மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை, இராஜஸ்தானில் ஓட்டக இறைச்சிக்குத் தடை, பசுவைத் தேசிய மாதாவாக ஏற்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகள், கருத்துகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

cow 222இதில் இரண்டு செய்திகளைப் பார்க்க வேண்டும். முதலாவது உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் உண்ணும் மாட்டிறைச்சி, விலை குறைவாக இருப்பதுடன், புரதச் சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. மாட்டிறைச்சி உண்ணும் இந்த உழைக்கும் மக்களில் மிகப்பெரும்பாலோர் இந்துக்கள். ஆகவே மாட்டிறைச்சிக்குத் தடை என்பது இந்து மக்களுக்கான தடை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது, பசுவைக் கொல்லக் கூடாது என்று, இன்று பார்ப்பன சக்திகள் சொல்லுவது ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவத்தைக் காப்பதற்காக.

ஆரிய வேதங்களில் மாட்டிறைச்சி, குறிப்பாகப் பசு மாட்டிறைச்சியை அதிகமாக விரும்பிச் சாப்பிட்டவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரிய யாகங்களில் பசுக்களை நெருப்பில் போட்டு எரிப்பது உண்பதற்குத்தானே. 4 வாரங்களுக்கு முன்னால் புதுக்கோட்டையில், ஜெயலலிதா விடுதலைபெற வேண்டும் என்று நடத்திய யாகத்தில் பசு மாடுகளை முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது யாகத்தீயில் பசுவைப் போட முடியாது என்பதனால், ஓர் அடையாளத்திற்காக இதைச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில் 18ஆம் பிரிவு பசுக்களைக் கொல்லக் கூடாது என்று சொல்வதாக சங் பரிவார், தினமணி தலையங்கம் போன்றவை கூறுகின்றன. அது தவறு.

நவீன வேளாண்மை குறித்த முயற்சியில் பசுக்கள், கன்றுகள், பாரம் இழுக்கும் கால்நடைகள் ஆகியவைகளைக் கொல்வதைத் தடுக்க முயற்சி செய்ய அப்பிரிவு வழிகாட்டலில் கூறி இருக்கிறது. இதில் பசுவை மட்டுமே கொல்லக்கூடாது என்று மதக்கண்ணோட்டத்தில் திருத்த வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் சேக்கோவிந்த தாஸ், சிவன்லால் சக்சேனா கொண்டுவந்த திருத்தத்தை நிர்ணய சபை நிராகரித்துவிட்டது. இங்கே மதச்சாயம் பூசக்கூடாது. மாட்டுக்கறியின் தொடர்பை விடமுடியாமல்தான் இன்று பார்ப்பனர்கள் அதன் பாலையும், மூத்திரத்தையும் (கோமியம்) சாப்பிடுகிறார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார். மாடு - ஒட்டகம் - தேசமாதா பசு என்றெல்லாம் சொல்வதும் தடை செய்வதும் உண்மையில் மக்களுக்கான ஆட்சியாக இல்லை. இது மாட்டிறைச்சி உண்ணும் இந்துக்களுக்கு எதிரான, சனாதன ஆரியப் பார்ப்பன இந்துத்துவாவின் அவமானகரமான இழிவு - இந்தப் புண்ணிய பூமியில் மட்டுமே நடக்கும்.

 - விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It