dravidar function kovaiபேராசிரியர் சுபவீ அவர்கள் தலைமையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்ற அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, அடுத்து வளர்கிற  தலைமுறைக்கு, திராவிடப்பள்ளி, கருஞ்சட்டைப் பதிப்பகம் போன்ற துணை நிறுவனங்கள் மூலமாகத் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கக் கொள்கைகளைக் கற்றுக்கொடுக்கும் பெரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோழர்களோடு, அதே பெரியாரியல் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்கள் மாணவர்களிடம் தொடர்ச்சியான பிரச்சாரமாகச் செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போது இருக்கிற ஒரு சமூக அரசியல் சூழல் எப்படி இருக்கிறதென்றால், திராவிட இயக்கக் கருத்துகளைச் சித்தாந்த ரீதியாக இளைய தலைமுறைகளிடத்தில்  அந்நியப்படுத்தும் வேலையைச் சங்பரிவார் ஆர்எஸ்எஸ் கும்பல் நீண்ட காலமாகத் தொலைநோக்குடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு தளங்களில் அவர்கள் இயங்குகிறார்கள். ஒருபக்கம் சமூகத் தளத்தில் திராவிட இயக்கம் ஏற்படுத்தியத் தாக்கத்தை, எழுச்சியை எதிர்த்து, எதிர்க்கருத்தைப் பதிவு செய்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற,  வேகம் காட்டாமல் மிகவும் நிதானமாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான முயற்சியைப் பார்ப்பனர்கள் ஆர்எஸ்எஸ் மூலமாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.   

இந்தச் சூழ்நிலையில் பெரியாரியலை, திராவிட இயக்கக் கருத்துகளை வருகிற இளம் தலைமுறையிடம் எடுத்துச் சொல்லும் பணியில் நாம் மிகப் பலவீனமாக இருக்கிறோம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். எதிரி எப்படி வேகமாகச் செயல்படுகிறானோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் அதைவிட வேகமாக நாம் இளைஞர்களிடம் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை, கொள்கைகளை, கோட்பாடுகளை இந்த மண்ணில் நடந்தப் புரட்சிகளை, போராட்டங்களைச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அதற்கு வலிமை என்பது மிக முக்கியமாகும்.

பேராசிரியர் அண்ணன் சுபவீ அவர்களுடைய வழிகாட்டலில் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து நகர ஒன்றியப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் சென்று திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என்கிற நம்முடைய மரபு வழிகளில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டுபோய்ச் சேர்ப்பது; இன்னொரு பக்கம் வளர்ந்திருக்கிற அறிவியலின் வழியாக சமூக வலைத்தளங்களில் முழுமையாகப் பெரியாரைக் கொண்டு போய்ச் சேர்ப்பது; தி.மு.கழகத்தின் ஆட்சிப் பணிகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்கிற வேலைத் திட்டத்தோடு தமிழ்நாடு திராவிடர் கழகம் உளப்பூர்வமாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறது.

- கா.சு.நாகராசன், தலைவர், தமிழ்நாடு திராவிடர் கழகம்

Pin It