“சொத்துகளை எல்லாம் நாட்டிற்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சாதியத் தலைவராம்..... தன் சொத்தைப் பாதுகாக்க எழுபது வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார் புரட்சியாளராம்!” என்று ஒருவர் அண்மையில் கேலி பேசி இருக்கிறார். இதன் பொருள், தேவர் தியாகி என்பதும் பெரியார் சுயநலவாதி என்பதும்தான்!

ஈரோடு இடைத்தேர்தலின் போது, களத்தில் முதலில் நின்றதால் முதலியார் என்றும் (பாவாணருக்கே தெரியாத மொழியியல் ஆய்வு இது), அருந்ததியர்கள் வந்தேறிகள் என்றும் பேசியவரும் இவர்தான்! அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதஉள் ஒதுக்கீட்டைக் கருணாநிதி எப்படி கொடுக்கலாம் என்று நியாயம் கேட்ட வரும். OBC என்பதற்கு outside the backward class என்று விளக்கம் சொன்ன அறிஞரும் இவர்தான்!

பெரியாருக்கும், பசும்பொன் தேவருக்கும் இப்போது என்ன முரண்பாடு வந்தது? முதலியார்களுக்கும், அருந்ததியர்களுக்கும் அப்படி என்ன மோதல் நிகழ்ந்து விட்டது? இவை குறித்து எல்லாம் ஏன் இப்படிச் சிலர் இப்போது பேசுகின்றனர்?periyar and muthuramalingamஇவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகளோ, வெறும் உளறல்களோ இல்லை. திட்டமிட்டு, எஜமான விசுவாசத்திற்கு ஏற்ற, சாதிய அரசியலை வளர்த்தெடுக்கும் சதி! தோழர் ஜீவசுந்தரி எழுதியிருப்பதைப் போல, ஒருவர் யாருக்கு வாலாட்டுவது என்பதை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் தேவையற்று பெரியாரையும், அருந்ததியர்களையும் இழிவுபடுத்திப் பேசும்போது, எதிர்வினை ஆற்ற வேண்டிய கட்டாயம் வந்தே தீருகிறது!

பெரியாரையும், திராவிடத்தையும் எதிர்ப்பது என்பதுதான் பார்ப்பனியத்தின் அடிப்படைப் பாடம். இந்த இரண்டு சொற்களும்தான் பார்ப்பனியம் இங்கே கோலோச்சுவதற்குத் தடையாக இருக்கின்றன! ஆதலால் அவற்றைக் கடுமையாகத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள், அவ்வப்போது தமிழ்த் தேசியம் பேசுவோரையும் பயன்படுத்திக் கொள்கின்றன. சிலம்புச் செல்வர் ம. பொ.சி தொடங்கி, இன்று வரையில் ஆள்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, பெரியாரை, திராவிடத்தை எதிர்ப்பதற்கு ஆர் எஸ் எஸ் க்கு வேறு வேறு ஆள்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரத்தின் போது, முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள்தான், முத்துராமலிங்கத் தேவர் அவர்களைக் கைது செய்தார். அப்போது இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமின்றி, இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் ஒரு பெரும் மோதல் ஏற்பட்டது. அந்தக் கலவரம் குறித்து, மிக விரிவாக, நெல்லை, மனோண்மணீயம் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த மணிக்குமார் அவர்கள் விரிவான நூல் ஒன்றை, ஓர் ஆவணம் போல, ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நூலைப் படித்துப் பார்த்தால் காமராசருக்கும், தேவருக்கும் இடையில் நடந்த விவாதங்கள் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும்!

உண்மை நிலை இப்படி இருக்க, காமராசரையும், தேவரையும் ஒப்பிட்டுப் பேசாமல், அவர்களுக்கு இடையில் இருந்த முரண்பாடு பற்றி வாய் திறக்காமல், பெரியாரையும் தேவரையும் மோத விடுவது எதற்காக?

சாதி அரசியலை முன்னெடுத்து, தேர்தலில் நாடார், தேவர் இரண்டு சமூகத்தினரின் வாக்குகளையும் தாங்கள் பெற வேண்டும் அல்லது பாஜகவிற்கு அவற்றை மடை மாற்ற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற் காகத்தான்!

இந்தப் பிழைப்பு பற்றிப் பாரதியார் தன் பாடல் வரி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அறிந்தவர் அறிவாராக!

சுப.வீரபாண்டியன்

Pin It