புதுடில்லியில் திராவிட மாவீரன் இராவணன் உருவத்துக்கு தீ வைத்துக் கொண்டாடும் ‘இராமலீலா’வில் இந்த ஆண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் கலந்து கொண்டு தென்னாட்டு மக்களை மீண்டும் அவமானப்படுத்தி விட்டார்கள்.
இராமாயணம் என்பது நடந்த வரலாறு அல்ல என்றாலும், ஆரியர் - திராவிடர் போராட்டத்தைக் குறிக்கும் கதை தான் என்பதை பெரியார் மட்டுமல்ல, ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் போன்ற பலரும் கூறி விட்டனர். ஆரிய தர்மத்தைக் காக்கப் புறப்பட்டவர்கள், திராவிட மாவீரனை நயவஞ்சகத்தால் வீழ்த்திய அதே ‘இராமாயணக் காதை’யைத்தான் இந்திய தேசியப் பார்ப்பனியம் இப்போது அதே இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது.
இராவண பரம்பரையான எமது ஈழப்போர் தமிழ் மறவர்களை அதே பார்ப்பன சூழ்ச்சி, வஞ்சகத்தால், ‘வாலி-சுக்ரீவன்-அனுமார்’ துரோகப்படைகளோடு வீழ்த்திக் காட்டியவர்கள் அதன் வெற்றிக் களிப்பை ‘இராவணனை’ எரித்து கொண்டாடி மகிழ்ந்து குதூகலிக்கிறார்கள்.
டெல்லியிலே - இப்படி ‘இராமலீலா’ நடத்தி மகிழ்ந்த பார்ப்பன கூட்டத்துக்கு ஒரு காலத்தில் கடும் எச்சரிக்கை விடுத்தவர் தான் இன்று முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள கலைஞர்!
“நாம் அறுதியிட்டுக் கூற முடியும். புராணம் திரும்பியே தீரும். இராம-இராவண யுத்தத்தில் ஜெயிக்கப் போவது திராவிடத்து வீரன் இராவணன்” என்று எழுதிய கலைஞர் டெல்லியிலே இராமலீலா என்ற பெயரில் ராவணன் உருவங்களை எரிப்பது தொடர்ந்தால், ‘தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடக்கும் காலம் வந்தே தீரும்’ என்று எச்சரித்தார். (‘முரசொலி’ 8.10.1954)
அதே கலைஞர் இப்போது இராவணன் வதையை ஈழத்தில் நடத்தி முடித்துவிட்டு, ‘இராவண எரிப்பை’ கொண்டாடி மகிழும் மன்மோகன் - சோனியாவைக் கண்டிக்க முன் வராமல் மவுனம் காக்கிறார். இதை கண்டிப்பார் என்று நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், இந்த வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் ‘தேச பக்தர்களை’ நாம் கேட்பதெல்லாம் இதைத் தான். தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தும் ‘இராமலீலாக்களை’ கொண்டாடி மகிழ்வோர், உண்மையான ‘தேசிய ஒருமைப்பாட்டை’ உருவாக்க துடிப்பவர்களா? அல்லது உடைக்கத் துடிப்பவர்களா? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தால், ‘தேச விரோதம்’ என்று கூறி தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படும்போது, ‘இராம லீலா’ நடத்துவோர் மட்டும் தேசபக்தர்களாகி விடுவார்களா? வடநாட்டிலே கூட இன்றைக்கும் இராவணனை வழிபடக் கூடிய பழங்குடி மக்கள் உள்ளார்களே! ம.பி. மாநிலத்தில் ராமதேவ் வைணவ சமூகத்தினர் இரவாணன் உருவத்தை வைத்து வழிபடும் செய்திகள் கூட ஏடுகளில் வந்துள்ளதே; இவர்கள் உணர்வுகளை மன்மோகனும் சோனியாவும் புண்படுத்தலாமா என்று கேட்க விரும்புகிறோம்.
இந்த நிலையில், மற்றொரு கருத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கும் சில அமைப்புகள், தமிழர் உரிமைக்கு பகை ‘திராவிடம்’ தான் என்று பரப்புரை செய்து வருகின்றன. தமிழனின் அரசியல் உரிமைகளுக்கு குறுக்கே நிற்பவர்கள் எவராக இருந்தாலும், அது கேரள, கன்னட, மலையாள ஆட்சிகளாக இருந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டிய நியாயத்தை எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால், தமிழனின் மீது சுமத்தப்பட்டுள்ள பார்ப்பன பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்கும் ஆரியத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் ‘திராவிடர்’ எனும் அடையாளத்தையே முன்னிறுத்த வேண்டியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
‘திராவிடர்’ என்ற பண்பாட்டு அடையாளத்தை ஆரியப் பார்ப்பன கலாச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்துவதையும் தமிழர் உரிமைகளை இழப்பதற்கு வழிவகுக்கும் ‘திராவிடத்தை’யும் ஒன்றாகக் குழப்புவது தமிழரின் உண்மையான விடுதலைக்கு இட்டுச் செல்லாது. மீண்டும் இந்திய தேசிய பார்ப்பனியத்துக்குள் தமிழனை முடக்கி வைக்கவே பயன்படும்.
இதைத்தான் டெல்லியில் நடக்கும் ‘இராமலீலாக்கள்’ சுட்டிக் காட்டுகின்றன.