பள்ளிகளில் பாலியல் கல்விக்குத் தடை விதிக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பரிந்துரைத்திருப்ப தாகச் செய்திகள் வந்தன. ஆனால் அமைச்சர் அதை மறுத்திருக்கிறார். “பாலியல் கல்வி ஆபாசமாக இல்லாமல் இருக்க வேண்டும்” என்றுதான் நான் சொன்னேன் என்றிருக்கிறார்.

harsavardhan bjpஇவர்கள் சட்டமன்றத்திலேயே (கர்நாடகம்) ஆபாசப் படம் பார்க்கும் அளவுக்கு மோசமாகிப் போனது ஏன் என்று இப்போது தெரிகிறதா? ‘பாலியல்’ என்ற சொல்லுக்கு ‘உடலுறவு’ என்பதைத் தவிர இவர்கள் அகராதியில் வேறு எதுவுமே இல்லை போலிருக்கிறது. அதிலும் பெண்களை வெறும் உடலாகப் பார்ப்பது தான் இவர்களின் அதிகப்படியான சமூகப் பார்வை.

‘பாலியல் கல்வி’ என்பது, உடற் கூறுகளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பது; தன் உடல் மீது மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை நினைவில் நிறுத்துவது ; உடல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது, மாத விடாயின் போது நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பது போன்ற அடிப்படைச் சுகாதார முறைகளைச் சொல்லிக்கொடுப்பது ; ஆண், பெண் பால் சமத்துவத்தைப் பதிய வைப்பது ; தொடு தலின் தன்மையைப் பகுத்தறியக் கற்றுக் கொடுப்பது ; மோசமான சூழலில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், எப்படிப் பிறரின் கவனத்தை ஈர்த்து, உதவிக்கு அழைப்பது என்று வழிகாட்டுவது உள்ளிட்ட சமூக அறிவியல் கல்விதான் என்பதை எத்தனை முறை விளக்கினாலும், இவர்களைப் போன்றவர்களின் அறிவுக்கு எட்டுவதே இல்லை.

நாளுக்கு நாள் பெண்கள், குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இன்றைய சூழலில், ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்து முடிந்த பிறகு, சில நாள்கள் மட்டுமே அது பற்றிப் பரபரப்பாகப் பேசுவதும், பிறகு அதைக் கடந்து சென்று விடுவதாகவுமே நம்முடைய செயல்பாடுகள் இருப்பது வேதனைக்குரியது. அதுவும் என்ன பேசப்படுகிறது? குற்றம் நடந்த விதம் பற்றி, குற்றவாளியின் மன வக்கிரம் பற்றி, என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்தான் பேசப்படுகின்றன. அண்மையில் பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போதும், வழக்கம்போல், விவாதங்கள்.... முதல்வரின் வழிப்புணர்வு ஆலோசனைகள்...அதிகாரிகளுக்கு உத்தரவுகள்....இவற்றைத்தான் நாம் பார்த்தோம். தில்லி நிகழ்வுக்குப் பிறகு, பாடப் புத்தகங்களின் பின்புற அட்டையில், ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தவிர்க்க பள்ளி மாணவிகளுக்கு’ அரிய ஆலோசனைகளை வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வழங்கியது தமிழகப் பள்ளிக் கல்வித் துறை. மாணவிகளுக்கு ஆலோச னைகள் என்றால், ஆண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதே இல்லையா? இச்சிக்கல் குறித்து, அரசு, கல்வித்துறை கொண்டுள்ள பார்வை எவ்வளவு குறுகியதாக, மோசமாக இருக்கிறது பாருங்கள்?

இப்படி, பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்றுதான் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றதே தவிர, அக் கொடூரங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசுவதோ, சிந்திப்பதோ இல்லை.

2012ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில், குழந்தைகளின் மீதான் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. உடலுறவுக்கான அங்கீகரிக்கப்பட்ட வயது வரம்பு 16 இல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக (?!) அது சொல்கிறது. அந்த சட்ட வரைவு முன்மொழியப்பட்டபோது, தில்லி அமர்வு நீதிமன்றம் பின் வருமாறு கருத்து தெரிவித்தது:

“18 வயதுக்குக் கீழே உள்ள ஒரு ஆணும், பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டாலும் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்க இந்த முன்மொழிவு வகை செய்கிறது. பெற்றோர் களும், காவல்துறையினரும், அவர்களைத் துன்புறுத்தவே அது பயன்படும். 16,17 வயதில் உடலு றவு பற்றிய புரிதல் இருக்காது என்பது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. அவர்களுக்குப் புரிதல் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம். எனவே வயது வரம்பை உயர்த்துவது இந்தப் பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்க்காது. நல்ல பழக்கவழக்கங்களையும், நல்லது கெட்டதை உணரும் சக்தியையும், குழந்தை களிடம் சட்டங்களால் உருவாக்கிவிட முடியாது. பள்ளிக் கூடங்களில், பாலியல் கல்வியைக் கொண்டு வந்து, பொறுப்பைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுவதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி”

அதைத்தான் நாமும் வலியுறுத்து கிறோம். கல்விக் கூடங்களில் இருபால் குழந்தைகளும் இணைந்து படிக்கின்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆண், பெண் என இருபால் குழந்தைகளுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்ற நிலையில், இருவரும் ஒருங்கே அமர்ந்து கல்வி கற்பது அடிப்படைப் புரிதலை, ஒருவரையருவர் மதிக்கின்ற மனப் போக்கை வளர்க்க உதவும். பால் கவர்ச்சி யைப் பிரித்துணரப் பக்குவப் படுத்தும். இப்படி, பால் வேறுபாடற்ற சூழலில் இருவருக்கும் வழங்கப்படும் பாலியல் கல்வி ஆரோக்கியமான தலை முறைகளை உருவாக்கித் தரும். சமூகம் பாலியல் வன்கொடுமைகள் அற்றதாக மாறும்.

2006ஆம் ஆண்டு, பாலியல் கல்வியைப் பள்ளிகளில் அனுமதிப்பது தொடர்பாக விவாதிக்க, திரு வெங்கைய்யா (முன்னாள் பா.ஜ.க. தலைவர்) தலைமையில், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக் குழு 2006 - 2007, 2007 &2008, 2008 &2009 வரை தன்னுடைய அறிக்கையை அளித்திருக்கிறது. அதில் உறுப்பினர்களின் விவாதங்கள் ஆதரவு, எதிர்ப்பு என இரு நிலைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய செய்தி, எதிர்த்தவர்கள் அனைவருமே, அடிப்படை யாக ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். “பாலியல் கல்வி, இந்தியாவின் பெருமைமிகு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழித்து விடும். பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். எனவே பாலியல் கல்வி கொண்டு வரக்கூடாது”

இதுபோன்ற இடங்களில் மட்டும் அனைத்து மதங்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு விடுகின்றன. இவர்கள் சொல்லுகின்ற இந்தியக் கலாச்சாரம் சந்தேகத்திற்கு இடமின்றி, மதக் கலாச்சாரம், அதிலும் குறிப்பாக, பெரும்பான்மையும் ‘இந்துக் கலாச்சாரம்’தான் என்பதை யாரும், யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. அசிங்கமும், ஆபாசமும் நிரம்பி வழிகின்ற சாக்கடைகளான புராணங்களும், இதிகாசங்களும்தானே இவர்கள் வைத்துள்ள கலாச்சாரப் பாடப்புத்தகங்கள். இவைகள் வலியுறுத்துகின்ற ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும்தானே, ‘பாரதப் பண்பாட்டின்’ பெருமைகளாக பாரெங்கும் பரப்பப் படுகின்றன. பாலியல் கல்வியை மறுக்கின்ற நாட்டில்தான், காமசூத்திரமும், கொக்கோகமும்.....எழுதப்பட்டுள்ளன. மன்மதன் கதையும், காமன் பண்டிகையும் பொதுவெளியில் கொண்டாடப்படுகின்றன.

ஏற்கனவே இவைகளால்தான் சமூகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை வசதியாக மறைத்துக் கொண்டு, காட்டுக் கூச்சலிடு கின்றனர். மதங்கள் மக்களை முட்டாளாக்குபவை என்பதை இதிலும் உறுதிப்படுத்து கிறார்கள்.

கேரள மாநிலத்தில், பாலியல் கல்வி அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும். பாடத்திட்டத்தோடு இணைந்த பாலியல் கல்வி கொண்டுவரப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம் ‘பாலியல் கல்வி’ என்பதை அனைவரும் உணரவேண்டும்.

Pin It