அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மைக் கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்தியாவின் வளர்ச்சிக்குச் சேதம் ஏற்படுத்திய கருத்துக்கள் என்று மார்க்சியத்தையும் ரூசோவின் கொள்கைகளையும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் அண்மையில் நடந்த நிகழ்வில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இங்கு நிலவும் வறுமை, ஏற்றுத்தாழ்வு ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஜாதிய அமைப்போ அரசியல் கொள்கைகளோ காரணம் இல்லையாம்.

உலகின் மற்ற எல்லா கருத்தியல்களும் கொள்கைகளும் தவறானவை, தாங்கள் ஏற்படுத்திய சனாதன அமைப்பு முறையே சரியானது என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு கூட்டம் பார்ப்பனியக் கூட்டம்தான்.

பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலை நாட்டும் ஒரே எண்ணத்தோடு செயல்படுவது மட்டுமே தன்னுடைய கடமையாகக் கொண்டிருக்கிறார் ஆளுநர். அரசியலமைப்பை அவர் சட்டை செய்வதில்லை.

சனாதானப் பெருமை பேசுவது பார்ப்பனர்களின் வாடிக்கை. அதே பழைய கதையைத்தான் ஆளுநரும் சொல்லியிருக்கிறார். எத்தனை முறை சொன்னாலும் ஏதோ ஒரு புதிய சிந்தனையை முன் வைப்பது போன்று சொல்லும் கலை பார்ப்பனர்களுக்கே உரியது. “அறிவியல்”, “சமத்துவம்”, “சிந்தனை” இவையெல்லாம் எந்த வடிவில் இருந்தாலும் அவர்களுக்கு ஒவ்வாத சொற்களாகும். இந்தச் சொற்களைக் கேட்டாலே அதிர்ந்து விடுவார்கள்.

எந்தச் சிந்தனைகள் எல்லாம் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சேதம் ஏற்படுத்தியிருக்கின்றன என்று அவர்கள் சொல்கிறார்களோ, அந்தச் சிந்தனைகள்தான் பார்ப்பனர் அல்லாதோருக்குத் தேவையானவை என்று நாம் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம்.

எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படாது, பார்ப்பன ஆணவத்தோடு மட்டுமே பார்ப்பனர்கள் செயல்படுகிறார்கள். அதில் ஆளுநரும் ஒருவர். மனிதர்களாக மாறுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். காலங்கள் மாறுகின்றன. ஆனால் பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள். மனிதர்களாக எப்போது மாறுவார்கள்?

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It