மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆர் எஸ் எஸ் (ராஷ்டரிய ஸ்வயம்சேவக் சங்க்) (சுருக்கமாக இனிமேல் ‘சங்க்’) அமைப்பின் இந்துத்வா சித்தாந்தம் மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மோடியின் அரசு எந்த அளவிற்கு சங்கின் சித்தாந்தத்தைச் செயல்படுத்துகிறது? இதோ இங்கே ஒரு சின்ன அலசல்.

kolvalkarமோடி அரசின் செயல் பாடுகளை நாம் அறிய வேண்டும் என்றால் கோல் வால்கர் என்பவரின் எண்ண ஓட்டத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். கோல்வால்கர்தான் சங்க் அமைப்பிற்கு 1939-லிருந்து 1973 வரை (33 ஆண்டுகள்) தலைமை தாங்கினார். “Bunch of Thoughts” என்ற 38 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு, கோல்வால்கரின் முழு எண்ணவோட்டத்தையும் சங்கின் இந்துத்வா சித்தாந்தம் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. 

1939-இல் வெளிவந்த “We or Our Nationhood Defined” என்னும் கட்டுரையில் கோல்வால்கர் ‘இந்து தேசம் (Hindu Nationhood)” என்பதை வரையறுக்கிறார். “இந்துஸ்தான்” அல்லது “பாரதம்” என்று அழைக்கப்படும் நிலபரப்பு (இமய மலைக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட நிலம்), இந்து இனம், இந்து மதம், இந்துப் பண்பாடு மற்றும் சமஸ்கிருதம் மொழி ஆகியவை வாயிலாக ஒரே நாடாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். 

ஆயிரமாயிரம் ஆண்டுகள் தழைத்த இந்த பாரத தேசம், முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் ஆட்சியால், கடந்த 1000 ஆண்டுகளின் போது துண்டாடப்பட்டது என்கிறார் கோல்வால்கர். பாரத தேசத்திலிருந்து தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா ஆகிய நாடுகள் உருவாகின. காஷ்மீரின் ஒரு பகுதியும் பிரித்து எடுக்கப்பட்டது. மேலும் கோல்வால்கரை பொருத்தமட்டில், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இந்தியாவின் உள்நாட்டு அச்சுறுத்தல்கள் ஆவர். இந்த மூன்று பிரிவினரின் கோட்பாடுகளும் பாரதத்தின் வெளியே உருவானவை என்றும் ஆதலால் நம்முடைய தேசிய நீரோட்டத்திற்கு அவை உகந்தவை அல்ல என்றும் கருதினார்.

கோல்வால்கர், 1962-இல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியிருந்த பரிந்துரையில் நாட்டில் நிலவும் பல்வேறுவிதமான பிரிவினைவாதங்களை நிரந்தரமாக எதிர் கொள்ளக் கீழேயுள்ள பத்து வழிமுறைகளை விவரித்து இருந்தார்.

(1)     சாதி மதம் கடந்து ஒவ்வொருவரும் பாரதத்தை வலுவாகவும், செல்வமுள்ளதாகவும் ஆக்குவதற்குத் தம்மைத்தாமே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

(2) இந்து அல்லாதவர்கள், இந்து மரபுகளுக்கு மரியாதையும் மதிப்பும் அளிக்க வேண்டும். மேலும் அவர்கள், தங்களை இந்துமதப் பாரம்பரியத்துடனும் பழக்கவழக்கங்களோடும் அடையாளம் காணவேண்டும்.

(3) தேசத்தில் உள்ள அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதால் சாதி மத அடிப்படையில் எந்த குழுவும் நிதியுதவி, இடஒதுக்கீடு போன்ற சிறப்பு சலுகைகளைக் கோரக்கூடாது.

(4) பாரதத்தின் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி இந்தி என்பதால் அதுவே நாட்டின் பொது மொழியாக வேண்டும்.

(5) இந்திய நாட்டில் ஒற்றையாட்சி அமைப்பு முறையை (“Unitary State”) நிறுவ வேண்டும். இப்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டாட்சி அமைப்பு (“Federal System”), பிரிவினை வாதத்தைத் தூண்டும். அதனால் நம் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்து ஒற்றையாட்சி அமைப்பு முறையை அமல் படுத்த வேண்டும். 

(6) இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும், வழிமுறைகளுக்கும் ஊறுவிளைவிப்பது, மாட்டைக் கொல்வது, சட்டத்திற்குப் புறம்பாகப் பொது அல்லது தனியார் இடங்களில் மசூதிகள் கட்டுவது, அனுமதியின்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்

(7) இந்து மதம் சார்ந்த ஒவ்வொருவருக்கும் இந்த தேசம்தான் தர்ம பூமியாகும். அதனால் இந்து என்பவர் இந்த தேசத்திற்கு எப்போதுமே விசுவாசமாக இருப்பார் என்பதால் ஓர் இந்துவை “Communal” என்று கூறி மற்ற மதத்தவரோடு ஒப்பிடக்கூடாது. 

(8) இந்துக்கள் வேறு மதங்களுக்கு மாற்றுப்படுவதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தவேண்டும். 

(9) சமூகத்தில் இந்துக்களின் கவுரவமான இடத்தைப் பாதுக்காக்க ஒரு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும்; மேலும் அந்தக் கொள்கையில் பிற மதத்தவர் இந்துக்களோடு ஒருங்கிணைந்து வாழ, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் இருக்க வேண்டும்.

(10) தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்தை மூட வேண்டும். 

மேலேயுள்ள 10 வழிமுறைகளையும் பார்க்கும்போது, மோடி அரசாங்கம் கோல்வால்கரின் கோட்பாடுகளையே தன்னுடைய கோட்பாடுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. 

குறிப்பாக, ஒற்றையாட்சி அமைப்பு முறைக்கு ஏதுவாக பல கொள்கை/நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறது, மோடியின் அரசு. 

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”, “ஒரே நாடு, ஒரே மொழி”, “ஓரே நாடு, ஒரே வரி”, “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை”, “ஒரே நாடு, ஒரே கல்விக்கொள்கை”, “ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு”, “ஒரே நாடு, ஒரே மின் கட்டமைப்பு”, போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் ‘ஒரே நாடு, ஒரே அரசமைப்பு, ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம்” என்னும் திசையை நோக்கி இந்தியாவை எடுத்துச் செல்வதற்கான சூழ்ச்சியேயாகும். 

இதைவிடக் கொடுமை என்னவென்றால், 2014-இல் ஆட்சியமைத்த மோடி அரசு, இதுவரை தேசிய ஒருமைப்பாடு ஆணையத்தை ஒரு முறைக்கூடக் கூட்டவில்லை என்பது தான் (வழிமுறை-10)! 

மோடி அரசு, சங்கின் கைப்பாவை என்பதற்கும் இந்திய நாட்டை இந்து தேசமாக மாற்ற வேலைகள் செவ்வனே நடந்துவருகின்றன என்பதற்கும், மோடிதான் கோல்வால்கரின் முகமூடி என்பதற்கும், இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்?

Pin It