நூல் அறிமுகம் - திராவிட இயக்கமும் கலைத்துறையும்

(நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்கள்)

ஆசிரியர் : மு.இராமசுவாமி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.,

அம்பத்தூர், சென்னை - 98

தொலைபேசி : 26258410, 26251968

விலை : ரூ. 70-/-

(நாடகத் துறை பேராசிரியர் மு. இராமசுவாமி, எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கலைத்துறையும் - நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள்’ என்னும் நூல் செய்திச் செறிவும், மொழி அழகும் உடையதாக வெளிவந்துள்ளது. அந் நூலிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. பேராசிரியரின் நூல், தன்னைத் தானே இங்கு அறிமுகப்படுத்திக் கொள்கின்றது)

“இருபதாம் நூற்றாண்டில், தேசியம், திராவிடம், பொதுவுடைமை, தமிழியம் என்று சமூகத் தேவை கருதித் தமிழ் மண்ணில் பூத்திருந்த அனைத்துச் சமூகப் பொரு£ளதார அரசியல் இயக்கங்களின் பண்பாட்டியல் கருத்துகளினூடாகத் தன் வாழ்வின் கடைசி வரையும் கலகக்காரராய்த் தொடர் பயணம் செய்து, பகுத்தறிவிற்கிசைந்த பண்பாட்டுப் புள்ளிகளைத் தன்னுடன் இணைத்திருந்த அழகிய சமூகக் கோலம் பெரியார்.! 10.11.1912 இல் தொடங்கப்பட்ட ‘திராவிடர் சங்கம்’, அதன் தொடர்ச்சியாக 20.11.1916 இல் தொடங்கப்பட்ட ‘நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி, மார்ச் 2012 ; பக்.11,15) ஆகியவற்றின் தொடக்கத்தின் போது பெரியார் இவ் அமைப்புகளில் இல்லாத போதும், 1922இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்று, அதன்பின், அதிலிருந்து வெளியேறி, 1925 டிசம்பரில் ‘சுயமரியாதை இயக்கம்’ தோற்றுவித்து, 1935இல் ‘நீதிக்கட்சி’ ஆதரவு, அதன் பின் 1944இல் நீதிக் கட்சியைத் ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்றி அமைத்தது என்பதில் பெரியாரின் பங்கு மிக முக்கியமாக இருந்துள்ளது. அந்த வகையில் ‘திராவிட இயக்கம்’ என்பதன் ஒருமித்தக் குறியீடாகப் பெரியாரைக் கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. அவரே அதன் குணம்; அவரே அதன் வியாபகம்! அந்தளவு, இருபதாம் நூற்றாண்டில், தமிழ் மண்ணில் சமூக, இன, அரசியல், பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமை செலுத்திய, தவிர்க்கவே முடியாத நபர் அவர்!

தமிழ் மண்ணில் இருபதாம் நூற்றாண்டில் சமூக மேம்பாட்டிற் காக இயங்கிக் கொண்டிருந்த அனைத்துச் சமூக இயக்கத் தடங் களின் ஊடாகவும், மானத்தையும், அறிவையும் வழிகாட்டும் கைத்தடியாய்க் கொண்டு, சுயமரியாதையைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி, கருத்து நிலையிலும் செயல்நிலையிலும் சமவுரிமையை நோக்கித் தன் வாழ்வியல் பயணத்தை வகுத்துக் கொண்டவர் அவர்! சமூகத்தைத் தவிர வேறொரு பற்றும் அவருக்கில் லாது இருந்திருநுதால் அவரைப் பற்றிப் பின்தொடர்ந்த, குடலிறக்க நோயின் அவதியினூடாகவும், மூத்திரப்பையைத் தூக்கிச் சுமக்கிற சுமையினூடாகவும், தொண்ணூற்றைந்து வயது வரையிலும் கொஞ்சமும் சோர்வே இன்றி, மூட நம்பிக்கைக்கு எதிராகத் தளராமல் போராடிக் கொண்டிருந்த ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் அவர்”

bharathidasan drama 500

“பண்பாட்டு வெளியில், ‘மநு’விற்கு எதிரான ‘தனு’தான் பெரியாரியம். இதுதான், இந்திய தேசியத்திற்கு எதிரான திராவிட இனத் தேசியமாகவும் அவரால் முன்வைக்கப் படுகிறது. மொழி சார்ந்து தமிழ்த் தேசியமாகவும் அது விரிகிறது”

“ஆரியத்திற்கு எதிராகத் திராவிடம்! மநு தருமத்திற்கு எதிராகச் சமதருமம்! வெள்ளைக்கு எதிராகக் கருப்பு! ஆதிக்க - அடிமைத்தனத்திற்கு எதிராகச் சுயமரியாதை! புராண இதிகாசங்களுக்கு எதிராகச் சமூக யதார்த்தம்! அதற்கு அவர்களின் கரங்களில் ஏந்திய நூல் திருக்குறள்! கருநாடக இசைக்கு எதிராக அவர்கள் உயர்த்திப் பிடித்தது தமிழிசை!”

“அவர் முன்மொழிந்தது புராண இதிகாசத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நாடகமாகும். வைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின் வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும். இந்த நூல் அந்தத் திசை நோக்கியே பயணிக்கிறது.”

“ ‘சந்திர - கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்கிற நாடக நிகழ்த்தல் பதிவுதான், ‘குடியரசு’ இதழின் மூலம், திராவிட இயக்க நாடகத்தின் முதல் பதிவாய் அமைந்திருக்கிறது”

“ ‘சந்திர - கமலா அல்லது சுயமரியா தையின் வெற்றி’க்குப் பிறகு, 09.09.1934 அன்று ‘சீர்திருத்த சங்க’த்தாரால், சென்னை யிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5 - 30 மணிக்குப் பெரியார் தலைமை யில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாஸன் (பாவேந்தர்) இயற்றிய ‘இரணியன்’ (பிற்பாடுதான் அது, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்றாகி இருக்கிறது). நாடகம்தான், ஆரிய - திராவிடர் இனப்பிரச்சனையை முன்வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்ந்த மிகப்பெரும் நாடகமாகத் தெரிகிறது.”

“வெள்ளையரிடம் இருந்து அரசியல் விடுதலை பெற்ற ‘சுதந்திர’ இந்தியாவில், 1948இல் நாடகத் தடைச் சட்டம் தன் கரங்களை ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத் தை நோக்கி நீட்டியது”

“143 ஐபிடி செஷன்படியும் 1876ஆம் ஆண்டு டிராமா ஆக்ட் 19ஆவது ஆக்ட் 6ஏ செஷன்படியும் குற்றம் சுமத்தி, மூன்று மாதக் கடுங்காவலும் ரூ.50-/-- வீதம் அபராதமும் அதைக்கட்ட மறுத்தால் மேற்கொண்டு மூன்று வாரம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக 19.09.1948 நாளிட்ட ‘திராவிட நாடு’ இதழ் கூறுகிறது.”

“தோழர் மாவோவின் நெடும்பயணத்தை, அதன் பெரும் சித்திரத்தை நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது; தென்னாப் பிரிக்காவில் மகாத்மாகாந்தி நடத்திய நடைப் பயணத்தையும் வரலாறு விவரித்திருக்கிறது ; தேசியப் போராட்டத்தின் ஊடே இந்தியாவில் நிகழ்ந்த நடைப் பயணங்கள் நமக்குப் பலதையும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு நாடகத்தை முன்வைத்து, தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதில் சம்பந்தப்பட்டு, அதைக் கொண்டாடி, இயக்க வளர்ச்சிக்கு அதைக் காப்பீடாக்கிய ஒரு நடைப்பயணம் 65 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் முன்மொழியப்பட்டு, மக்கள் மனங்களில் அதைக் கொண்டு சேர்த்திருக்கிறதென்பது அடிக்கோடிட வேண்டியது. இது மிக முக்கியமானது.”

Pin It