கூகுள் டாக்ஸ் (Google Docs)

மைக்ரோ சாப்ட் Word, நமக்கெல்லாம் பழகிய அமைப்பு. எது தட்டச்சு செய்து அச்சு எடுத்தாலும் Ms word அன்றி வேறொன்று நினைத்துக்கூடப் பார்க்க இயலாததாகி விட்டது. இருப்பினும் அதற்கு இணையான அல்லது மேம்பட்ட வசதியினை கூகுள் டாக்‌ஸ் வழங்குகிறது.  அப்படி என்னதான் கூகுள் டாக்ஸ்-ல் இருக்கிறது என்று பார்த்தால் ஏராளம்.

கணினியில் நாம் ஜிமெயில் பார்க்கும் போது நமது விவரப்படத்திற்கு அருகில் கூகுள் செயலிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் Google Doc என தேர்வு செய்தால் நமக்கு Ms word போன்ற பகுதி திறக்கும். இதில் நீங்கள் கடிதம், குறிப்பு, விவரங்கள், கோப்புகள் என Ms wordல் எதுவெல்லாம் செய்கிறீர்களோ அதுவெல்லாம் செய்ய முடியும்.

அது சரிஞ் ஏற்கனவேதான் Ms word இருக்கிறது. அதைவிட இதில் என்ன சிறப்பம்சம் என நீங்கள் கேட்கலாம். Ms word ஐ நீங்கள் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால் இந்த கூகுள் செயலி விலையில்லாமல் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல - இன்னும் நிறையவே இருக்கிறது. இதைச் செயலியாக மொபைல் போனில் தரவிறக்கம் செய்து கணினியில் என்ன தட்டச்சு செய்தீர்களோ அதை மொபைலில் காணலாம், திருத்தங்களும் செய்யலாம்.

இதை அப்படியே உங்கள் நண்பருக்கும் பகிரலாம். அதனை அவரும் திருத்த முடியும். நான்கைந்து பேர் சேர்ந்து செய்யும் ஒரு திட்ட அறிக்கையினை ஒரே ஆவணமாகப் பாதுகாக்க இந்த செயலி அதிகமாகவே உதவும்.

ஒவ்வொரு ஆவணத்தையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருமுறையும் பென் ட்ரைவை தூக்கிக்கொண்டு அலையத்தேவையில்லை. Print, Share, Copy, Paste, Edit என அனைத்தும் செய்ய முடியும்; உங்கள் கைகளிலேயே அந்த ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் பாதுக்காப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

இந்தக் கோப்பை அப்படியே Ms word ஆக சேமிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இந்த Google Docs ஐ ஆன்லைன் மட்டுமல்ல ஆப் லைனிலும் நீங்கள் பயன்படுத்த முடியும் என்பதால் எவ்விதத் தடையுமில்லை. இவ்வகையான கோப்பை அப்படியே அனுப்ப வேண்டிய தேவை கூட இல்லை. நீங்கள் இதனை Link Address ஆகக் கூட வாட்ஸ்ஆப், டெலிகிராம், குறுஞ்செய்தி என வெகு எளிதாக அனுப்ப முடியும்.

Google Play Store சென்று Docs என தட்டச்சு செய்யுங்கள் - போதுமானது. இல்லை எனில் இவ்விணைப்பை சொடுக்குங்கள். அதுவுமே போதுமானது.

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs.editors.docs

---

விக்கிபீடியா (Wikipedia)

தேடல்தானே வாழ்க்கை: தேடிக்கொண்டே இருக்கிறோம். நமக்கு தேடியது கிடைத்துவிட்டால் கூட நாம் ஒருபோதும் தேடுவதை நிறுத்துவதில்லை. அது போலவே நமக்கு எது பற்றி விவரம் வேண்டுமோ உடனடியாக கணினி முன் உட்கார்ந்து தட்டுகிறோம். கணினியில் இல்லை என்றால் இவ்வுலகத்திலேயே அது பற்றி இல்லை என்ற முடிவிற்கும் வந்து விடுகிறோம்.

கணினி சென்று கூகுளில் எதை வேண்டுமானாலும் தேடுங்கள். உங்களுக்கு முதலில் கிடைப்பது விக்கிபீடியாவில் இருந்துதான். அப்படி என்னதான் இருக்கிறது விக்கிபீடியாவில். விக்கிபீடியாவில் எல்லாம் இருக்கிறது. எது இல்லை எனக் கருதுகிறீர்களோ அதை நீங்கள் உருவாக்க முடியும்.

ஆம். விக்கிபயனராக நீங்கள் இணைந்தால் விக்கியில் நீங்கள் கட்டுரைகளை உருவாக்க முடியும், திருத்த முடியும், மேம்படுத்த முடியும். அது ஓர் அறிவு சார்ந்த கட்டற்ற கலைக் களஞ்சியம்.

Google Play Store செல்லுங்கள், பிறகு Wikipedia என தட்டச்சு செய்து செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள். இப்போது திறந்து பயன்படுத்துங்கள். உண்மையில் உலகத்தின் ஒட்டுமொத்த தகவலும் இப்போது உங்கள் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

உங்களுக்குத் தெரியாதவற்றைத் தேடி அறிந்து கொள்ளுங்கள். தெரிந்தவற்றை தொகுத்து கட்டுரையாக்குங்கள். உங்களுக்கு உதவ உலகம் முழுக்க விக்கி தன்னார்வலர்கள் உள்ளனர். அதுமட்டுமல்ல விக்னரியில் சொற்களை உருவாக்கலாம். சொற்களுக்கு ஒளிவடிவம் அளிக்கலாம். நீங்கள் எடுத்த படங்களைச் சேர்க்கலாம். ஒளிக்காட்சிகளை தக்க தலைப்புகளுடன் சேர்க்கலாம். மேலும் எண்ணற்ற கோப்புகள் அதில் உள்ளன. அதனை வாசித்து அறியலாம். திருத்தமும் செய்யலாம்.

திறன்பேசி என்றாலே நாம் பெரும்பாலும் ஒளி-ஒலிக்காட்சிகளில் திளைத்துவிடுகிறோம். அல்லது சமூக ஊடகத்திற்குள் தொலைந்து போகிறோம். விக்கியின் பக்கம் நம் கவனம் திசை திரும்புமானால் அந்த நொடிப்பொழுதின் புள்ளியில் இருந்து வளர்ச்சியின் பாதை நோக்கிப் பயணிக்கிறோம் என்று பொருள்.

பயனரின் பெயரைத் தமிழிலேயே உருவாக்க முடியும். நீங்கள் தொகுக்கும் கட்டுரையின் வரலாற்றில் உங்கள் பெயர் இடம் பெற்றும் இருக்கும். உங்கள் தொடர் பங்களிப்பின் மூலம் உங்களுக்கான அடுத்தடுத்த விருதுகளை விக்கியே வழங்கும். உண்மையில் அறிவுசார்ந்த பயணமிது.

உங்களைப்பற்றி உங்கள் அறிமுகத்தை இனி உங்கள் முகவரி அட்டை (Visiting Card) மூலமாகத் தெரிவிக்காதீர். விக்கியில் உங்கள் பங்களிப்பின் மூலம் தெரிவியுங்கள். அது மொழிக்கும் நல்லது. நமது சுயமரியாதைக்கும் நல்லது.

உலகம் அறிவால் ஆளப்படட்டும்

https://play.google.com/store/apps/details?id=org.wikipedia இணைப்பு வழியாகவும் தரவிறக்கம் செய்யலாம்.

Pin It