ஏப்ரல் 14 - அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்

மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, அவைகளைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும் பலமாகவும் இலட்சியங்களைக் கடைபிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை, முட்டாளின் உளறல் என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கார்.

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல, பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்ராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்ராயம்தான் எனக்கும் இருந்து வந்தது-. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்ராயம் கொண்டவர்களாக இருந்துவந்தோம். சந்தர்ப்பம் கிடைத்த போது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வதும் உண்டு.

டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது.

(டெல்லி பகார்க்ஞ்சில், 15.2.1959-ல் பெரியார் உரை - விடுதலை, 22.2.1959)

Pin It