ஆகஸ்ட் 5, 2019 என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் (இனிமேல் “ஜ-கா”) இந்திய நாட்டையும் புரட்டிப் போட்ட நாள் என்றால் மிகையாகாது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜ-கா தொடர்பாக, மாநிலங்களவையில் இரண்டு தீர்மானங்களையும் ஒரு சட்ட மசோதாவையும் தாக்கல் செய்தார். முதல் தீர்மானமானது அரசியல் சட்டபிரிவு 370-ஐ செயலற்றதாக்குவது; மற்றொன்று ஜ-கா-வை இரண்டு ஒன்றிய பகுதிகளாகப் (Union Territories) பிரித்து மத்திய அரசு ஆட்சி செய்ய வழிவகை செய்வது. இதற்குச் சட்டவடிவம் கொடுக்கவே மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

kashmiri agitation on article35Aஜ-கா-விற்கும் இந்திய நாட்டிற்கும் 72 ஆண்டுகளாக நீடித்துவந்த தனித்தன்மை வாய்ந்த உறவை தனக்கேயுரிய ஆணவப் போக்குடன் முடிவுக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. இந்த மாற்றத்தைத் தங்குதடையின்றி நிறைவேற்ற ஏதுவாக, ஜ-கா-வை ஒரு ராணுவக் கோட்டையாகவே மாற்றியிருக்கிறது மத்திய அரசு.

ஜ-கா மாநிலம் ஒரு பார்வை

ஆகஸ்ட் 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த போது ஜ-கா, மன்னராட்சியின் கீழ் 2,22,000 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இராச்சியமாகும். அதை ஹரிசிங் என்னும் டோக்ரா மன்னர், ஆட்சி செய்து வந்தார். இந்த இராச்சியத்தில் ஏறக்குறைய 75% மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர். அதனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் போது ஜ-கா, பாகிஸ்தானுடன் சேரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் ஹரிசிங் தன் இராச்சியம் தனி நாடாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர்/ கூலிப்படையினரின் வெறியாட்டத்திலிருந்து இராச்சியத்தைக் காப்பாற்றிக்கொள்ள, ஹரிசிங், இந்தியாவுடன் ஒன்றிணைய “Instrument of Accession” என்னும் ஒப்பந்தத்தை அக்டோபர் 26, 1947 அன்று கையெழுத்திட்டார்.

இதன்பிறகு, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர்/ கூலிப்படையினருடன் சண்டையிட்டு 1,01,000 சகிமீ நிலப்பரப்பை மீட்டது. இந்தப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இந்தியாவின் ஜ-கா மாநிலமானது. ஆனால் மீதம் 1,21,000 சகிமீ பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வசமுள்ளது. இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையே மூன்று போர்களும் பல சிறு-சிறு சண்டைகளும் நடந்திருக்கின்றன.

ஜ-கா மாநிலம், நிர்வாகம் பொருட்டு, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது – ஜம்மு (26,300 சகிமீ), காஷ்மீர் (16,000 சகிமீ) மற்றும் லடாக் (59,100 சகிமீ). 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவற்றின் மக்கள் தொகை முறையே 53.5, 69.1 மற்றும் 2.9 லட்சங்கள் ஆகும். இஸ்லாமியர் 68.3% ஆவர் (காஷ்மீரில் 96.4%) என்பதால் இந்தியாவிலேயே இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் ஜ-கா ஆகும்.

அரசியலமைப்பு பிரிவுகள் 370 மற்றும் 35A – சிறு விளக்கம்

1947-இல் இந்தியாவுடன் இணைந்த ஜ-கா இராச்சியத்தின் தனித்தன்மையைப் பாதுகாக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனித்துவம் வாய்ந்த 370-ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அப்போது கருதப்பட்டது. இந்த 370 பிரிவின் கீழ்தான் ஜ-கா சம்மந்தப்பட்ட சட்டங்களை, அம்மாநில அரசியலமைப்பு மன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான், மத்திய அரசால் இயற்ற முடியும். ஜ-கா-விற்கென்று தனியே அரசியலமைப்புச் சட்டமும் (1957) கொடியும் ஏற்படுத்தப்பட்டன.

1954 ஆம் ஆண்டு, 370 வது பிரிவைப் பயன்படுத்தி, 35A என்ற பிரிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்பிரிவின் கீழ், மாநில அரசால் மட்டும்தான் யாரெல்லாம் ஜ-கா-வில் நிரந்தரமாகக் குடியிருப்போர் என்று நிர்ணயிக்க முடியும். அவ்வாறாக நிர்ணயிக்கப் பட்டோர் மட்டும்தான் மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கவும், மாநில அரசின் கீழ் வேலைவாய்ப்புப் பெறவும், மாநிலத்தில் சொத்துக்களை வாங்கவும், உதவித்தொகை போன்றவை பெறவும் தகுதி உடையவர்களாகக் கருதப்படுவர்.

சங்க் அமைப்புகளின் ஜ-கா மாநிலம் குறித்த நிலைப்பாடு

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் (இனிமேல் “சங்க்”), 370 ஆவது பிரிவைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஜ-கா மாநிலம்தான் இந்திய மாநிலங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மை உள்ள மாநிலம் என்பது அவர்களுக்கு கண்ணெரிச்சல் கொடுத்து வந்திருக்க வேண்டும்.

“370 ஆவது பிரிவு காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்கான ஒரு ஏற்பாடு" என்றே சங்க் கருதியது. 1950-லிருந்து, இது குறித்து மொத்தம் 51 தீர்மானங்கள் சங்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளன. சங்க் அமைப்பின் ஒரு பிரிவாக இருந்த பாரதிய ஜனசங்கின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 1953 ஆம் ஆண்டு நகரில் 370 ஆவது பிரிவு தொடர்பாக சிறையிலிருந்த போது "மர்மமான" முறையில் இறந்து போனார். அதனால் சங்கிற்கு இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனையுமாகும்.

பாரதிய ஜனசங்குக்குப் பிறகு, 1980-இல் அவதாரம் எடுத்த பாஜக, 370 ஆவது பிரிவு எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தொடர்ந்தது. பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையில், இந்தப் பிரிவை ரத்து செய்வதற்கான யோசனை முன்னிலைப்படுத்தப்பட்டது. ஒரு தேசத்திற்குள் "இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு தேசிய சின்னங்கள்" இருக்கக்கூடாது என்பது சங்கின் உறுதியான நம்பிக்கை.

பாஜக-வின் சூழ்ச்சியும் ஜ-கா மாநிலத்தின் வீழ்ச்சியும்

மே 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி அரசு, இந்தியாவை கோல்வால்கர் வடிவமைத்த இந்து நாடாக மாற்றுவதற்கு முனைப்புக் காட்டிவருகிறது.

மே 2019 மீண்டும் ஆட்சிக்குக் கூடுதல் பெரும்பான்மையுடன் வந்த மோடி அரசு, 75 நாள்களிலேயே 370 ஆவது பிரிவை (35A பிரிவும் கூட) செயலற்றதாக ஆக்கிவிட்டது. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு மேற்கொண்ட சூழ்ச்சியை புரிந்துக்கொள்ள நாம் சற்றுப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கவேண்டும்.

இதன் துவக்கப் புள்ளி, ஜூன் 2018-இல் அற்பக் காரணத்திற்காக பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்ட தருணமாகும். மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்காக பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் எடுத்த முயற்சிகள் ஆளுநரால் முறியடிக்கப்பட்டன. பிறகு ஜ-கா சட்டமன்றத்தை யாரும் எதிர்ப்பாராத வகையில் நவம்பர் 2018-இல் ஆளுனரின் பரிந்துரையால் மத்திய அரசு கலைத்தது.

இதனைத் தொடர்ந்து, ஜ-கா சட்டமன்றத்திற்கான தேர்தல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, மே 2019 மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படவில்லை. ஒரு வேளை சட்ட மன்றத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தால் 370 பிரிவை நீக்குவது கடினமாகிப் போய்விடுமோ என்ற ஐயம் போல!

இதனால், மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு, மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, ஜ-கா-வின் சிறப்பு அந்தஸ்தை ஒழிக்க வழிசெய்து, அம்மாநிலத்தைத் துண்டாடி, மாநிலம் என்ற நிலையிலிருந்து ஒன்றியப் பகுதிகளாக தரமிறக்கி விட்டுள்ளது. இந்த மாற்றம் எதனிலும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு துளி கூடப் பங்கு இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

இதைப் பார்க்கையில் 370 ஆவது பிரிவைச் செயலற்றதாக ஆக்குவதற்கான திட்டம், நீண்ட நாள்களாகக் கச்சிதமாக தீட்டப்பட்ட சூழ்ச்சியோ என்ற ஐயம் ஏற்படுகிறது!

370-வது பிரிவு நீக்கம் என்பது ஒரு அரசியலமைப்பு மோசடியே

இந்திய அரசியலமைப்பில், பிரிவு 370 என்பது ஒரு தன்னிறைவான பிரிவாகும். பிரிவு 370-ஐ செயலற்றதாக்க வேண்டும் என்றால், துணைபிரிவுப் 370 (3) இன் விதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த துணைப்பிரிவின்படி குடியரசு தலைவருக்கு ஜ-கா அரசியலமைப்பு மன்றத்திலிருந்து ஏற்ற பரிந்துரை அனுப்பப்பட்டால் அன்றி பிரிவு 370 செயலற்றதாக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு மன்றம் 1956-லேயே மூடப்பட்டுவிட்டது.

மோடி அரசு, இந்த நிலையை எதிர்கொள்ளும் பொருட்டு, இந்திய அரசியலமைப்பு 367 பிரிவிற்குள், ஆகஸ்ட் 5 அன்று, ஒரு புதிய துணைப்பிரிவு (4)-ஐ புகுத்தியது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 367 பிரிவு அரசியலமைப்பை விளக்குவதற்காக பொது விதிகளைக் கொண்ட ஒரு சாதாரண பிரிவேயாகும்.

இந்தத் துணைபிரிவுப் 367(4) மூலம் பிரிவு 370 (3)-இல் உள்ள ஜ-கா அரசியலமைப்பு மன்றத்திற்குப் பதிலாக மாநில சட்டமன்றத்தையும், அது இல்லாதபோது மாநில ஆளுனரையும் ஈடாகக் கருதுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதனால் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும், வெறும் ஆளுனரின் பரிந்துரையால், 370 பிரிவை நாடாளுமன்றத்தால் செயலற்றதாக ஆக்கமுடிந்துள்ளது.

அதாவது 370 பிரிவை செயலற்றதாக ஆக்குவதற்கு, அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாத 367 பிரிவைத் திருத்தியிருக்கிறது இந்த அரசு! இவை அனைத்திலும் ஜ-காவை சார்ந்த எந்த அரசியல்வாதியோ குடிமகளோ பங்கு பெறவில்லை என்பதுதான் நிதர்சனம்! அப்போது இது ஒரு அரசியலமைப்பு மோசடி இல்லையா?

370-வது பிரிவு நீக்கம் ஒரு ஓரவஞ்சனையும்கூட

நம் அரசியலமைப்புச் சட்டத்தில் 371-பிரிவின் கீழ் சில குறிப்பிட்ட மாநிலகளுக்குப் பல சிறப்புச் சலுகைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்ரா, குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோராம், ஆந்திரா, தெலுங்கானா, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், கோவா, கர்நாடகா ஆகியவை ஆகும். இவைகளில் நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களில் வேறு மாநிலத்தவர் நிலம் வாங்க இயலாது. வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலகளுக்குள் நுழையவேண்டுமானால், வேறு மாநில இந்தியர்கள் முன் அனுமதி பெறவேண்டும்.

சில மாநிலங்கள், தங்களின் மாநில உரிமைகளைப் பயன்படுத்தி, வெளி மாநிலத்தவர்கள் அசையா சொத்துகள் வாங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும் தடைகள்/நிபந்தனைகள் விதித்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் ஜ-கா மாநிலத்தை மட்டும் பாஜக அரசு ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அங்கிருக்கும் வன்முறையைக் களைவதற்குப் பதில் இந்த அரசியல் பூகம்பத்தை ஏன் தேவையில்லாமல் ஏற்படுத்த வேண்டும்? ஜ-கா-வின் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியராக இருப்பதாலா? இது ஓரவஞ்சனை ஆகாதா?

அரசியல் சூதாட்டம் இனி வேண்டாம்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று இயற்றிய சட்டமாற்றங்களை வைத்து மாநில அரசுகளைக் கவிழ்த்து, அம்மாநிலங்களைத் துண்டாடி, மத்திய அரசின் ஒன்றியப் பகுதிகளாக மாற்ற முன்மாதிரியை மோடி அரசு ஏற்படுத்தியிருக்கிறதா?

இந்த நிகழ்வுகள், கோல்வால்கரின் கனவான, “ஓரே நாடு, ஒரே அரசு, ஒரே தலைவர், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம்’ என்ற இலக்கை நோக்கி இந்தியாவை எடுத்துச் செல்லும் முயற்சியாக இருக்குமா?

மோடி அரசு, இது போன்ற அரசியல் சூதாட்டங்களைக் கைவிட்டு, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் ஏற்ப நாட்டை நடத்தி செல்வது சாலச் சிறந்தது ஆகும்!

Pin It