2021 சட்டசபைத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் நின்று தி.மு.கவின் வேட்பாளர் திரு. கயல்விழி அவர்களால் தோற்கடிக்கப்பட்டவர் பா.ஜ.க.வின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.எல்.முருகன்.
அவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்து, ஒன்றிய அமைச்சரவைக்கு எடுத்துக் கொண்டது அவருடைய கட்சி! அவர் நன்றியுடன் திட்டமிட்டுத் தொடங்கியதுதான் கொங்கு நாடு சலசலப்பு! அவர் தன் சுய விவரத்தில் மாநிலப் பெயராக கொங்கு நாடு என்று குறிப்பிட்டதை, அடுத்த நாள் சிரமேற்கொண்டு பல கண் காது மூக்குகளுடன் தினமலர் நாளேடு செய்தியாக்கியது!
ஆம்! 10.7.2021 அன்று தலைப்புச் செய்தியே ஒன்றிய அரசு தமிழ்நாடு, கொங்கு நாடு என மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை உருவாக்கிவிட்டது போலவும், தமிழ்நாட்டு முதல்வருக்கு செக் என்றும் ஒன்றிய அரசின் விளையாட்டு தொடங்கியதாகவும் அது செய்தி போட்டது.
அன்று இரவே ஒரு நேர்காணலில் அய்யா சுபவீ அவர்கள் குறிப்பிட்டதைப் போல எல்லை மாவட்டங்களில் மொழிப்பற்றுக் குறைவாக இருக்கும், அங்கே மதவெறியையும், போலி தேசப்பற்றையும் விதைத்து விடலாம் எனக் கணக்கிட்டு பா.ஜ.க தன் பரிவாரங்களை இறக்கி வடக்கு, தெற்கு, மேற்கு என எல்லாத் திசைகளிலும் எல்லையோர மாவட்டங்களில் வேலை செய்கிறது.
அதற்கு மூட்டைப் பொய்களும், சில கலவரங்களும், கற்பனை எதிரியும் தேவை! அதுவே நாட்டில் ஒன்றிய அரசின் தோல்விகளை மக்கள் மறக்கச் செய்யும் சிற்றாயுதமாகவும் பயன்படும். அந்த சிண்டு முடியும் வேலையைத்தான் தினமலர் முயன்றது. அதுவும் மேலிடத்தின் அணுக்க உத்தரவின் படியே நடந்தது என்பதை, அவ்விதழின் நிருபர் ஒரு வாசகருடனான தொலைபேசி உரையாடலில் தில்லியிலிருந்து கிடைத்த தகவல்களின்படியே அச்செய்தி போடப்பட்டதாக உளறியதிலிருந்து அறிய முடிகிறது.
மேற்கு மாவட்டங்களில் கணிசமான அளவில் பிற மாநிலத்தவர் இருப்பதாலும், இன்னும் சில அடிப்படைவாத, சாதியக் கருத்துருவாக்கங்களாலும் மேற்கைக் கைப்பற்றிவிடும் எண்ணம் பா.ஜ.க. வில் உருவாகி உள்ளதை யாராலும் மறுக்க இயலாது. அந்த ஆபத்தை உணர்ந்து கொங்கு மண்டலத்தில் கள ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்வதையும், பெரியாரிய இயக்கங்கள் கூடுதலாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்த முயற்சிகள் எடுப்பதையும் பார்க்கிறோம்.
இளைய சமுதாயம், கட்டாயம் இந்த அடிப்படைவாதங்களை உடைத்துக்கொண்டு முற்போக்குச் சிந்தனையுடன் சாதிய, வட்டாரப் பிரிவினைகளைத் தமிழ் மண்ணில் தோற்கடிக்கும்! பா.ஜ.க. வின் இந்தச் சதி முயற்சியை, தமிழ்நாடு தேறி வரும் இவ்வேளையில் ஊதிப் பற்றவைக்க எண்ணி, உள்ளபடியே ஊற்றி அணைத்திருக்கிறது தினமலர்!
- சாரதாதேவி