திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இதழான ‘கருஞ்சட்டைத் தமிழர்’ 11 ஆண்டு காலம் தன் பயணத்தைத் தொடர்ந்து 12ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

26--07--2007ஆம் நாள் சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘கருஞ்சட்டைத் தமிழர்’ முதல் இதழை வெளியிட்டு, “இதழ் நடத்துவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. இன்றைக்கு மாத இதழாக வெளிவரக் கூடிய கருஞ்சட்டைத் தமிழர் இதழ், வார இதழாக வரவேண்டும். அதையும் தாண்டி, நாளேடாக வந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த இதழ் வளர்ச்சி பெற வேண்டும் என உங்கள் அனைவரின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வாழ்த்துரை வழங்கினார்.

முதல் இதழைப் பெற்றுக் கொண்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, “தந்தை பெரியார், தோழர் ஜீவா, தோழர் சிங்காரவேலர் ஆகியோர் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் ஆற்றிய சுயமரியாதைக் கருத்துகளை கருஞ்சட்டைத் தமிழர் இதழ் வெளியிட வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்று தன் வாழ்த்துரையில் கூறினார்.

கவிஞர் மு.மேத்தா தன் வாழ்த்துரையில், ‘‘இன்றைக்குக் கருஞ்சட்டை தமிழ்நாட்டில் ஒரு வெளிச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. இருட்டின் நிறமான கருப்பு ஒரு புதிய வெளிச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. அந்த வகையில் வெளியாகியுள்ள ‘கருஞ்சட்டைத் தமிழர்’ மாத இதழ் படிப்படியாக வளர்ந்து வார இதழாக வெளிவர வாழ்த்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து வழக்கறிஞர் அருள்மொழி, தென்கச்சி கோ.சாமிநாதன், இயக்குநர் சீமான், மும்பை அப்பாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

தொடக்கத்தில் பொள்ளச்சி மா.உமாபதி அனைவரையும் வரவேற்றார். கயல் தினகரன், இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாவல்பூண்டி சுந்தரேசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் இறுதியில் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ ஆசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரைக்குப் பின் தமிழ் முழக்கம் சாகுல் அமீது நன்றி கூறினார்.

இவை தவிர, கடந்த 11 ஆண்டுகளில், பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது கருஞ்சட்டைத் தமிழர் இதழ்.

தொடக்கத்தில் மாத இதழாக, பல்வண்ண அட்டையுடன் ஏ4 என்ற அளவில் வெளிவந்த இதழ், சிறந்த வரவேற்பைப் பெற்றும் தொடர்ந்து அதை வெளியிட இயலவில்லை. காரணம் பொருளாதாரம். எனவே 2008ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து மாதம் இருமுறையாக, எட்டுப் பக்கங்கள் கொண்டு முழுவதும் கருப்பு வெள்ளையில் வெளிவரத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து 15-01-2011 முதல் இருவண்ணத்தில் வெளிவந்த கருஞ்சட்டைத் தமிழர் இதழ், 28-10--2017ஆம் நாள் தொடக்கம், மின்னிதழாக வெளிவந்து கொண்டு இருக்கிறது, வாரந்தோறும்.

இதழ் வெளியீட்டு விழாவின் போது, ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சுபவீ, அப்போது அந்த இதழைக் கொண்டுவந்தது போல, பல்வெறு பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நேரங்களிலும், இதழ் நின்றுவிடாமல் தொடர்ந்து வெளிவருவதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இதழை நிறுத்திவிடலாமா என்று கூட நினைத்த வேளையிலும், அவரும் தோழர்களும் உறுதியாக இருந்ததால் தொடர்கிறது “கருஞ்சட்டைத் தமிழர்” பயணம்.

அடுத்த இதழ், 12ஆம் ஆண்டின் முதல் இதழாகும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Pin It