அகில இந்திய வானொலி நிலைய பெயர்ப் பலகையில் தமிழ்ப் பெயர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. போராட்டத்துக்கு வாய்ப்பின்றியே வானொலி நிலையம் தமிழில் தனியாக பெயர்ப் பலகையை அமைத்துவிட்டது.
குன்னூரில் உள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை எதிர்த்து பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில், கழகம் போராட்டம் நடத்தியது. சிங்கள ராணுவம் பயிற்சியை நிறுத்திக் கொண்டு, மூட்டைக் கட்டியது.
அடுத்து, ஜூலை 29 அன்று அன்னூர் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில், அன்னூர் பயனீர் மாளிகை முன்பு காயக் கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
30 ஆம் தேதி, வடவள்ளி பேருந்து நிலையம் அருகேயும், 31 ஆம் தேதி நல்லிசெட்டி பாளையத்திலும் கழக கொள்கை விளக்க பொதுக் கூட்டங்கள் நடக்கின்றன. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கோபி. வேலுச்சாமி ஆகியோர் பேசுகிறார்கள். பல்லடம் மூர்த்தி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியும், சம்புகன் கலைக்குழு இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 7 ஆம் தேதி - ராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, ஆவாரம்பாளையத்தில் கழகப் பொதுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேசுகிறார்கள். பள்ளத்தூர் நாவரசு குழுவினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவையில் கழகத்தின் செயல்பாடுகள் அடுக்கடுக்காக - தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
புதுவையில் போர்க் குற்ற விளக்கம்
16.7.2011 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பெரியார் சிலை அருகில், புதுவை மாநில கழகம் சார்பாக, இலங்கை மீது அய்.நா. குழுவின் போர் குற்ற அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதலில் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.