அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணையலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது - இது சொல்!
2024 ஆகஸ்ட் 1 ஆம் நாள் - "திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம்" என்று ஒரு புதிய அமைப்பு உருவாகி உள்ளது! - இது செயல்!
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு என்று பல்வேறு சங்கங்கள் உள்ளன. எனினும் அவை அவர்களின் தொழில், கல்வி, உரிமை சார்ந்த சங்கங்கள். இப்போது தொடங்கப்பட்டு இருப்பதோ, சமத்துவம், சமூக நீதி, பெண்ணுரிமை போன்ற திராவிடக் கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய சங்கம்!
ஓரிரு மாதங்களுக்கு முன்பு, சென்னைக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர், வழக்கறிஞர் அருள் மொழியைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கிறது! பிறகு அது மெதுவாக உருப்பெற்று, வலுப்பெற்று இன்று சங்கமாக ஆகியிருக்கிறது!சென்னை, திருச்சி, சேலம், திருவாரூர், மன்னார்குடி, ராசிபுரம், திருவண்ணாமலை முதலிய ஊர்கள் பலவற்றிலிருந்து 84 ஆசிரியர்கள் சென்னையில் 1-8-2024 அன்று மாலை கூடி முடிவெடுக்கத் திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். அவர்களுள், ஏறத்தாழ 20 பெண் பேராசிரியர்கள் உள்பட, 62 பேர் அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடியிருந்தனர்.
அந்தக் கூட்டத்திற்குக் கருத்துரைஞர்களாக, வழக்கறிஞர் அருள்மொழி, மருத்துவர், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், நான் என மூவரும் அழைக்கப்பட்டு இருந்தோம். ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தின் இறுதியில், புதிய அமைப்புக்கு, "திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம்" என்று பெயரிடப்பட்டு, 9 பேர் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக் குழுவும் உருவாக்கப்பட்டது!
தமிழ்நாடு எங்கும் உள்ள, திராவிடக் கருத்தியலில் ஈடுபாடு கொண்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை இச்சங்கத்தில் இணைப்பது என்றும், சமத்துவம், சமூக நீதி உள்ளிட்ட கோட்பாடுகளை மாணவர்களிடமும், மக்களிடமும் பரப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அருள்மொழி உள்ளிட்ட எங்கள் மூவரையும் வழி நடத்துனர்களாக அமைப்பினர் ஏற்றுக் கொண்டனர்.
நூற்றுக்கும் குறைவான ஆசிரியர்களோடு தொடங்கப்பட்டிருக்கும் இச்சங்கம், அடுத்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு, ஒரு பெரிய மாநாட்டினை நடத்த வேண்டும் என்னும் விருப்பமும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இன, மொழி உரிமைகளை நிலைநாட்ட, சாதி - ஆணாதிக்கம் போன்ற ஒடுக்கு முறைகளுக்கு எதிரான சமத்துவத்தைப் பரப்ப, இச்சங்கம் இன்று முதல்அடியை எடுத்து வைத்திருக்கிறது. நீண்ட, நீளவிருக்கும் வரலாற்றின் முதல் அடி அது!
- சுப.வீரபாண்டியன்