அந்தக் கிராமத்திற்குள் நுழையும்போதே, மகிழ்ந்து வரவேற்ற தோழர்கள், ‘நேற்றிலிருந்து ஒரே போராட்டம்’ என்றனர். எனக்குப் புரியவில்லை. என்ன போராட்டம் என்று கேட்டேன். தோழர் நாகராஜன் விளக்கினார். அங்குள்ள ஒரு மண்டபத்தில் நாங்கள் உரையாற்றுவதாக ஏற்பாடு. அந்த மண்டபத்தில் என்னைப் பேச அனுமதிக்கக்கூடாது என்றும், மீறி அனுமதித்தால், எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கும் என்றும், அந்த ஊரில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் பாஜகவினர் மிரட்டினார்களாம். மண்டப உரிமையாளர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள்.

‘அவர் கடவுள் இல்லை என்று பேசுவாராம். எனவே கூட்டம் நடத்த அனுமதியில்லை’ என்று சொல்லி, முன்பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர். திமுக நண்பர்கள் தலையிட்டு அனுமதி பெற்றுள்ளனர். எதிர்ப்பும் நல்லதாக ஆகிவிட்டது. நான் அந்த ஊருக்கு அன்றுதான் முதன்முதலில் செல்கிறேன், அங்கு யாருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் அன்று பெரும் கூட்டம். அரங்கம் நிரம்பி வழிந்தது.

சிற்பியும், நாகராஜனும் தங்கள் உரையில் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தினர். எனக்கும் அது நல்ல வாய்ப்பாக ஆயிற்று. பாஜக கூட்டம் எப்படி ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும், இன்று நடக்கும் தளபதியின் ஆட்சி எப்படியெல்லாம் மக்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினேன். ஏறத்தாழ 50 நிமிடங்கள் அன்று

ஆற்றிய உரையை அந்த ஊர் மக்கள் விரும்பிக் கேட்டனர். ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த தோழர்கள் உடுமலை நாககுமார், கண்ணப்பன், விஜய்சங்கர், ரிஷி ஆகியோர் முகங்களில் மகிழ்சசியைப் பார்க்க முடிந்தது! திமுகவின் உடுமலை வேலுச்சாமி உரைகள் முழுவதையும் செவிமடுத்தார். கூட்டம் முடியும் தருணத்தில், திமுக மாவட்டப் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராம் கிருஷ்ணன் வந்து வாழ்த்தினார்.

பிறகு, மறுநாள் காலையில் , கிணத்துக்கடவு அருகில் உள்ள இம்மிடிபாளையம் என்னும் சிற்றூர். ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர். அந்த மக்களைப் பார்க்கும்போதே அவர்களின் வறுமை வெளிப்படையாகத் தெரிந்தது. பெரியார் மணி என்னும் தோழர் அவர்களுக்காக உழைக்கின்றவராக, அந்த ஊரிலேயே வாழ்கின்றவராக இருந்தார். அவர்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அவர்கள் ஏதும் கேட்காமலேயே, அந்த ஊர்ப் பிள்ளைகளின் கல்விக்கு எங்கள் அமைப்பினால் முடிந்ததைச் செய்கிறோம் என்று உறுதியளித்தேன். அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அருந்ததிராய் என்னும் ஒரு சிறுமி (“அந்த ஊரில் அப்படி ஒரு பெயர் என்பது வியப்பாக இருந்தது), “எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்தில், பாடப்புத்தகம் தவிர, சீருடை, உபகரணங்கள், காலணி எதுவும் வழங்கப்படவில்லை” என்று கூறினார். எல்லாவற்றையும் செய்துகொடுக்கும் அதிகாரம் எதுவும் நம்மிடம் இல்லையென்றாலும், அதிகாரம் உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு நமக்கு உள்ளது. எனவே உயர் கல்வி அதிகாரிகளின் பார்வைக்கு அதனைக் கொண்டு செல்ல முடிவெடுத்தேன்.

 ஊரில் அருந்ததியர் மக்கள்தான் கூடுதல் எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறினர். இதுபோன்ற ஓரிரு கிராமங்களையாவது, நம் சொந்தக் கிராமம் போல் எண்ணி, அந்த மக்களுக்கு இயன்றதைச் செய்திட வேண்டும் என்று நெஞ்சுக்குள் ஓர் உறுதி ஏற்பட்டது.

அடுத்து, கிணத்துக்கடவில் நடைபெற உள்ள தூய்மைத் தொழிலாளர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தோம். அந்த மக்கள் எங்கள் அனைவரோடும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேநீர் அருந்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் அன்பிற்கு இணங்கினோம்.

எனக்குச் சர்க்கரை இல்லாத தேநீர் வேண்டும் என்று கேட்டேன். கொடுத்தார்கள். ஆனாலும் அது இனித்தது!

Pin It