எழுபத்தி ஏழாம் விடுதலை நாள் விழாவையொட்டி, தில்லியில் மோடியும், தமிழ்நாட்டில் தளபதியும் கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றியதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஒன்பது ஆண்டுகளாக தில்லியைக் கையில் வைத்திருக்கும் மோடி, தான்செய்த சாதனைகளைப் பட்டியலிடாமல், அடுத்த ஆண்டு சாதனைப் பட்டியலை வெளியிடுவேன் என்றும், அதற்கு அடுத்து வரும் தேர்தலில் மேலும் ஒரு வாய்ப்பு தருமாறுமக்களை கேட்கிறார். இது நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையா? தேர்தல் பரப்புரையா? இதுகாறும் எந்த உருப்படியான சாதனையும் செய்யவில்லை என்பதை அப்பட்டமாகக் காட்டும் உரை என்றும் கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தளபதி ஸ்டாலின் கூறுகையில், மகளிர் கட்டணமில்லா பயணம், 153 ஒப்பந்தங்கள் கையெழுத்து, சிறுகுறு தொழில் தொடக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஏற்றுமதி/இறக்குமதி உயர்வு, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காப்போம் 48, நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் போன்றவற்றைப் பட்டியலிட்டார்.
விடுதலைப் போராட்ட வீரர்களையும், நிகழ்வுகளையும் நினைவுக்கூர்ந்த முதலமைச்சர், முழுமையான சுகந்திரம் நோக்கிச் செல்ல மக்களிடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க சமத்துவ நாடு அமைய மக்களுக்கு சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
ஆனால் 10 ஆண்டுகளாகத் கொடியேற்றும் மோடி அவர்களோ, இன்னமும் காங்கிரசைக் குறை கூறத் தவறவில்லை. ஊழல், வாரிசு அரசியல், சந்தர்ப்பவாதம் என்று பேசுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்குபவர்கள் பாஜக-வில் இணைந்தவுடன் புனிதராக்கும் திட்டம் குறித்து பிரதமர் பெருமை கொள்ளலாம். ஆனால் இரபேல் ஊழல் குற்றச்சாட்டு, PM care நிதியின் மர்மம், பெருநிறுவன கடன் தள்ளுபடியும், பாஜகவிற்கு பெருநிறுவனம் தரும் நன்கொடையும் எனப்பல வெளிப்படையான அய்யங்கள் அப்படியே இருக்கின்றன. பாஜகவின் வாரிசு அரசியலின் பட்டியல் ஏனையக் கட்சிகளை விடப் பெரியதாக இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க யாருடனும் கூட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் பேரம் எனப் பல சந்தர்ப்பவாதம் செய்யும் கட்சியில் இருந்து தான் பிரதமர் இவ்வாறு பேசுகிறார்.
80 விழுக்காட்டுக்கும் 20 விழுக்காட்டுக்கும் ஆன தேர்தல் என்று கூறிய கட்சிதான் பாஜக. இதில் காங்கிரசை எதிர்ப்புறம் வைக்க, ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் அரசாக இருந்ததாகக் கூறுகிறார் பிரதமர். தமிழ்நாடு முதலமைச்சரோ வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்; ஒற்றுமையில் மகிழ்ச்சி காண்போம் என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
தேசம் முதன்மை எனக் கூறும் பிரதமர், அவர் ஆட்சியில் வேலையின்மை அதிகரித்து இந்தியர்கள் தவிக்கின்றனர். மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனிடையே முன்னேற எந்தப் பாதையும் சுட்டிக்காட்டாத பிரதமர், 2047இல் வளர்ந்த நாடாக மாறும் எனக் கூறுகிறார்.
திராவிடக் கருத்தியலான சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சியை முன்வைத்து அரசாளும் திராவிட மாடல் அரசை வழிநடத்தும் தளபதியோ, வளர்ச்சி என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல. பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஒருசேர வளர்வதே முழுமையான வளர்ச்சி எனத்தனது அரசின் பாதையைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
ஆக இந்த உரைகளில் இருந்தே தெளிவாகத் தெரிவது யாதெனில், ஆரியக் கருத்தியல் மக்கள் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பிணியாகிறது, திராவிடம் மருந்தாக இருக்கிறது.
- மதிவாணன்