இலங்கையின் படைத்தளபதிகள் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு பயிற்சி பெற வந்த செய்தியறிந்து, கழகத் தோழர்களும், ஆதரவு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இராணுவ அதிகாரிகள் குன்னூரிலிருந்து வெளியேறினர். அவர்களை ஆந்திர மாநிலம் அய்தராபாத் இராணுவப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி விவரம்:
தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல். பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி. பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்கடன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே 11.3.2008 அன்று மாலை பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டி எழுச்சி மிக்க கண்டன ஆர்ப்பாட்டத்தை கழகம் நடத்தியது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்திருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, திருப்பூர் துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலையரசன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் முகிலன், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் தனசேகரன், ஆதித் தமிழர் பேரவையின் நந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முத்தமிழ் செல்வன், லோக் ஜனசக்தியின் குப்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இனப்படுகொலை நடத்தும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவியை இந்தியா வழங்குவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து 16.3.2008 அன்று வெலிங்டன் இராணுவப் பயிற்சியகம் முன்னிலையே ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. தொடர் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக சிங்கள ராணுவ தளபதிகள் பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டது. 14 ஆம் தேதியே சிங்கள படைத் தளபதிகள் குன்னூரிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் வெலிங்டன் இராணுவ பயிற்சி மய்யம் முன் திரண்டபோது சிங்கள இராணுவ தளபதிகள் ஏற்கனவே வெளியேறிய செய்தி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
(கோவை ‘தினத்தந்தி’ நாளேடும் கழகப் போராட்டத்தினால் சிங்கள தளபதிகள் வெளியேறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.)