letter headபெறுநர்

மாண்புமிகு க. பழனிச்சாமி
முதலைமைச்சர், தமிழ்நாடு அரசு
சென்னை.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் உயர்திரு எடப்பாடி க பழனிசாமி அவர்களுக்கு வணக்கம்!

ஐ தா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46-ஆவது அமர்வு வரும் பிப்ரவரி மார்ச் திங்களில் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகளை, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் செய்து வருகின்றனர்.

அதற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழீழ மக்களின் நலன் கருதி, 2013ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 27-ஆம் நாள் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில், மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஒட்டி, கீழ்க்கண்ட தீர்மானங்களை மீண்டும் ஒருமுறை நிறைவேற்றி, அதனை இந்திய நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்து, உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி அன்போடு வேண்டுகின்றது.

1) 1987-ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை உடன்படிக்கையின்படி, இலங்கையின் வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் இணைத்து ‘வடகிழக்கு’ என்று ‘தமிழர்களின் தாயகம்’ என்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்;

2) இறுதிக்கட்ட ஈழப்போரில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்ய, பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்துக்குப் பரிந்துரை செய்யவேண்டும்; போர்க்குற்றங்கள் தொடர்பான தடயங்களைப் பாதுகாக்க ஐநாவின் ஏற்பாட்டில் தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்;

3) ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்’ குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்;

4) இலங்கைத் தீவில் ஆட்சியில் உள்ள சிங்கள பௌத்தப் பேரினவாத அரசால் தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன; தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும், வளரலாற்று ரீதியான இடங்களிலும் திட்டமிட்டே சிங்களக் குடியேற்றம் நடைபெறுகின்றது.

தமிழ் இனத்தை அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கும் செயல்கள் தீவிரமாக நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம், உடனடியாக நிறுத்தவேண்டும்; மேலும், தமிழர்களின் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்ள அனைத்துப் படையினரும் உடனடியாக விலக்கப்பட வேண்டும்;

மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றம் மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் சார்பாக மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகின்றது.

தங்களின் இந்த நடவடிக்கை வரலாற்றில் தமிழர்கள் அனைவராலும் நன்றியுணர்வோடு போற்றப்படும் என உறுதியாகக் கூறுகின்றோம்.

நன்றி.
வே. ஆனைமுத்து
பொதுச்செயலாளர்

Pin It